காசாவில்
போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம்....!
உண்மையில் பலன் தருமா?
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
பாலஸ்தீன மக்களின் சொந்த பூமியான காசாவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களில் பலர், பாலஸ்தீனத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக உறுதிப்பட அறிவித்தனர். காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அதற்காக விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பல தலைவர்கள் வலியுறுத்தினர். ஒருபடி மேலாக கொலம்பிய நாட்டு அதிபர் பெட்ரோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுடன் கலந்துகொண்டு, இஸ்ரேலிலின் கொடூர செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதற்காக சர்வதேசப் படையை உடனே காசாவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கொலம்பிய அதிபரின் இந்த பேச்சு உலகம் முழுவதும் பெரும் அளவுக்கு வரவேற்பை பெற்றது. மலேசியாவும் இதேபோன்று கருத்தை தெரிவித்தது.
பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவமானம் :
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏறக்குறைய அனைத்து நாடுகளும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. கொலம்பிய நாட்டு பிரதிநிதிகள், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, அவையில் இருந்து வெளியேறியது உலக பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதன் காரணமாக வெற்று அரங்கத்திற்குள், பார்வையாளர்கள் யாரும் இல்லாத வகையில் இருந்த காலி இருக்கைகளைப் பார்த்துக் கொண்டு இஸ்ரேலிய பிரதமர் தனது உரை ஆற்ற வேண்டிய கட்டாய நெருக்கடி உருவானது. இதன்மூலம் இஸ்ரேலுக்கு எதிராக முழு உலகமும் தற்போது திரும்பி விட்டதை உணர்ந்துகொண்ட பெஞ்சமின் நெதன்யாகு,, தனது பேச்சின்போது பழைய கம்பீர தொனியில் பேச முடியவில்லை. சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகுவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் நாட்டிற்குள் அவர் நுழைந்தால், உடனே கைது செய்யப்படுவார் என்று பல நாடுகள் அறிவித்தால், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அவர் விமானம் மூலம், தனது வழக்கமான பயண திட்டத்தின்படி செல்ல முடியவில்லை. கைது பயம் காரணமாக சுற்றிவளைத்து நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி இஸ்ரேலிய பிரதமருக்கு ஏற்பட்டது.
முன்பு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, காசா போருக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவித்துவிட்டன. இதுவும் இஸ்ரேலுக்கு கிடைத்த ஒரு மரண அடி என்றே கூற வேண்டும். அத்துடன் பல நாடுகள், இஸ்ரேல் உடனான வணிக உறவுகளை துண்டித்துக் கொள்ள முன்வந்து அதை உறுதிப்பட அறிவித்துவிட்டன. இதனால், இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. இப்படி, பல்வேறு வகைகளில் இஸ்ரேல் மற்றும் அதன் ஒருசில நட்பு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா உலக மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகி மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு விட்டது. இஸ்ரேல் ஒரு சாத்தானின் நாடு என்று கூறும் வகையில் தற்போது உலகம் இஸ்ரேலை, ஒரு சாத்தானாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை கொன்று குவித்த பெஞ்சமின் நெதன்யாகு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய நபர் என்ற உண்மையை உலகம் தற்போது நன்றாக புரிந்துகொண்டு, காசா மக்கள் மீது தனது கருணை பார்வையை திருப்பி இருக்கிறது. இதன் காரணமாக, காசா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.
20 அம்ச அமைதித் திட்டம் :
அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் ரம்ப் முன்மொழிந்து. இந்த திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார். ஹாமாஸை நிராயுதபாணியாக்கக் கோரும் புதிய திட்டத்தை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆட்சி செய்யும் பாலஸ்தீன ஆணையம் (PA) மற்றும் சில பிராந்திய அரபு நாடுகளும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹமாஸ் அமெரிக்க திட்டத்தை "நல்ல நம்பிக்கையுடன்" ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அதேநேரத்தில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) குழு இந்த திட்டம் "பிராந்தியத்தை வெடிக்கச் செய்வதற்கான ஒரு செய்முறை" என்று கூறுகிறது.
காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேர்மையான மற்றும் அயராத முயற்சிகளை"வரவேற்பதாகவும், அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் அமெரிக்க அதிபரின் திறனில் அதன் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் பாலஸ்தீன ஆணையம் தெரிவித்துள்ளது. "காசாவிற்கு போதுமான மனிதாபிமான உதவிகளை வழங்குதல், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு விரிவான ஒப்பந்தத்தின் மூலம் காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, பிராந்திய நாடுகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் வலியுறுத்துகிறது" என்று பாலஸ்தீன வஃபா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை நிறுவுதல், போர்நிறுத்தத்திற்கான மரியாதை மற்றும் இரு தரப்பினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்தல், பாலஸ்தீனியர்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதையும் இடம்பெயர்வதையும் தடுப்பது, சர்வதேச சட்டத்தை மீறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நிறுத்துதல், பாலஸ்தீன வரி நிதிகளை விடுவித்தல், இஸ்ரேலியர்கள் முழுமையாக வெளியேறுவதற்கு வழிவகுத்தல் மற்றும் கிழக்கு ஜெருசலேம் உட்பட காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன நிலம் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல்" என்றும் அது அழைப்பு விடுத்தது. “இது ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் ஒரு நியாயமான அமைதிக்கு வழி வகுக்கும், சர்வதேச சட்டத்தின்படி பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்ல அண்டை வீட்டாருடன் இஸ்ரேல் அரசுடன் இணைந்து வாழும் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீன் ஆயுதக் குழு எதிர்ப்பு :
ஹமாஸுடன் இணைந்து போராடும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான PIJ, அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தை பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கான செய்முறை என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம், இஸ்ரேல் அமெரிக்கா வழியாக போரின் மூலம் சாதிக்க முடியாததைத் திணிக்க முயற்சிக்கிறது. “எனவே, அமெரிக்க-இஸ்ரேலிய பிரகடனத்தை பிராந்தியத்தைத் தூண்டுவதற்கான ஒரு சூத்திரமாக நாங்கள் கருதுகிறோம்,” என்று குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், பாகிஸ்தான், கத்தார், சவுதி
அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய
நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்
டிரம்பின் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேர்மையான முயற்சிகளை வரவேற்று,
அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் அவரது திறனில் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றனர்"
என்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இந்த வகையில், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவை மீண்டும்
கட்டியெழுப்புதல், பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வைத் தடுத்தல் மற்றும் விரிவான அமைதியை
முன்னெடுப்பது தொடர்பான அதிபர் டிரம்பின் அறிவிப்பையும், மேற்குக் கரையை இணைப்பதை அனுமதிக்க
மாட்டேன் என்ற அவரது அறிவிப்பையும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள்
என்று அந்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவிற்கு போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குதல், பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதைத் தடுக்குதல், பணயக்கைதிகளை விடுவித்தல், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு பாதுகாப்பு பொறிமுறை, இஸ்ரேலியர்களை முழுமையாக வெளியேற்றுதல், காசாவை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் ஒரு நியாயமான அமைதிக்கான பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு விரிவான ஒப்பந்தத்தின் மூலம் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாடுகள் தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான திறவுகோலாக சர்வதேச சட்டத்தின்படி பாலஸ்தீனத்தில் காசா மேற்குக் கரையுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு :
போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பாராட்டியுள்ளார். "காசாவில் இரத்தக்களரியை நிறுத்தி போர் நிறுத்தத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளையும் தலைமையையும் நான் பாராட்டுகிறேன்" என்று எர்டோகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். துருக்கி இராஜதந்திர செயல்முறையை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிறுவ உதவுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேபோன்று, இந்த திட்டத்தை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த அமைதி பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதில் அவசியம் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக தனது சமூக வலைத்தளப்பதில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், "இந்த மிக முக்கியமான மற்றும் அவசரமான புரிதலை யதார்த்தமாக்குவதற்கு தேவையான எந்த வகையிலும் உதவ அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுமையாகத் தயாராக இருக்கிறார் என்பதும் தனது உறுதியான நம்பிக்கையாகும். அதிபர் டிரம்பின் தலைமையையும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆற்றிய முக்கிய பங்கையும் தாம் பாராட்டுவதாகவும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கு இரு நாடுகள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் திட்டம் குறித்து கருத்து கூறியுள்ள இஸ்ரேலிய எதிர்க்கட்சி அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ், "பணயக்கைதிகள் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் அதிபர் டிரம்பின் அசாதாரண முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும், இப்போது முன்முயற்சிக்கான நேரம் இது என்றும், அதிபர் டிரம்பின் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், தங்கள் பணயக்கைதிகள் வீட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும், இஸ்ரேலின் செயல்பாட்டு சுதந்திரம் பராமரிக்கப்பட வேண்டும், காசாவில் ஹமாஸின் பயங்கரவாத ஆட்சி மாற்றப்பட வேண்டும், அதற்கு பதிலாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாம் முன்மொழிந்தபடி மிதவாத அரபு நாடுகள் நிறுவப்பட வேண்டும். பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வருவதற்கும், எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், பிராந்திய இயல்புநிலை வட்டங்களை விரிவுபடுத்தும் ஒரு 'மூலோபாய திருப்பத்தை' ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, பிரான்ஸ் ஜெர்மனி நாடுகள் வரவேற்பு :
இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளார். இது இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றுபட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார். "கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு" என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் ஒரு அறிக்கையில், இந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று இந்த திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் உறுதியுடன் ஈடுபடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவித்து இந்தத் திட்டத்தைப் பின்பற்றுவதைத் தவிர ஹமாஸுக்கு வேறு வழியில்லை என்றம் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூறுகள், இரு நாடுகள் தீர்வு மற்றும் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் முன்முயற்சியின் அடிப்படையில், 142 ஐ.நா. உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், பிராந்தியத்தில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப அனைத்து தொடர்புடைய கூட்டாளிகளுடனும் ஆழமான விவாதங்களுக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஐரோப்பிய கவுன்சில் என பல நாடுகளில் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ளன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும். இஸ்ரேல் காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழு காசாவில் இடைக்கால நிர்வாகத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட குழு இந்த திட்டத்தைக் கண்காணிக்கும். பாலஸ்தீன் ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிவுக்கும் வரை காசாவில் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இந்த குழுவின் பணியாகும்.காசா பகுதி தீவிரவாதம் இல்லாத அமைதியான மண்டலமாக மாற்றப்படும். காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்திற்குள் அனைத்துப் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். போர் உடனடியாக நிறுத்தப்படும். இப்படி பல அம்சங்கள் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
உண்மையில் பலன் தருமா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த அமைதித் திட்ட முயற்சி உண்மையில் பலன் தருமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பாலஸ்தீன் பூமி என்பது பாலஸ்தீனர்களின் சொந்த நாடாகும். ஆனால், அதனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் பெரும் பகுதியை தனது கட்டுக்குள் வைத்துக் கொண்டு தொடர்ந்து அட்டூழீயம் செய்துக் கொண்டே இருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. அமைதித் திட்டம் முன்மொழிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது கூட இஸ்ரேல் காசாவில் தாக்குதல்களை நடத்தி தன்னுடைய திமிர் தனத்தை காட்டிக் கொண்டே இருந்தது.
ஆனால் ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது காசா மக்களின் உறுதியான ஈமான் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்கதல்களை நடத்தி, அட்டகாசம் செய்தபோதிலும், காசா மக்கள் ஏக இறைவ்ன் மீது நம்பிக்கையை இழக்கவில்லை. தங்களது சொந்த பூமியை விட்டு போக விரும்பவில்லை. செத்தாலும் காசாவில் செத்து மடிவோம் என்று உறுதியாக கூறிக் கொண்டே, இஸ்ரேலிய தாக்குதல்களை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை சந்தித்த இஸ்ரேல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் அநீதிகளை எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்ற உண்மை தற்போது உலகத்தின் பார்வைக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது ஒரு வகையில் காசா மக்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். நீண்ட காலம் அநியாயம் உலகில் நீடிக்காது என்பது உண்மையாகும். தற்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் நபராக இருந்து வருகிறார். உலக மக்கள் அனைவரும் நெதன்யாகுவை மிகவும் வெறுத்து வருகிறார்கள். காசா போர் முடிவுக்கு வந்ததும், சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளி நெதன்யாகு நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று உறுதி.
இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் காசாவில் போரை நடத்தியது என்ற உண்மை உலகம் தற்போது அறிந்துகொண்டுவிட்டது. இதன் காரணமாக அமெரிக்க அதிபருக்கு வேறு வழியில்லாமல், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. காசா மக்களின் வாழ்வில் இனி அமைதி திரும்ப வேண்டும். அவர்களின் மனங்களில் ஒளி பிறக்க வேண்டும். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க வேண்டும். போர் இல்லாத காசாவாக மாறி பாலஸ்தீன மக்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம், வரலாற்றை பின்பற்றி உறுதியான ஈமானோடு ஏக இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக, காசா போர் முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அமைதி வழி பேரணிகள், கருத்தரங்குகள் ஆகியவையும் முக்கிய பங்கு என்பது வரலாறு பதிவு செய்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
==============================================
No comments:
Post a Comment