காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக ஐ.நா விசாரணை ஆணையத்தின் அறிக்கை:
சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு - இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்....!!
ரியாத், செப்.17- காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.
ஐ.நா. அறிக்கை :
ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம், "காசாவில் இனப்படுகொலை நடக்கிறது" என்று கண்டறிந்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை செவ்வாய்கிழமை தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை "பாலஸ்தீன மக்கள் அனுபவித்த குற்றங்கள் மற்றும் மீறல்களை தெளிவாகக் காட்டுகிறது. இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோர் இனப்படுகொலையை தூண்டியனர் என்றும், இந்தத் தூண்டுதலைத் தண்டிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மற்றும் இஸ்ரேல் மீதான விசாரணை ஆணையம், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையிலான இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு காசா மற்றும் பிற பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களை மீண்டும் மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற காசாவில் இஸ்ரேல் தனது போரைத் தொடரும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கான சமீபத்திய குற்றச்சாட்டுகளாக மூன்று பேர் கொண்ட குழுவின் ஆழமாக ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் உள்ளன.
சவூதி அரேபியா வரவேற்பு :
ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வாளர்கள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச தீர்மானங்களை அமல்படுத்தவும், இரு அரசு தீர்வை செயல்படுத்தவும், பாலஸ்தீன மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் சர்வதேச சமூகத்திற்கு சவூதி இராச்சியம் தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வந்து அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறது.
காசா மீது குண்டு மழை:
இதனிடையே சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பையும் மீறி காசா நகரத்தின் மீது இஸ்ரேலிய குண்டுகள் மழை பொழிந்ததால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி வருகின்றனர். இந்த குண்டுமழையில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்ததுடன், ஏராளமான குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் இந்த கொடூர தாக்குதல்கள் மனிதநேய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==============================
No comments:
Post a Comment