Thursday, September 4, 2025

வேண்டாம் பயம்....!

 வேண்டாம் பயம்....!

உலகில் மனிதர்கள்  சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக அவனிடம் உருவாகும் தேவையில்லாத பயம் இருந்து வருகிறது.  பயம் கொள்ளும் மனிதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறான். பயம் என்ற சுபாவம் அல்லது மனிதனக்கு ஓரளவுக்கு தேவை என்றாலும், எப்போதும் ஒருவித பயத்துடன் வாழ்வது அவனுடைய வாழ்க்கையை நரகமாக்கிவிடும். 

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதன், நோய் ஏற்பட்ட ஒரு மனிதனைக் கண்டு, தமக்கு அந்த நோய் வந்துவிடுமோ என்று பயப்படும் நிலை தற்போது இருந்து வருகிறது. அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் மருத்துவர் ஆற்றிய உரை ஒன்றை கேட்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அந்த பெண் மருத்துவர் ஒரு மனிதனை பயம் எப்படி, நோய்களுக்கு ஆளாகி அவனுடைய வாழ்க்கையை வீணடித்துவிடுகிறது என்பதை மிகவும் சிறப்பான முறையில் எடுத்து கூறியிருந்தார். 

பெண் மருத்துவரின் அந்த உரையில்,  பயம் என்ற ஒரு குணமே நிறைய பிரச்சினைகள்,மனிதர்களுக்கு உருவாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டார். ஒரு மனிதன் பயப்பட்டால் உடம்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் விளக்கமாக கூறியிருந்தார். இரத்த அழுத்தம், நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய், ஹார்ட் அட்டாக், தூக்கமின்மை போன்ற எல்லா நோய்களுக்கான மூலக்காரணமாக பயம் இருந்து வருகிறது. 

தேவையில்லாத பயம் :

ஒருவர் தேவையில்லாமல் பயம் அடைந்தால், முதலில் அவரது வயிறு படபடக்கும். ஒருவரின் பயம் காரணமாக முதலில் பாதிப்பு அடைவது அவரது குடல் தான். பயத்தால் முதலில் பாதிப்பு அடைவது நம்முடைய ஜீரண மண்டலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக அஜீரண கோளாறு ஏற்படும். ஒரு மனிதன் தொடர்ந்து பயத்தில் வாழ்ந்தால், இரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்டவை நாள்பட்ட உபாதைகள் அவனிடம் குடிபுகுந்துவிடும். கடைசியாக இதய நோய்கள் ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும்.  பயத்தால் முதலில் பாதிக்கப்படுவது வயிறு தான். பயம் ஏற்பட்டால் வயிற்றில் தான் முதலில் பிரச்சினைகள் உருவாகும். பசி எடுக்காது. வாந்தி வரும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். 

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் பயம் தான் அடிப்படையாக உள்ளது. அத்துடன் தேவையில்லாத கவலை கொள்வதும் மனித ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்துவிடும். மேலும் பயம் என்பது தோலில் தன்னுடைய வேலையை காண்பித்துவிடும். தோலில் கட்டி வருவது, தோல் கருப்பு நிறமாக மாறுவது., தோல் அலர்ஜி ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் பயத்தால் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு மூலக்காரணம் பயம் தான். பல நோய்களுக்கு ஆரம்பப்புள்ளி பயம் மற்றும் கவலை என்றே கூறலாம்.

மனிதர்களுக்கு பொதுவாக இருக்கும் பல பிரச்சினைகள் எங்கு இருந்து ஆரம்பிக்கும் என்ற கேள்வியை எழுப்பினால், அவனது மனநிலையில் இருந்து ஆரம்பிக்கும் என்ற பதில் கிடைக்கும். எனவே ஒரு மனிதன் தன்னுடைய மனநிலையை நல்ல முறையில் பேண வேண்டும். தேவையில்லாத பயம் கொள்ள வேண்டியதே இல்லை.

மருத்துவப் பரிசோனைக்கு முன்பே பயம் : 

ஒருசிலருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு முன்பே நோய்கள் குறித்த தேவையில்லாத பயம் ஏற்பட்டுவிடும். மருத்துவர் ஒருவர் ஒரு மருத்துவப் பரிசோனைக்கு பரிந்துரை செய்தால், ஏன் அதை பரிந்துரை செய்கிறீர்கள். எனக்கு அந்த நோய் இருக்கும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விகளை எழுப்பும் நோயாளிகள் தற்போது அதிகரித்துவிட்டார்கள். ஒரு பெண் நோயாளிக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அந்த சோதனைகள் எடுத்தபிறகு, அந்த பெண்ணுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. எனினும் அந்த பெண்ணுக்கு திருப்தியே ஏற்படவில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு கூட எனக்கு எந்தவித நோய் பாதிப்பும் இல்லையா என்ற கேள்வியே அந்த பெண்ணிடம் இருந்துகொண்டே இருந்தது. மருத்துவர் எவ்வளவு சொல்லியும் கூட அந்த பெண்ணுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. இத்தகைய மனநிலையில் தான் தற்போது மனிதர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். 

மருத்துவப் பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அதை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பயம் அடையக் கூடாது. தேவையில்லாத குழப்பங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை எடுக்கும்போது பயம் கொள்ளக் கூடாது. நூறு பேருக்கு மருத்துவப் பரிசோதனை எடுத்தால், ரிசல்ட் 95 பேருக்கு நர்மலாக இருக்கும். பின்னர் ஏன் மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றால், நமக்கு நோய் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளதான் டெஸ்ட் எடுக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.  எல்லாமே நர்மலா இருந்தால், நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். எனவே தேவையில்லாமல் பயம் அடைந்துகொண்டு எப்போதும் ஒருவித கவலையுடன் வாழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி அந்த பெண் மருத்துவர் கூறியபோது உண்மையில் பயம் எந்தளவுக்கு மனித வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது என்பதை உணர முடிந்தது. 

ஏக இறைவனுக்கு மட்டுமே பயப்பட வேண்டும் :

நம்முடைய வாழ்க்கையில் நாம் பயப்பட வேண்டிய ஒருவன் யார் எனில் அது ஏக இறைவன் மட்டுமே. ஏக இறைவனின் வழிகாட்டுதலின் படி வாழ்ந்தால் அந்த பயம் கூட நமக்கு ஏற்படாது. இறைவன் அமைந்து தந்த அழகிய வாழ்க்கை நெறியின்படி, நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நாம் வாழ்ந்தால், தேவையில்லாத பயம் நமக்கு நிச்சயம் ஏற்படாது. நல்ல வாழ்க்கை நெறிமுறைகள் நம்மிடம் உருவாகிவிடும். வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், ஏக இறைவனுக்கு பயந்து அவன் தந்த வாழ்க்கையை முறைப்படி வாழ்ந்து, தேவையில்லாத பயங்களை தவிரித்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை தான் அந்த பெண் மருத்துவரும் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: