Friday, September 19, 2025

கண்ணீரை வரவழைத்த கட்டுரை....!

 " கடிதமும் கருத்தும் "

கண்ணீரை வரவழைத்த கட்டுரை....!

காஸாவில் பாலஸ்தீன மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் துயரங்களையும், கொடுமைகளையும் மணிச்சுடர் நாளிதழ் அவ்வப்போது செய்தியாகவும், கட்டுரையாகவும் வெளியிட்டு வருகிறது. காஸா மக்களின் துயரங்களில் பங்கெடுக்கும் வகையில் மணிச்சுடர் செய்துவரும் இந்த சிறந்தப் பணியை நிச்சயம் வாசகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள் எழுதிய "காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள்  -  அதிகரிக்கும் பாலஸ்தீன் மக்களின் துயரங்கள் " என்ற கட்டுரையை மணிச்சுடர் நாளிதழ் 19.09.2025 அன்று வெளியிட்டிருந்தது.  

அந்த கட்டுரையின் ஆரம்ப வரி முதல் இறுதி வரி வரை, ஒவ்வொரு வார்த்தைகளையும் படித்தபோது, கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காஸா மக்கள் மீது, சாத்தான் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களை நாம் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மூலம் கண்டு வேதனை அடைந்து வருகிறோம். மேலும், சில நேர்மையான, உண்மையான ஊடகங்கள் காஸா மக்களின் துயரங்களை அவ்வப்போது படம் பிடித்து காட்டி வருகின்றன. இதன்மூலம் இஸ்ரேலிய ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலைகள் உலகத்திற்கு தற்போது சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட துயரமான செய்திகளை ஏராளமான  ஊடகங்கள் மறைத்துவிட்டும் வருகின்றன. ஆனால் சமுதாயத்தின் நாளிதழ் மணிச்சுடர், காஸா மக்களின் துயரங்களை மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டி வருகிறது. 

அந்த வகையில் "காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள்  -  அதிகரிக்கும் பாலஸ்தீன் மக்களின் துயரங்கள் "  கட்டுரையும் மிகவும் அருமையாக இருந்தது. காஸாவின் மையப்பகுதிக்கு முன்னேறிவரும் இஸ்ரேல் ராணுவம், விமானத் தாக்குதல்கள் மற்றும் வெடிபொருட்கள் நிறைந்த ரோபாக்கள் மூலம் காஸா மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், உயிர் பிழைக்க  காஸா மக்கள் ஓடுகிறார்கள் என்ற தகவலை படித்தபோது, மனம் மிகவும் வேதனை அடைந்தது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் இந்த கொடூர தாக்குதல்களை அந்த மக்கள் எந்தளவுக்கு வேதனையுடன் தாங்கிக் கொண்டு ஈமானில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. 

கட்டுரைக்காக மணிச்சுடரில் இடம்பெற்ற புகைப்படங்களில், ஒரு சிறுவன் தன்னுடைய தங்கையை தோளில் சுமந்துகொண்டு அழுதுக் கொண்டு ஓடிச் செல்லும் காட்சி பார்த்தபோது மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. இதேபோன்று, குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த குடியிருப்பு சிதறுவதைக் கண்டு பயந்து ஓடும் சிறுவனின் புகைப்படம் மற்றும் உடைந்துபோன வாகனங்களில், உடைந்து போன மனங்களுடன், இதயங்களுடன், துயரமான, துக்கமான வேதனையுடன், காஸா மக்கள் உயிர் பிழைக்கச் செல்லும் புகைப்படம் ஆகியவற்றை கண்டபோது, துக்கத்தால் உணவு சாப்பிட மனமே வரவில்லை. எத்தனை துயரங்களை, எத்தனை வேதனைகளை காஸாவின் பாலஸ்தீன மக்கள் நாள்தோறும் சுமந்துகொண்டு இருக்கிறார்கள். 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து காஸா மக்கள் மீது நடத்திவரும் இந்த கொடுமையான தாக்குதல்கள் உடனே நிற்க வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம் நாடுகள் ஒன்றாக இணைந்து காஸா மக்களின் துயரங்களை துடைக்க முன்வர வேண்டும். 

இறுதியாக, காஸா மக்களின் நலனுக்காக உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் துஆ கேட்க வேண்டும். ஒவ்வொரு வேளை தொழுகையிலும் அழுது மன்றாட வேண்டும். "இறைவா, காஸா மக்களுக்கு அமைதியை தா. இறைவா காஸா மக்களின் துயரங்களுக்கு விடை கொடு. இறைவா காஸா மக்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவரும் சாத்தான் இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தையும் பதிலடியையும் கொடு. இறைவா காஸா மக்களின் பொறுமையை சோதிக்காதே. இதுபோன்ற கொடூமைகளை தாங்கிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் கொஞ்சம் கிடையாது. அருள் கூர்ந்து காஸா மக்கள் மீது உன்னுடைய கருணை பார்வையை செலுத்தி, அவர்களின் துயரங்களை போக்கி விடு. அவர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடு. ஏக இறைவா எங்களை பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள். எங்கள் துஆக்களுக்கு அங்கீகாரம் கொடு" இப்படி உலக முஸ்லிம்கள் அனைவரும் துஆ கேட்க வேண்டும். அத்துடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டிக்கும் வகையில் நடக்கும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அனைத்திற்கும் மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். காஸா மக்களின் துயரங்கள் இனியும் தொடரக் கூடாது. உடனே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். 

- டாக்டர் ஏ.கே. அர்சியா பேகம், B.U.M.S.

   யுனானி மருத்துவர், வேலூர் - 632 001.


No comments: