காசாவில் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்
20 அம்ச அமைதித் திட்டம்
இந்தியா
உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு
காசாவில் விரைவில் அமைதி திரும்பும் என நம்பிக்கை
நியூயார்க்,செப்.30-காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்றள்ளன.
காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல், காசா மக்கள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாடுகள் கோரிக்கை :
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரண்டு நாடுகள் தீர்வை முன்வைத்து பேசின. மேலும், இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களையும் பல நாடுகள் தெரிவித்தனர். இஸ்ரேல் பிரதமர் ஐ.நா.பொது அவையில் பேசும்போது பெரும்பாலான நாடுகள் அவரது பேச்சை புறக்கணித்தன.
டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டம் :
இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்து பேசிய அதிபர் டிரம்ப், காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில், அமைதி மிகவும் அவசியம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிபர் டிரம்ப்பின் இந்த இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து விரையில் 20 அம்ச அமைதித் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு :
காசாவில் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றுபட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று தாங்கள் நம்புகிறோம் கூறியுள்ளார்.
இதேபோன்று, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பாகிஸ்தான், சவுதி ஆரேபியா உள்ளிட்ட பல நாடுகள் 20 அம்ச அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹமாஸ் போராளிகள் குழுவும் இந்த திட்டத்திற்கு சம்பந்தம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
இரு தரப்பும் இந்த திட்டத்தை ஒப்புக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும். இஸ்ரேல் காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழு காசாவில் இடைக்கால நிர்வாகத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட குழு இந்த திட்டத்தைக் கண்காணிக்கும். பாலஸ்தீன் ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிவுக்கும் வரை காசாவில் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இந்த குழுவின் பணியாகும். இப்படி பல அம்சங்கள் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment