Saturday, September 13, 2025

திங்கட்கிழமை தீர்ப்பு....!

 ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு....!

 இ.யூ.முஸ்லிம் லீக்  மற்றும் பிற அமைப்புகள் தொடர்ந்து வழக்கு...!!

 திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்....!!!

புதுடெல்லி, செப்.14- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் 2025க்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 15.09.2025 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

ஒன்றிய அரசு சட்டம் :

வக்பு வாரியத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த கூட்டுக்குழுவில் இடம்பெற்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று, நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இ.யூ.முஸ்லிம் லீக் எதிர்ப்பு :

சென்னையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இ.யூ.முஸ்லிம் லீக் மக்களவை உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டு, புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பு கடிதங்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ஒன்றிய அரசின் நடடிவக்கைக்கு எதிராக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் புதிய வக்பு திருத்த மசோதாவிற்கு எதிராக கருத்தரங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. 

இத்தகைய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கூட, வக்பு திருத்த மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் 232 எம்.பி.க்கள் எதிராக இருந்தனர். மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஒன்றிய அரசு வக்பு சட்டம், 2025 ஐ அறிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு :

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்பு திருத்தம் சட்டம், 2025-ஐ நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த வழக்கில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாகவும் நீதித்துறை அல்லாத செயல்முறை மூலம் வக்பு சொத்துகளை கைப்பற்றுதற்கான ஒரு வழிமுறை என்றும் கடுமையாக அவர் நீதிமன்றத்தில் விமர்சனம் செய்தார். மேலும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளதாகவும் கபில்சிபல் குற்றம்சாட்டினார். 

எனினும், ஏப்ரல் 25 அன்று, ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம், திருத்தப்பட்ட வக்பு சட்டமான 2025 ஐ ஆதரித்து ஆயிரத்து 332 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மேலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு நீதிமன்றத்தால் முழு தடை விதிக்கப்படுவதை எதிர்த்தது.

திங்கட்கிழமை தீர்ப்பு :

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த மே 22ஆம் தேதி தலைமை நீதிபதி நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு  தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் பிற அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை வழங்க உள்ளது. வக்பு சட்டம் 2025 வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களுடைய உத்தரவை 15.09.2025 அன்று வழங்க உள்ளனர்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments: