Sunday, September 14, 2025

புகைப்படக் கலையில் சாதித்த முஸ்லிம் பெண்கள்....!

  " புகைப்படக் கலையில் சாதித்த ஐந்து முஸ்லிம் பெண்கள் "

இஸ்லாம் பெண்களுக்கு எந்தவித உரிமைகளையும் வழங்கவில்லை என்று வலதுசாரி அமைப்புகள் அடிக்கடி கூக்குரல் எழுப்பி வருகின்றன. இஸ்லாம் குறித்தும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்தும் சரியாக அறிந்துகொள்ளாமல், அல்லது தவறான புரிதல் காரணமாக  அடிக்கடி இஸ்லாமிய பெண்கள் குறித்தும் அவர்களின் உரிமைகள் குறித்தும் இப்படி பெரும்பாலோர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். 

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் தந்து அவர்களை சிறப்பான இடத்தில் வைத்துள்ளது. கல்வி கற்கும், உரிமை, தொழில் செய்யும் உரிமை, சிறப்பான பணி செய்யும் உரிமை, பல்வேறு துறைகளில் சாதிக்கும் உரிமை, சொத்துரிமை என அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இந்த உரிமைகளை சிறப்பான முறையில் பயன்படுத்தி, கண்ணியமான வாழ்க்கையை வாழ பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

இதனை நன்கு அறிந்துகொண்டுள்ள இஸ்லாமிய பெண்கள், உலக அளவில் தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட, இஸ்லாமிய பெண்கள் நல்ல கல்வி பெற்று உயர் பதவிகளில் அமர்ந்து நல்ல சேவையை ஆற்றி வருகிறார்கள். பொருளாதாரம், வணிகம், தொழில், அறிவியல், இலக்கியம் என அனைத்துத்துறைகளிலும் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் என்றே கூற வேண்டும். 

புகைப்படக் கலையில் சாதனை :

சவூதி அரேபியாவின்  ஜித்தாவில் அண்மையில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், சவூதி அரேபியாவின் சிறந்த பெண் புகைப்படக் கலைஞர்கள் தங்களுடைய சிறந்த பங்களிப்பு மூலம் உயர்ந்து இடத்தைப் பிடித்தனர். இந்த பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் சவூதி ராஜ்ஜியத்தின் கலை நிலப்பரப்பை எவ்வாறு வடிவமைக்க உதவியுள்ளன என்பதைக் காண்பிக்கும் வகையில் இந்த கண்காட்சி இருந்தது. .

சவூதி அரேபிய கலாச்சாரம் மற்றும் கலை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை ஆவணப்படுத்திய அமல் அலமீர், ஹனா துர்கிஸ்தானி, சுசான் எஸ்கந்தர், சூசன் பாக்ஹில் மற்றும் நஜ்லா அங்காவி ஆகிய ஐந்து பெண் புகைப்படக் கலைஞர்களை கவுரவித்து பெருமைப்படுத்தியது. 

ஜித்தாவில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், மக்காவின் புனித தளங்கள் முதல் அதிர்ச்சியூட்டும் நிலப்பரப்புகள் மற்றும் பண்டைய மரபுகள் வரை அனைத்தையும் படம்பிடிக்கும் பல படைப்புகள் இடம்பெற்றன. இந்த படைப்புகள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 

ஐந்து முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு :

சவூதி ராஜ்ஜியத்தின் கலாச்சார மற்றும் காட்சி காப்பகத்திற்கு இந்த ஐந்து பெண்கள் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு புகைப்படக் கலைஞருக்கும் மலர்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சி அவர்களின் தனித்துவமான கலை பாணிகளைக் காட்சிப்படுத்தவும், அவர்களின் அனுபவங்கள் மற்றும் படைப்பு பயணங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. .

அவர்களின் படைப்புகள், நவீன வளர்ச்சியை ஆழமான கலாச்சார வேர்களுடன் சமநிலைப்படுத்தி, மாற்றத்தில் உள்ள ஒரு சமூகத்தின் கதையையும் சொல்லும் வகையில் இருந்தன ஏராளமான. புகைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் புகைப்பட கலைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் ஆலோசனையில்  ஈடுபடவும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, சாதனை பெண்கள் ஐந்து பேரின், சாதனை கதைகள் மற்றும் புகைப்படக்கலையில் அவர்களின் சாதனைகளைக் கேட்பது, சவூதி பெண்கள் எவ்வாறு கலைகளை வளப்படுத்துகிறார்கள், பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறார்கள் மற்றும் புகைப்படத்தின் சக்தி மூலம் புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கிறார்கள் என்பது பற்றிய புதிய நுண்ணறிவைப் பெறும் வாய்ப்பு புகைப்பட ஆர்வலர்களுக்கு கிடைத்தது. இதன்மூலம், இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் பெண்கள், ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு துறைகளிலும் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: