Thursday, September 11, 2025

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்....!

தலைநகர் டெல்லியை அதிர செய்த முஸ்லிம் யூத் லீகின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்  ஆர்ப்பாட்டம்....!

இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர்  பங்கேற்று உரை...!!  

புது டெல்லி, செப்.12-: பீகார் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் அஸ்ஸாமில் மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து,முஸ்லிம் யூத் லீகின் தேசியக் குழு சார்பில் டெல்லி   ஜந்தர் மந்தரில் "ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்" (லோக்தந்திர சன்ரக்ஷன் அணிவகுப்பு) என்ற பேரணி ஆர்ப்பாட்டம் 11.09.2025 வியாழன்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதியைக் கோரும் முழக்கங்களை எழுப்பினர். 

இ.டி.முஹம்மது பஷீர் தொடங்கி வைப்பு :

மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர் பங்கேற்று, பேரணியை தொடங்கி வைத்தார். முஸ்லிம் யூத் லீக் தேசியத் தலைவர் சர்பராஸ் அகமது இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் டி.பி. அஷ்ரப் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஷிபு மீரான் அறிமுக உரை நிகழ்த்தினார். தேசியச் செயலாளர் சி.கே. ஷாகிர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி,. சர்ச்சைக்குரிய பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தம் திட்டத்தை  (SIR)  தேசிய அளவில் விரிவுபடுத்துவதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு  எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். இந்த பிரச்சினையில் இ.யூ.முஸ்லிம் லீக் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் முஹம்மது பஷீர் திட்டவட்டமாக கூறினார். 

ஹாரிஸ் பீரான் எம்.பி. பேச்சு :

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்  இம்ரான் பிரதாப்கர்ஹி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு”க்கு எதிரான போராட்டத்திற்கு முஸ்லிம் யூத் லீகின் ஆதரவு,  ஒற்றுமைக்கான ஒரு ஊக்கமளிக்கும் தருணம் என்று பாராட்டு தெரிவித்தார்.  ஆர்ப்பாட்டத்தில்  முஸ்லிம் லீக் தேசிய செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், பங்கேற்று பேசியபோது, தேர்தல் ஜனநாயகம் எப்படி நாட்டில் சீர்குலைந்து வருகிறது என்பதை அழகாக பட்டியிலிட்டு பேசினார். 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் முகமது ஃபஹத், இளைஞர் காங்கிரசின் ஸ்ரீகிருஷ்ணா ஹரி, அகில இந்திய இளைஞர் பேரவையின்  ஹரிஷ் பாலா (AIYF), ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அமைப்பின் அனுராக் நிகம்,  ராஷ்டிரிய ஜனதா தளம்  உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த  நேஹா திவாரி, அகமது, அம்ரேஷ் குமார் தலைவர்கள் உரையாற்றினர்.

இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர்கள் ஆசிப் அன்சாரி, எம்பி முகமது கோயா, மீரட் மாநகராட்சி கவுன்சிலர் ரிஸ்வான் அன்சாரி, மற்றும் இளைஞர் லீக் தலைவர்கள் சஜ்ஜாத் உசேன் அக்தர், பி.பி. அன்வர் சதாத், ஆஷிக் செலாவூர், செயலாளர்கள் அசாருதீன் சவுத்ரி மற்றும் சாஜித் நடுவன்னூர், எம்.எஸ்.எஃப் தேசியத் தலைவர் பி.வி. அஹ்மத் சாஜு மற்றும் பொருளாளர் அதீப் கான் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று  உரையாற்றினர். வாக்காளர் சிறப்பு திருத்தம் மோசடிக்கு எதிரான பிரச்சாரம், பீகார் மாநிலத்தில் மட்டுமல்லாமல்,  அதற்கு அப்பால் தேசம் முழுவதும் போராட்டங்களுடன் தொடரும் என்று தலைவர்கள் அறிவித்தனர்.

பங்கேற்று சிறப்பிப்பு :

இந்த ஆர்ப்பாட்டத்தில் உ.பி. மாநில முஸ்லிம் லீக் தலைவர் மதீன் கான், டெல்லி மாநிலத் தலைவர் மௌலானா நிசார் அகமது, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மர்சூக் பஃபாகி, சையத் சித்திக் தங்ஙள்  மற்றும் எம்.பி. அப்துல் அஸீஸ், மாநில அளவிலான தலைவர்கள் முகமது குமைல் அன்சாரி, ஆஷிக் இலாஹி (உ.பி.), வழக்கறிஞர் அசாருதீன் சவுத்ரி, வழக்கறிஞர் முகமது சலீம் (ஹரியானா), ஷாஜாத் அப்பாஸி (டெல்லி) மற்றும் கே.எம்.சி.சி டெல்லி செயலாளர் பி.பி. ஹலீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

அத்துடன், மீரட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த முஸ்லிம் யூத் லீக் உறுப்பினர்கள் ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கமிட்டபடி ஜந்தர் மந்தரை வந்து அடைந்தனர்.  டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவிலிருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அணிதிரண்டதால், வட இந்தியாவில் முஸ்லிம் யூத் லீகின் வளர்ச்சி கட்சியின் வலிமையின் வெளிப்பாடாக இந்த அணிவகுப்பு அமைந்தது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: