Wednesday, September 7, 2016

ஏடிஎம் ஆபத்து.....!

ஏடிஎம் ஆபத்து.....!



கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தேன்.

அதில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்று கிழிந்து இருந்தது.

எனவே, அருகில் இருந்து ஸ்டேட் வங்கிக்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து, சார்உங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்தபோது, ஒரு தாள் கிழிந்து இருந்தது.

தயவு செய்து மாற்றி தாருங்கள் என்றேன்.

அந்த அலுவலர் என்னை மேலும் கீழும் ஆச்சரியமாக பார்த்தார்.

நீங்கள் பணம் எடுத்ததாக கூறும் ஏடிஎம் எந்திரம் கடந்த சில நாட்களாகவே இயங்கவில்லை.

எப்படி அந்த எந்திரத்தில் இருந்து உங்களால் பணம் எடுக்க முடியும் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

சார், நான் பணம் எடுத்ததற்கான ஆதாரம் இதே அந்த ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எனக்கு வந்த ரசீதைப் பாருங்கள் என கூறி, அந்த ரசீதை அலுவலரிடம் காண்பித்தேன்.

அதை வாங்கிப் பார்த்த அவர், எப்படி பணம் எடுக்க முடியும் என்ற  ஒரே கேள்வியை திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுகொண்டே இருந்தார்.

கிழிந்த நோட்டை வேண்டுமானால் மாற்றி தாருகிறேன். ஆனால், நீங்கள் அந்த மையத்தில் பணம் எடுத்ததாக மட்டும் பொய் கூறாதீர்கள் என்றார்.

அய்யா, நான் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளன். அப்படி பொய் சொல்லி உங்களிடம் கிழிந்த நோட்டை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி என்னுடைய ஐ.டி. கார்டை அவரிடம் காண்பித்தேன்.

அப்போதும், அவர் நம்ப தயாராக இல்லை.

அந்த ஏடிஎம் எந்திரம் பழுது என்றே சொல்லிகொண்டே இருந்தார்.

பிறகு, கிழிந்த நோட்டை மாற்றி கொடுத்தார்.

இது எனக்கு நேர்ந்த அனுபவம்.

இதேபோன்ற ஒரு அனுபவம் என் நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்டது.


ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப்.வில் பணியும்  அந்த நண்பர் உயரதிகாரியும் கூட.

அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோது, நான்கு ஆயிரம் ரூபாய் தாள்கள் போலி தாள்களாக வந்துவிழுந்தது.

வணிக நிறுவனத்திற்கு சென்றபோதுதான், இந்த விவரம் அவருக்கு தெரிந்தது.

உடனே, வங்கிக்கு சென்று பணத்தை மாற்றி தரும்படி கேட்டிருக்கிறார் நண்பர்.

அந்த அதிகாரி பணத்தாள்களை வாங்கி, நான்கிலும் பேனாவில் கோடு போட்டு, நண்பரிடமே திருப்பி தந்திருக்கிறார்.

பணத்தாள்களை மாற்றி தரும்படி கேட்டால் இப்படி, கோடு போட்டு மீண்டும் அதை என்னிடமே தருகிறீர்களே என நண்பர் கேள்வி எழுப்ப, உண்மையில் உங்களை போலீசில் பிடித்து தந்திருக்க வேண்டும்.

ஆனால், நான் அப்படி செய்யவில்லை. பிழைத்து போங்கள் என அந்த வங்கி அதிகாரி கூற, நண்பருக்கு கோபம் வந்தது.

உடனே, போலீசை இப்போதே கூப்பிடுங்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

போலீஸ் வரும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன் என கூற, அந்த வங்கி அதிகாரிக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது.

மத்திய பாதுகாப்பு படையில் உயரதிகாரியாக இருக்கும் என்னிடமே, இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றால், சாதாராண மக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய, பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து நான்கு ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றி தந்து இருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தை நண்பர் சொன்னபோது,  அதிர்ச்சியும், சிரிப்பும் ஏற்பட்டது.

ஏடிஎம் மையங்களில் எப்படி போலி பணத்தாள்கள் வைக்கப்படுகின்றன.

அதை எடுக்கும் மக்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறார்கள்.

மாற்றி தரும்படி வங்கி அதிகாரிகளை அணுகும்போது, அவர்களே சந்தேகத்திற்கு உள்ளாகி வேதனைகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்   என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு வங்கி நிர்வாகங்கள் எப்படி தீர்வு காணுமோ என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

அப்படி, தீர்வு காண வங்கி நிர்வாகிகள் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற ஆபத்துகள் தொடரவே செய்யும்.

பொதுமக்கள் பாதிப்பு அடைவது தொடர்கதையாகும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: