Tuesday, October 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (101)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 101

சென்னையில் போதை டிரைவரால் நடந்த விபரீதம்....! 

தறிகெட்டு ஓடிய கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி....!!

சென்னை வேளச்சேரி விஜயநகரில் நள்ளிரவில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் நடைபாதையில் படுத்திருந்த தம்பதியும் மூதாட்டியும் உயிரிழந்தனர்.

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது.

குடிபோதையில் காரை ஓட்டிய டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி செல்லும் சாலையில் பாரதி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதை ஒட்டியுள்ள நடைபாதையில் ஆறுமுகம் என்பவர், மனைவி ஐஸ்வர்யா  ஒரு வயது மகன் அன்பு ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஐஸ்வர்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தம்பதியர் இருவரும் தெருக்களில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பால் கவர், பேப்பர், இரும்பு போன்றவற்றை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இரவில் நடைபாதையிலேயே படுத்து தூங்குவர்.

இந்நிலையில், 12.10.14 அன்று இரவு குழந்தையுடன் நடைபாதையில் படுத்திருந்தனர். இவர்களின் அருகில் 63 வயது மூதாட்டி ஒருவரும் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து பயங்கர வேகத்தில் தாறுமாறாக வந்த கார், திடீரென நடைபாதையில் ஏறியது.

அங்கு படுத்திருந்த ஒரு மாடும் நாயும் கார் மோதி இறந்தன. அதன்பிறகும் வேகம் குறையாத கார் தாறுமாறாக சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யா மற்றும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. மூதாட்டியை சிறிது தூரம் இழுத்துச் சென்ற கார், பஸ் நிறுத்தத்தில் இருந்த போர்டை இடித்துத் தள்ளியபடி சாலையில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி, அதே இடத்திலேயே இறந்தார்.சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஏறி இறங்கியதில் ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது. ஆறுமுகத்தின் மகன் அன்பு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் அமெரிக்கன் பள்ளி மற்றும் ஐ.டி. கம்பெனி இருப்பதால், இரவில் எப்போதும் போலீஸ் ரோந்து வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். நள்ளிரவில் விபத்து நடந்ததும் விரைந்து வந்த போலீஸார், காரில் இருந்து தப்பியோட முயன்ற 3 பேரை விரட்டினர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர்.

பிடிபட்டவர், பெருங்குடி கல்லுக் குட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர் கள் சசிக்குமார் தேவா ஆகியோரும் மது குடித்துவிட்டு காரில் வந்துள்ளனர்.

காரை சிவக்குமார் ஓட்டியுள்ளார். போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, 3 பேரின் உயிரை பறித்து விட்டனர்.

தப்பியோடிய டிரைவர் சசிக்குமார், தேவாவை போலீஸார் கைது செய்தனர்.

தொடரும் நடைபாதை விபத்து சோகங்கள்: கடுமை காட்டாத போலீஸார்.

சென்னையில் 2007-ம் ஆண்டு பணக்கார வியாபாரி ஒருவரின் 14 வயது மகன் தாறுமாறாக ஓட்டிய சொகுசு கார், கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை நடைபாதையில் படுத்திருந்த 11 பேர் மீது ஏறியது. இதில் இருவர் பலியாயினர். இளையோர் நீதிமன்றத்தில் சரண டைந்த அந்த சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளி தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் மீது ஷாஜி என்ற பணக்கார இளைஞர் குடிபோதையில் ஓட்டி வந்த கார் மோதியது. இதில், சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஷாஜி வெளிநாடு தப்பிச்செல்ல, வேறொருவரை சரண் அடைய வைத்து வழக்கை முடிக்கப் பார்த்தனர்.

இதேபோல கடந்த ஜூன் மாதம் சென்னை சூளையில் கீதா என்பவர், நடைபாதையில் அமர்ந்து தனது 3 வயது மகன் ஹிருத்திக் ரோஷனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் மோதியதில் சிறுவனின் 2 கால்களும் துண்டாகின. அதை மருத்துவர்களால் இணைக்க முடியாத நிலையில், தற்போதும் அந்த குழந்தையின் நிலை பரிதாபமாகவே உள்ளது. கீதாவுக்கும் காலில் படுகாயம் ஏற்பட்டது.

மும்பையில் 2002-ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் போதையில் ஓட்டிச் சென்ற கார் நடைமேடையில் ஏறியதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரில் கடந்த ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று எம்.ஜி. சாலையில் ஆட்டோ மீது மோதினார். இதில் ஒருவர் இறந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 A (அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்) பிரிவின்படி கொடுக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனை, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மது போதையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்று தெரிந்தே இந்த தவறை செய்கின்றனர். அதனால் மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு 304(2) பிரிவின் படி (மரணம் விளைவிக்கும் குற்றம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற பயங்கரமான விபத்துகளின்போது போலீஸார் வழக்கு பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுகின்றன. போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களில் பலர், வசதியானவர்களாகவோ அல்லது அதிகார பின்புலம் கொண்டவர் களாகவோ உள்ளனர். அதனால், அவர்களிடம் போலீஸார் கடுமையை காட்டுவதில்லை. சில நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பணத்தின் மூலம் வழக்கை தீர்த்து வைக்கவே முயல்கின்றனர்.

எது எப்படியோ, மதுவால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவது தொடர்கதையாகவே இருக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: