Sunday, July 10, 2011

மியாவ்



வாடா  மியாவ்.

இப்படிதான், என் செல்லப் பூனை குட்டியை  நான் அழைப்பது வழக்கம்.

வீட்டில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால், என்ன செய்வது என்று விழி பிதுங்கியபோது, பூனை ஞாபகம் வந்தது.

பூனையை வளர்த்தால், எலிகள் காணாமல் போய்விடும் என நண்பர் ஒருவர் ஆலோசனை சொல்ல, பூனைக்காக தேடி அலைந்தேன்.

அப்போதுதான், பக்கத்து வீட்டில், பெண் பூனை ஒன்று அழகான 6 குட்டிகளை ஈன்றது காதில் விழுந்தது. அந்த வீட்டிற்கு சென்று,  அதில் இருந்து ஒரு  அழகான பூனை குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

பூனை குட்டியை பார்த்ததும், வீட்டில் குழந்தைகள் எலலாருக்கும் புதிய குதூகலம் பிறந்தது. பூனைக்குட்டியை ஆசையுடனும் அன்புடனும் தடவி மகிழ்ந்தனர் குழந்தைகள்.

புதிய வரவு பூனைக்குட்டிக்கு வீட்டில் ராஜமரியாதை கிடைத்தது.

சிறிய தட்டு ஒன்று ஏற்பாடு செய்து, அதில் பூனைக்குட்டிகாகவே, ஸ்பெஷல் பாலை ஊற்றி வைத்தோம்.

பாலை கண்டதும், பூனைக்குட்டி ஓடோடி வந்து அருந்தி மகிழ்ந்தது. இந்த காட்சி மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.

இப்படிதான், என்னுடைய செல்லப் பூனையுடனான தொடர்பு எனக்குள் வளர்ந்தது.

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும், முதலில் நான் கேட்பது, பூனைக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தீர்களா என்றுதான்.

நான் வீட்டிற்கு வரும் செய்தியை எப்படியோ அறிந்து, வாசற்படிக்கு ஓடோடி வந்து  என்னை வரவேற்கும் என்னுடைய செல்ல மியாவ்.



நான் மட்டுமல்ல, வீட்டில் உள்ள அனைவரும் பூனைக்குட்டிக்கு வைத்த பெயர் மியாவ்தான்.

இப்படி மியாவ் என்று நாங்கள் அன்புடன் அழைத்து பாசத்துடன் வளர்த்த பூனை,  குட்டியில் இருந்து மௌள மௌள, வளர்ச்சியை நோக்கிச் சென்றது.
அதற்கு ஏற்றாற்போல், அதற்கு மாமிச உணவுகளும் அளித்தோம்.

வீட்டின் மிக முக்கிய அங்கத்தினர்களில் ஒன்றாக வளர்ந்த எங்கள் மியாவ், எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு ஜீவன்.

வீட்டில் எலித் தொல்லைகள் தீர்ந்ததோ இல்லையோ, பூனைக்குட்டி மீதான அன்பு மட்டும் குறையவேயில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்.

வாசல்வரை ஓடோடி வந்து, என்னை வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் என்னுடைய செல்ல மியாவ் இன்று எங்களுடன் இல்லை.

குளிருக்கு போர்வையை போர்த்திக் கொண்டு எனது கட்டிலில் அலாதியான உறக்கத்தை போடும் மியாவ் இன்று உயிருடன் இல்லை.

என் மீதும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பை வாரிப் பொழிந்த என் அன்பு மியாவ்,  இன்று எங்களுடன் இல்லாதது, எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

மியாவ்விற்கு நாங்கள் அப்படி ஒன்றும் மிகப் பெரிய நன்மையை செய்து விடவில்லை.

ஆசையுடன் வளர்த்தோம். பாசத்துடன் பாலை ஊற்றினோம்.

பசிக்கு உணவாக சிறிது மாமிசத்தை அளித்தோம்.
அவ்வளவுதான். இந்த சிறிய செயலுக்காக, மியாவ் எங்கள் மீது செலுத்தி அன்பு அளவிட முடியாதது.



இப்படிப்பட்ட அன்பை, அந்த வாயில்லா ஜீவன் எங்கள் மீது செலுத்தியது, எங்கள் நினைவுகளில் இருந்து  எப்படி நீங்க முடியும். 

வழக்கம் போன்று, ஒருநாள் இரவு திடீரென, வெளியே சென்ற மியாவ், இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவே இல்லை.

என்ன ஆயிற்று என கவலையில் நாங்கள் பல இடங்களில் தேடினோம். வெளியே சென்றாலும் எப்படியும் வீடு வந்துவிடும் மியாவ், இரண்டு நாட்களாக வராதது எங்களை கவலையில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிலையில்தான், வீட்டின் வாசற்படியில் மியாவ்வின் சத்தம் கேட்டது. ஓடோடி சென்று  கதவை திறந்து பார்த்தபோது, பலத்த தீ காயத்துடன், மியாவ் துடித்துக் கொண்டிருந்தான்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வெளியே சென்ற மியாவ், எங்கேயோ நடந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டது புரிந்தது.

என் செல்ல மியாவ் தீக் காயங்களுடன் துடித்த காட்சியை கண்டபோது,  அந்த வேதனையை நானே அனுபவிப்பது போன்று இருந்தது. என் கண்களில்  தானாகவே கண்ணீர் அலை அலையாக கொட்டியது.

உடனே, மியாவை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ,  தேவையான மருத்துவ உதவிகள் செய்தோம்.

இப்படி இரண்டு நாட்கள் தொடர்ச்சி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களிலும், மியாவ் எதையும் சாப்பிடவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் காலையில் வழக்கம்போல், நான் அலுவலகத்திற்கு பணிக்கு கிளம்பியபோது, மியாவை பார்த்தேன்.  அதன் தலையை ஆறுதலாக கைகளால் தடவி விட்டேன்.



பின்னர் பணிக்கு சென்று வீட்டேன்.

இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியபோது, ஓர் அதிர்ச்சி செய்தி எனக்காக காத்திருந்தது.

வீடு அமைதியாக இருந்தது.

ஆம்.

நான் ஆசை ஆசையாக, செல்லமாக வளர்த்த என் மியாவ்,  சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டது.

வீட்டில் அனைவரும் அமைதியாக இருந்தனர். 

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் உறங்கிக் கொண்டிருந்தது.
குழந்தைகள் முகத்தில் சோகம்.

மியாவ்வின் இறுதி நேரம்.

அது எனக்காக, என் வருகைக்காக காத்திருந்தது என்ற செய்தி வீட்டில் என் தாயார்  சொன்னபோது, எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

என்ன ஒரு பாசம்.

அந்த செல்ல பிராணிக்கு நான் அப்படி ஒன்றும் செய்துவிடவில்லை.

கொஞ்சம் பால். கொஞ்சம் மாமிசம் இதுதான் அளித்தேன்.

அவ்வவ்போது, பாசத்துடன் அதன் தலையை தடவி விட்டேன். அவ்வளவுதான்.

இதற்கு போய், இப்படி ஒரு அன்பை தன்னுடைய இறுதி நேரத்திலும், மியாவ் என் மீது செலுத்தியதை அறிந்து என் கண்கள் கலங்கின. .

மியாவ்வை வீட்டில் இருந்த தோட்டத்தில் குழித் தோண்டி புதைத்தோம்.

அன்றிரவு வீட்டில் யாருமே உணவு சாப்பிடவில்லை.
காரணம். வீட்டில் ஒரு அங்கத்தினர் குறைந்தால், உணவு பக்கம் யாருடைய கவனமும் செல்லவில்லை.

ஒருநாள் இல்லை, பல நாட்கள் எங்கள் மன பாரம் குறையவேயில்லை.

இப்போது நினைத்தாலும், மியாவ்வின் சேட்டைகள்  என் மனக்கண் முன்பு வந்து செல்கின்றன. அது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

அது,  துள்ளி விளையாடிய காட்சிகள் எங்கள் கண்களுக்கு முன்னால் வந்து செல்லும்போது, சோகம் கரைந்து போய் விடுகிறது. 




மரணத்திற்கு  பிறகும்  ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் உண்டு.

அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு.

அதனால்தான், என் செல்ல மியாவ்மிற்கும் சொர்க்கத்தில் இடம்  கிடைக்க வேண்டும் என்று நான் நாள் நாள்தோறும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது உண்டு.

என் வாழ்க்கையில் மறக்க முடியாது ஒரு ஜீவன் என் செல்லப்பூனை மியாவ்.

அதற்கு சொர்க்கத்தில் இடம் கிடைப்பது உறுதி.
காரணம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதர்கள் மீது அன்பை செலுத்திய வாயில்லா ஜீவனை இறைவன் நிச்சயம் விரும்புவான்.

சொர்க்கத்தில் இடம் அளிப்பான்.




ஓ, மனிதர்களே,  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதர்களை நேசியுங்கள்.
பாசத்துடன உலகத்தை வலம் வாருங்கள். 

என் மியாவ் என் மீது செலுத்திய உண்மையான அன்பைபோல்.

அப்போது நிச்சயம் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி துள்ளி விளையாடும்.

இப்படி எனக்கு நானே சொல்லிக் கொள்வது உண்டு.
என்ன மியாவ், உண்மைதானோ.

உன் மூலம் நல்ல ஒரு செய்தியை உலகிற்கு சொல்லி விட்டேன்.

அதற்காக உனக்கு என்னுடைய நன்றிகள்.

மியாவ்,  உனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு. என் மீது நீ செலுத்திய உண்மையான அன்பிற்காக அல்ல.

மனிதர்களிடம் எப்படி உண்மையான அன்பை செலுத்த வேண்டும் என்பதை உன் செயல்களின் மூலம் நீ நிரூபித்ததற்காக.

மனிதர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உன் செயல்களின் மூலம் நீ காட்டியதற்காக.

மியாவ்.... மியாவ்....மியாவ்... நீ. என் இறுதி காலம் உள்ள வரை மறக்க முடியாது ஓர் வாயில்லா ஜீவன்.

வாழ்க்கையின் தத்துவங்களை மிக எளிதாக சொல்லித்தந்த ஜீவன்,  என் மியாவ்.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

3 comments:

ragoths said...

fantastic story

Anonymous said...

Unmayil Kankalanga Vaithathu!
Ennai satru en chella Miyaw ninaivukku kondu chendrathu. Aam enakkum ipadipatta "Pusy","Bujju" pondra Miyawkkal ennudan vazhnthu maraintha suvadugal undu. Athan ninaivaka tharpothu en veetil 20 Miyawkkal ullana! Chella piraniyidam irunthu naam katrukolla niraya vishayam undu. Aathai Manithargal follow panna vendum!

mani1980 said...

Unmayil Kangal Kalangina!
Ennudan vazhnthu marainth "Pussy", "Bujju" ninaivu vanthathu. Ivaigal ninaivaga tharpothu en veetil 20 Miyawkkal Ullana.

Chella Piranigalidam irunthu Manithargal Kattru kolla niraya ullathu enbathai Unarthiyamaiku Nandri!

Manikandan.P
News Reporter