" காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள் "
- அதிகரிக்கும் பாலஸ்தீன மக்களின் துயரங்கள் -
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, சிறிது காலம் போர் நிறுத்தப்பட்டதால் காஸா மக்கள் கொஞ்சம் அமைதி அடைந்தனர். எனினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தொடங்கி நடத்தி வருகிறது. சர்வதேச மனிதநேய அமைப்புகள், மற்றும் நாடுகளின் கண்டனங்களையும் மீறி இஸ்ரேல் ராணுவம், காஸா மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளையும், பெண்களையும் முதியவர்களையும் குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான இளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உணவு, மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் காஸா மக்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், காஸாவை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற கொடூர எண்ணத்துடன் இஸ்ரேல் நடந்த இரண்டு மூன்று நாட்கள் மிகப்பெரிய அளவுக்கு தாக்குதல்களை அரங்கேற்றி நடத்தி வருகிறது.
உயிர் பிழைக்க ஓடும் மக்கள் :
காஸாவின் மையப்பகுதிக்கு முன்னேறிவரும் இஸ்ரேல் ராணுவம், விமானத் தாக்குதல்கள், மற்றும் வெடிபொருட்கள் நிறைந்த ரோபாக்கள் மூலம் காஸா மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. குடியிருப்பு பகுதிகளை வெடிகளை வைத்து தகர்த்தி வருகிறது. காஸாவின் மிகப்பெரிய நகர்ப்புற மையத்தில் உயிர்காக்கும் கோடுகள் சரிந்ததால் மக்கள் உயிர் பிழைக்க ஓடுகிறார்கள். இஸ்ரேலிய இராணுவம் இரண்டு திசைகளிலிருந்து காஸா நகரத்தின் மையத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது. காஸா குடியிருப்பாளர்களை கடுமையாக மிரட்டி, அவர்களை கடற்கரையை நோக்கி செல்ல ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. மேலும், காஸா மக்களை மிகப்பெரிய நகர்ப்புற மையத்திலிருந்து விரட்ட இஸ்ரேல் ராணுவம் முயற்சிக்கிறது. இதன் காரணமாக விமானப்படையின் ஆதரவுடன், காலாட்படை, டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் உள் நகரத்தில் முன்னேறி வருகின்றன.
இஸ்ரேலிய இராணுவம் வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து முன்னேறி மக்களை நடுவில் வைத்து அவர்களை நகரத்தின் மேற்கு நோக்கித் தள்ளி வருகிறது. நெரிசல் நிறைந்த சுற்றுப்புறங்கள் மீதான தாக்குதல்கள் காஸா மக்களை பீதியையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும் மக்களை தங்கள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அலை அலையாக மக்கள் துயரங்களுடன் தங்களது சொந்த மண்ணை விட்டு செல்லும் துயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ரோபோக்கள் வெடிப்புகள் உள்ளிட்ட இடைவிடாத தாக்குதல்களை சந்திக்கும் நிலைக்கு காஸா மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஆளில்லா வாகனங்கள், இஸ்ரேலிய இராணுவம் உள்நோக்கி முன்னேறும்போது சுற்றுப்புறங்களை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. காஸா நகரில் வியாழக்கிழமை (18.09.2025) மட்டும் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கொடூரமான காட்சிகளுக்கு மத்தியில், தப்பியோடிய குடும்பங்கள் பாதுகாப்பான மண்டலங்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில் மீண்டும் இடம்பெயர்வு ஏற்படும் இதயத்தை உடைக்கும் வாய்ப்பை எதிர்கொண்டன. இந்த முறை மட்டுமே அவர்கள் மீண்டும் ஒருபோதும் வீடு திரும்ப மாட்டார்கள் என்ற உண்மையான சாத்தியக்கூறு இருந்தது.
குப்பைக் கிடங்குகளில் தங்க வேண்டிய கட்டாயம் :
இஸ்ரேலிய தாக்குதலால் காஸா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீன குடும்பங்கள் குப்பைக் கிடங்குகளில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் பலர் அங்கேயே தங்கியுள்ளனர். பாலஸ்தீன மத்திய புள்ளிவிவர பணியகம், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் காஸாவின் 21 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இன்னும் அந்த இடத்தின் வடக்கில் இருப்பதாகக் கூறியது. இருப்பினும், தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகமான மக்களை வெளியேற்றி, அடிப்படை சேவைகள் காணாமல் போவதால், எண்ணிக்கை குறையக்கூடும் என்று பணியகம் அச்சம் தெரிவித்துள்ளது. காஸாவின் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக்கு ஜிகிம் கடவை மூடப்பட்டதையும், சில உணவுப் பொருட்களைத் தடை செய்வதையும் காரணம் காட்டி, மக்களுக்கு உதவி வழங்குவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் முறையாகத் தடுத்து வருகிறது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், காஸா மீதான வான்வழித் தாக்குதல்களில் போராளிகள் மற்றும் பொதுமக்களை வேறுபடுத்துவதற்கான சர்வதேச சட்டத் தேவைகளை இஸ்ரேல் அப்பட்டமான புறக்கணிப்பு என்று சமூக ஊடகங்களில் கண்டித்தது. எனினும் இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை (18.09.2025) மாலை தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. குடியிருப்பாளர்கள் நியமிக்கப்பட்ட ஆறு இடங்களிலிருந்து விலகி இருக்க அவசர எச்சரிக்கைகளை விடுத்து இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாலஸ்தீன மக்களின் துயரங்கள் :
இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீன மக்களின் துயரங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களில் வரும் காணொளிகளை பார்க்கும்போதும், பாலஸ்தீன் மக்கள் கண்ணீர் வீட்டு அழும் காட்சிகளை காணும்போதும், மனம் துயரம் அடைந்து இரத்த கண்ணீர் வடிக்கிறது. இளம் பிஞ்சு குழந்தைகள் பசியால் வாடும் காட்சிகளை காணும்போது இதயம் வெடிக்கிறது. பெண்கள், குழந்தைகள் தங்களது சொந்த இடங்களை விட்டு, கிடைத்த பொருட்களை உடைந்தபோன பழைய வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் காட்சிகளை காணும் மனிதநேய மக்கள் நிச்சயம் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
காஸாவில் பாலஸ்தீன மக்கள் துயரங்கள் இனியும் தொடரக் கூடாது என உலக மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் இன்னும் தீவிரம் அடைவதால், காஸா மக்களின் வேதனைகள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. உலகின் பல நாடுகள் காஸா மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவது ஆறுதல் தந்தாலும், அவர்களின் துயரங்கள் இன்னும் நிற்கவில்லை. காஸா மக்களின் துயரங்கள், கண்ணீர்கள் நிற்க ஏக இறைவன் அருள் புரிய வேண்டும். ஈமானில் மிகவும் உறுதியாக இருக்கும் காஸா மக்களின் வாழ்வில் மீண்டும் பழைய ஒளி பிறக்க வேண்டும். தங்களது சொந்த பூமியில் அவர்கள் அமைதியாக வாழ வழி பிறக்க வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்









No comments:
Post a Comment