Sunday, May 25, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (84)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 84


பேருந்தில் குடிபோதையில் தகராறு செய்தவர்களை பாதி வழியில் இறக்கி விட்டதால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட நடத்துனர்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு கடந்த மே 20-ந்தேதி (20.05.2014)  மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.

பேருந்தில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியை சேர்ந்த செல்வா என்பவர் நடத்துனர் இருந்தார்.

பேருந்து, நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது பேருந்தில் 3 இளைஞர் ஏறினார்கள். அவர்கள், 3 பேரும் நெல்லைக்கு டிக்கெட் எடுத்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகளிடம் தகராறு செய்தார்கள்.

இதனால் தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் 3 இளைஞர்களையும் பேருந்தில் இருந்து நடத்துனர் செல்வா இறக்கி விட்டார்.

இதனால் அவர்களுக்கு, செல்வா மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

பின்னர் பேருந்து புறப்பட்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று சேர்ந்தது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் நடத்துநர் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்ட இளைஞர்கள்  உள்பட 4 பேர் நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்துநர் செல்வாவிடம், பேருந்தை விட்டு இறக்கி விட்டது தொடர்பாக மீண்டும் தகராறு செய்தனர்.


திடீரென்று செல்வா மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த செல்வா ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நடத்துநர் மீது தீ வைத்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பயணிகள் அவர்களை துரத்தினார்கள். இதில் 2 பேர் மட்டும் சிக்கினார்கள்.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பாத்துரை,  பெத்த பெருமாள் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் உடந்தையாக இருந்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுடன்காடு கிராமத்தை சேர்ந்த வேல்ராஜ், என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் செல்வா, 5 நாட்களுக்கு பிறகு 24.05.2014 அன்று காலை 11.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

செல்வா இறந்ததை அடுத்து மேலப்பாளையம் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

இந்த வழக்கில் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக முறப்பநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த பொன் இசக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பார்த்தீர்களா நண்பர்களே....

மது போதை எப்படி மனிதனை மிருகமாக மாற்றுகிறது என்பதை...

போதையில் கலாட்டா செய்ததுடன்,  நடத்துநரை எரித்து  கொலையும் செய்த அந்த நான்கு இளைஞர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுவால் தங்களது வாழ்க்கையை சிதைத்துக் கொண்டனர். சீரழித்துக் கொண்டனர்.

இதன்மூலம்,  அவர்களது குடும்பத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டனர்.

இப்படிப்பட்ட மது மனிதனுக்கு தேவையா....?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: