மதரஸா, பள்ளி மாணவர்களின் ரோஜா பூ வரவேற்பு.....!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.....!!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500 பிறந்தநாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி சிறப்பாக வரவேற்பு அளித்தனர். கலைவாணர் அரங்கத்திற்குள் முதலமைச்சரின் வாகனம் நுழைந்ததும், வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதலமைச்சருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் அன்பான ரோஜா பூ வரவேற்பாக இருந்தது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது கைகளில் வைத்திருந்த ரோஜா பூவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து, தங்களது அன்பை வெளிப்படுத்தி, அவரை மகிழ்ச்சியுடன் விழாவிற்கு அழைத்தனர். அப்போது முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாணவர்களின் தோளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். சில மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் படிப்பு மற்றும் நலன் குறித்தும் அவர் கேட்டு, சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.
முதல் வரிசையில் இருந்த மதரஸா மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், எதிர்திசையில் இருந்த இரண்டாவது வரிசைக்கு சென்றபோது, மீண்டும் வரிசையில் இருந்த முதல் மாணவனின் திசைக்குச் சென்று, அங்கிருந்த மாணவனின் கைகளில் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டு வரவேற்பை தொடங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்ற காணொளியை காணும்போது, உண்மையில் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது. முதலமைச்சருக்கு வித்தியாசமான முறையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அவரை பெரிதும் கவர்ந்தது என்பதை அவரது முகத்தை காணும்போது தெளிவாக தெரிந்தது. புன்சிரிப்புடன், ஒவ்வொரு மாணவரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்ததும், காணொளியில் மூலம் அருமையாக தெரியவந்தது. உண்மையில் மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் இந்த அன்பான வரவேற்பு, முதலமைச்சரை மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாயத்தையும் தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றது என்றே கூறுலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================
No comments:
Post a Comment