முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளுக்கு
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கடும் கண்டனம்
மத சமூகங்களுக்கு இடையே சிறந்த புரிதலுக்கு அழைப்பு
புளோரிடா, அக்.23- முஸ்லிம்களாக வாழ்வதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால் தான் மிகவும் சோர்வடைந்துவிட்டதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கொய்னோனியா வழிபாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்து குர்ஆனின் வசனத்தை மேற்கோள் காட்டினார்.
பில் கிளிண்டன் வேதனை :
புளோரிடாவின் புரோவர்ட் கவுண்டியில் உள்ள ஹாலிவுட்-பெம்ப்ரோக் பார்க் பகுதியில் அமைந்துள்ள கொய்னோனியா வழிபாட்டு மையத்தில், அக்டோபர் 20, 2026, செவ்வாய்க்கிழமை மாலை, "பல்வேறு நம்பிக்கைகள் ஒரே புளோரிடா” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன், முஸ்லிம்களாக இருப்பதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால் தான் மிகவும் சோர்வடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
திருக்குர்ஆன் வசனம் மேற்கோள் :
இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் தனது மகள் செல்சியா கொண்டிருந்த ஆர்வத்தை நினைவு கூர்ந்த கிளிண்டன், தனது 15 வயதில் செல்சியா குர்ஆனை முழுமையாகப் படித்ததாகவும், பின்னர் தன்னையும் அதைப் படிக்க ஊக்குவித்ததாகவும் கூறினார். மனிதகுலம் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே வெவ்வேறு மக்களாகவும் கோத்திரங்களாகவும் படைக்கப்பட்டது என்று விளக்கும் சூரா அல்-ஹுஜுராத்தின் 13-வது வசனத்தை தனது உரையில் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். இன்னும் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்; சூழ்ந்தறிபவன்" என்ற வசனத்தை அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
===================
"முஸ்லிம்களாக இருப்பதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்"
===================
சமூகங்களுக்கு இடையே பகைமையைக் காட்டிலும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட கிளிண்டன் அந்தப் பகுதியைப் பயன்படுத்தினார். மேலும் தனது மகள் செல்சியா தனக்கு அந்த வசனத்தை அறிமுகப்படுத்தியதை கிளிண்டன் நினைவு கூர்ந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் இந்த உரை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment