முஸ்லிம் மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்
தமிழ்நாடு அரசின் சார்பில் அறிமுகம்....!
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கிடைக்கும்.....!!
சென்னை, செப்.07- ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு ஒரு புதிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர உதவும். இதன் மூலம் ஒரு முஸ்லிம் மாணவருக்கு 36 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும்.
ஒன்றிய அரசு திடீர் நிறுத்தம் :
முஸ்லிம் மாணவர்களுக்கு ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதனால் , ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்களின் வெளிநாட்டு கல்விக் கனவு சிதைந்து போனது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சென்று சேர்ந்து உயர்கல்வி பெறும் மாணவர்களின் கனவும் சிதைந்ததால், பல மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர். இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அதன்மூலம் தங்களுடைய உயர்கல்வி கனவு நிறைவேறும் என்றும் முஸ்லிம் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசு அறிமுகம் :
இந்நிலையில், தமிழ்நாடு அரசு முஸ்லிம் முதுகலை மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்குகிறது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்த அரசு உத்தரவின்படி, வெளிநாடுகளில் முதுகலை படிப்பைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் பத்து முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயனாளியும் ஆண்டுதோறும் 36 லட்சம் ரூபாய் வரை பெற தகுதியுடையவர்கள். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதுகலை படிப்பை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு அரசு இந்த புதிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அனுமதித்துள்ளது. இது மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய வெளிப்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
அரசாணை வெளியீடு :
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஆண்டுதோறும் பத்து முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடரத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு வக்பு வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு, 2025-26 நிதியாண்டிற்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள் :
உலக அளவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் 250க்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதுகலைப் படிப்பு, பொறியியல் மற்றும் நிர்வாகம், வேளாண் அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், கணக்கு நிதியியல், சமூக அறிவியல், சட்டம் உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்வி உதவித்தொகைப் பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் 60 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். மாணவர்களின் வயது 30 க்கு மேல் இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நான்கு தவணைகளின் படி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முஸ்லிம் மாணவர்கள் சார்பில் அளிக்கப்படும் மனுக்களை தமிழ்நாடு அரசின் உயர்நிலைக்கு குழு பரிசீலனை செய்து, தகுதியான மாணவர்களின் பெயரை தேர்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்