" ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களின்னி மனிதநேயப் பணி "
'காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள்' என்ற தலைப்பில் கடந்த 19ஆம் தேதி மணிச்சுடர் நாளிதழில், தொடரும் காஸா மக்களின் துயரங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அந்த கட்டுரையில் சிறுவன் ஜாதூவா தனது தம்பி கலீத்தை முதுகில் சுமந்து கொண்டு அழுதுக் கொண்டே ஓடிச் செல்லும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.
ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் இந்த துயரமான புகைப்படம் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளுக்கு ஒரு சிறிய சான்றாக அமைந்து இருந்தது. இதேபோன்று, ஆயிரக்கணக்கான குழந்தைகள் காஸாவில் சிக்கி உயிர் பிழைக்க நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செய்தியும் தற்போது உலகம் முழுவதும் எட்டிக் கொண்டிருக்கிறது.
கூடாரத்தில் தஞ்சம் :
சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் புகைப்படம் வெளியான பிறகு, ஒரு ஊடகவியலாளரின் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அகதிகளுக்கான கூடாரத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, உணவு, உடை உள்ளிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால்
காஸாவில் இஸ்ரேலிய தாக்குல் காரணமாக இடம்பெயர்வின் கடுமையான சாலைகள் வழியாக ஜாதூவா தனது தம்பி கலீத்தை தோள்களில் சுமந்து சென்ற துயரம் தற்போது நீங்கி, தற்போது இருவரும் கூடாரத்தில் அமர்ந்து துயரத்தை கொஞ்சம் மறந்து சிரித்து விளையாடி மகிழ்கிறார்கள்.
போரின் சுமையைத் தாங்கும் குழந்தைப் பருவத்தின் அடையாளமாக இருந்த அவர்களின் வாழ்க்கை தற்போது மாறி,இரண்டு சகோதரர்கள் ஒரு எளிய கூடாரத்திற்குள் அமர்ந்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு சிறிய சிரிப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் உயிர்வாழும் ஒரு தலைமுறையின் கதையாக உள்ளது. மேலும் இது உலகிற்கு மீள்தன்மையின் பாடத்தை வழங்குகிறது.
எகிப்து தொழில் அதிபரின் மனிதநேயம் :
இது ஒருபுறம் இருக்க, எகிப்து தொழில் அதிபரின் மனதை கூட சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் துயரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வளர்க்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். காஸா போரில் தாய், தந்தையை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை அந்த தொழில் அதிபர் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அழகிய வாழ்வை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோருக்கும் உதவ அவர் முன் வந்துள்ளார். சிறுவர்கள் இருவர் குறித்த விவரங்களை ஊடகவியலாளர் ஒருவரிடம் கேட்டுள்ள அந்த தொழில் அதிபர், முழு விவரங்களையும் அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சிறுவர்கள் இருவரின் விவரங்கள் தற்போது எகிப்து தொழில் அதிபரின் பார்வைக்கும் கவனத்திற்கும் சென்றுள்ளது.இதன்மூலம் ஜாதூவா மற்றும் கலீத் ஆகிய இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புகைப்படக் கலைஞர்களின் சேவை :
காஸாவின் துயரங்களை நேரடியாக படம் பிடித்துக் காட்டும் புகைப்படக் கலைஞர்களின் அரிய சேவை மூலம் காஸா சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்றே கூறலாம்.
காஸா போர்க்களத்தில் துணிச்சலுடன் செயல்படும் ஊடகவியலாளர், புகைப்படக் கலைஞர்கள் மூலமாக இஸ்ரேலின் கொடூரம் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது. காஸா மக்கள் மீது குறிப்பாக, சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்தும் தாக்குதல்கள், செய்யும் கொடுமைகள் தற்போது உலகம் நேரடியாக கண்டு வருகிறது. இஸ்ரேலிய அரசுக்கு மேற்கத்திய நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போது நிலைமை மாறி வருகிறது. இதன்மூலம் காஸாவில் போர் நின்று விரைவில் அமைதி திரும்ப வாய்ப்பு உருவாகியுள்ளது என்றே கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment