"நெருக்கிவிட்ட தேர்தல் நேரம்"
- என்ன செய்ய போகிறார்கள் தமிழக முஸ்லிம்கள் ? -
- ஜாவீத் -
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக அணிகள் முழு வீச்சில் மாநிலம் முழுவதும் தங்களது பிரச்சாரங்களை செய்யத் தொடங்கியுள்ளார்கள். மக்களை கவர பல்வேறு நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் தேர்தல் பொறுப்புகள் என்ன? தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு, தமிழகத்தில் அமைதி எப்போதும் நிலவ செயல்பட வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாஜக பல்வேறு அரசியல் காரியங்களை செய்து வருகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களத்தில் காரியங்கள் ஆற்றப்பட்டு வருகின்றன. இந்த செயல்பாடுகளை சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் இல்லை என்றே கூறலாம். அதற்கு காரணம் அவர்களிடம் அரசியல் தெளிவு இன்னும் பிறக்கவில்லை. ஒற்றுமை என்ற ஒரே குடையின் கீழ் முஸ்லிம்கள் வரவில்லை. இன்னும் பிரிந்து நின்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரை :
தமிழக முஸ்லிம்களின் நிலைமை இப்படி இருக்க, கடந்த மாதம் சென்னையில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழா மேடையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அரங்கம் முழுவதும் நிறைந்து இருந்தது. பல்வேறு அமைப்புகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் அரங்கத்தை அலங்கரித்து அமர்ந்து இருந்தார்கள். இந்த விழாவில் பேசிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள்.
இறுதியில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உரையின் ஆரம்பத்திலேயே ஓர் அறிவுரையை முஸ்லிம் சமுதாயம் முன், அதாவது முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களின் முன் வைத்தார். அது அறிவுரை என்பதைவிட வேண்டுகோள் என்றே கூறலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் அமர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதற்கு தீர்வு காணும் முதலமைச்சர், முஸ்லிம் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைகளுக்கும் நல்ல தீர்வு கண்டு வருகிறார். புதிய வக்பு சட்டம், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சிகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமுதாயம் திருப்தி அடையும் வகையில் அவரது பணிகள் இருந்து வருகின்றன.
எனினும் முஸ்லிம் தலைவர்கள் அல்லது சமுதாயம் இன்னும் பிரிந்து பல்வேறு கூறுகளாக சிதறிக் கிடப்பதை பார்த்து முதலமைச்சருக்கு உண்மையில் மன வருத்தம் இருந்து வருகிறது. அதன் காரணமாக தான் மேடையில் அமர்ந்து இருந்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர், "இந்த மேடையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மேடையில் மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும், எப்போதும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, சிறப்பான பணிகளை ஆற்ற முடியும். வெற்றியை குவிக்க முடியும்" என்று தனது ஆசையை, விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
உண்மை நிலை என்ன ?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் மூலம் முஸ்லிம் சமுதாயம் இன்னும் ஒற்றுமையாக இல்லை என்பது உறுதியாக தெரியவருகிறது. தமிழகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த அமைப்புகள் வெளியே தலைக்காட்டி, சமுதாய மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பதை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவற்றை கடந்த கால தேர்தல்களின் மூலம் நாம் கண்டு இருக்கிறோம். முஸ்லிம் வாக்குகள் சிதறி போன காரணத்தால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாணியம்பாடி போன்ற தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோல்விஅடைந்தார்கள்.
அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், பொது தளத்திலும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இல்லை என்றே கூறலாம். எந்தவொரு பிரச்சினையிலும் அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மறுக்கிறார்கள். ஒற்றுமையாக செயல்பட்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் முஸ்லிம் சமுதாயம் மத்தியில் இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முஸ்லிம் சமுதாயம் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் சென்று படிக்க ஆண்டு 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல திட்டங்களை திராவிட மாடல் திமுக அரசு நிறைவேற்றி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளில் முஸ்லிம்களும் உண்டு. அண்மையில் சென்னையில் நடந்த கல்வியில் திறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கூட, முஸ்லிம் மாணவ மாணவியர்கள், தங்களுடைய சாதனைகளை எடுத்துகூறியதை காண முடிந்தது. நிலைமை இப்படி இருக்க, முஸ்லிம்கள் இன்னும் ஒற்றுமையாக செயல்படாமல் இருப்பது நியாயமா என்ற முதலமைச்சரின் ஆதங்கம் சரியானது ஒன்று என்றே கூறலாம்.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் ?
தமிழக முஸ்லிம்கள் தங்களிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்திற்கு திராவிட மாடல் அரசு என்னென்ன நன்மைகளை செய்து இருக்கிறது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்யும்போது, மற்ற கட்சிகளை விட முஸ்லிம்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பதை நிச்சயம் அறிந்துகொள்ள முடியும். எந்தவொரு பிரச்சினைக்கு முன்நின்று தீர்வு காணும் கட்சியாக திமுகவும், திமுக அரசும் இருப்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள முடியும்.
எனவே முஸ்லிம்கள் இனி பிரிந்து கிடக்காமல், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வடநாட்டில் உள்ள நிலைமையை போன்ற ஒரு நிலைமையை தமிழகத்தில் கொண்டு வர அண்மைக் காலமாக தொடர்ந்து காட்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் வாக்குகளை பறித்துகொண்டு, அல்லது பிரித்துவிட சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழக முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை அணுக வேண்டும். சமுதாயம் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டுமானால், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டே தீர வேண்டும். இனி பிரிந்து கிடக்கும் நேரமில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்த அம்மாநில முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்பட்டார்களோ, எதிர்கொண்டார்களோ அதேபோன்று, தமிழக முஸ்லிம்களும் செயல்பட வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒரு வாக்கு கூட சிதறி போய் விடக் கூடாது. வரும் தேர்தல் மிகவும் நெருக்கடியாக காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். எனவே தமிழக முஸ்லிம்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டு, தங்களுடைய காரியங்களை ஆற்ற வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறதே என்று எண்ணிவிட்டு, ஓய்வாக வீட்டில் அமர்ந்துகொண்டு இருக்கும் நேரம் இதுவல்ல என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்னும் 6 மாத காலத்திற்கு ஓய்வே இல்லை என்ற மனநிலை முஸ்லிம்கள் மத்தியில் பிறக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது என்ற நினைப்பு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கவே கூடாது. தேர்தல் பணி என்பது அரசியல் பணி என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் இருப்பது வேதனை அளிக்கிறது. அதன் காரணமாகதான் பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரசியலும் வாழ்க்கையின் ஒரு பங்கு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை, முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஆதரவான அரசு தமிழகத்தில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சியை வீழ்த்த தான் சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கிவிடக் கூடாது. முஸ்லிம்களின் நண்பனாக இருக்கும் திமுகவிற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவு கொடுக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களது வாக்குகள் அனைத்தும் 100 சதவீதம் அளவுக்கு திமுக அணிக்கு வழங்க பணிகளை ஆற்ற வேண்டும். இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் இந்தமுறை நிச்சயம் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும்.
திமுக அணி சார்பாக நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிவாகை சூட வேண்டும். அதற்கு ஒரே வழி ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை என்று கூற முடியும். எனவே தேர்தலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்ற நினைப்பில் இருக்காமல், சமுதாய நலனுக்காகவும், தமிழகத்தின் அமைதிக்காவும், முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மீண்டும் தொடர முழுவீச்சில் செயல்பட வேண்டும். இது ஓய்வுபெறும் நேரமே இல்லை. இப்போதே பணிகளை தொடங்கினால் மட்டுமே, இலட்சியத்தை எட்ட முடியும் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பணிகளை ஆற்ற வேண்டும். அதன்மூலம் மட்டுமே, சமுதாயம் அமைதியாக வாழ முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
=======================================
No comments:
Post a Comment