Tuesday, April 2, 2024

மத நல்லிணக்கம் .....!

மத நல்லிணக்கம் - முஸ்லிம்களும் முத்துவலூர் துர்கா பகவதி கோவிலும்...!

* கோவிலின் திருப்பணிக்கு முஸ்லிம்கள் 38 லட்சம் நிதியுதவி

*இ.யூ.முஸ்லிம் லீக் மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறது

*கொண்டோட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்த தாழையூர் இந்துக்கள் இடம் அளித்து உதவி 

* முத்துவலூரில் வெறுப்பு பேச்சுக்கு கொஞ்சமும் இடமில்லை

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மதத்தை அடிப்படையாக வைத்து, அரசியல் இலாபம் பெற முயற்சி செய்து வருகின்றன. 

400 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவோம் என ஒருசில பா.ஜ.க. தலைவர்கள் கொக்கரித்து வருகிறார்கள். எனினும், தற்போதைய சூழ்நிலையில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200 இடங்களைப் கைப்பற்றுவதே கேள்விக்குறியாகி இருக்கிறது. இருந்தும் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை, தன்மையை, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளில் பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

பா.ஜ.க.வின் இந்த முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு சிறிதும் இல்லை என்பதற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் மத நல்லிணக்கம் நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல எடுத்துக்காட்டை தான், நாம் இந்த கட்டுரையில் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறோம். 

முத்துவலூர் பகவதி கோவில்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி அருகேயுள்ள 430 ஆண்டுகள் பழமையான முத்துவலூர் துர்கா பகவதி கோயில், கேரள மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் மிகவும் பிரபலமாக பேசப்படும் புகழ்பெற்ற பழமையாக கோவிலாகும். இத்தகைய பழமையான கோவில் இந்து, முஸ்லிம் மக்கள் மத்தியில், மத நல்லிணக்கத்தை மேலும் மிளிரச் செய்து வருகிறது. 

கோவிலின் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்கள், வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள், சவுதி அரேபியாவில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சுலைமான் ஹாஜி ஆகியோர் கோவிலின் திருப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற தாரளமாக நிதியுதவியை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து பெருமையுடன் கூறியுள்ள கோவில் நிர்வாகத்தினர், "அரை நூற்றாண்டு கால இடைவெளிக்கு பிறகு தற்போது கோவிலின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு முஸ்லிம்கள் நிதியுதவி அளித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர். 

இ.யூ.முஸ்லிம் லீக் ஒத்துழைப்பு:

கோவிலின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் மே மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை கோவிலில் சாமி சிலை நிறுவும் விழா நடைபெறுகிறது. இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும் என விரும்பிய முத்துவலூர் துர்கா பகவதி கோயில் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கேரள மாநில தலைவர் பாணக்காடு செய்யத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙளை சந்தித்து, முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன்,  கோவிலின் தந்திரி பத்மநாபன் உன்னி, பாணக்காடு செய்யத் சாதி அலி ஷியாங் தங்ஙளை நேரில் சந்தித்து, தனது அன்பை வெளிப்படுத்தியதுடன், முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கோவிலுக்கு இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு, தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள தந்திரி பத்மநாபன் உன்னி, இ.யூ.முஸ்லிம் லீக் மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும், கோவிலிலின் சீரமைப்பு பணிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரர்கள் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். 

தந்திரி பத்மநாபன் உன்னி, முத்துவலூர் துர்கா பகவதி கோயிலுக்கு மட்டுமல்லாமல், மலப்பார் பகுதியில் உள்ள பல கோவில்களின் தந்தரியாகவும் இருந்து வருகிறார். இத்தகையை சூழ்நிலையில் அண்மையில் சினேகா சங்கமன் சார்பில், கோவில் வளாகத்தில் வரவேற்பு குழு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

அப்போது பேசிய தந்திரி பத்மநாபன் உன்னி, கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, அளித்த ஒத்துழைப்புகளை எடுத்துக் கூறி, மத நல்லிணக்கத்திற்கும், அன்பிற்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என பெருமிதம் தெரிவித்தார். "அன்பின் செய்தி" என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட தந்திரியின் இந்த உரை பின்னர், பி.கே.குஞ்ஞாலிக்குட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முஸ்லிம்களின் பங்களிப்பு:

முத்துவலூர் துர்கா பகவதி கோயிலுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் தொடர்ந்து அளித்துவரும் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்களை, வரலாற்று ரீதியாக சுட்டிக் காட்டியுள்ள தந்திரி பத்மநாபன் உன்னி, இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருவதையும் குறிப்பிட்டார். 

கொண்டோட்டியைச் சேர்ந்த முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக  திருரங்கடி வரை நடந்து சென்று தங்களை வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்ததது. இதனால் பலர் தொழுகையை தவறிவிட வேண்டிய நிலை இருந்து வந்ததால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டோட்டி அருகே பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் விரும்பினர். எனவே, கோவிலின் உரிமையாளராக இருந்த தாழையூர் மூசாத்தை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர், உடனடியாக பள்ளிவாசல் உருவாக்க இடம் அளித்து தனது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக தற்போது பழையங்கடி பள்ளிவாசல் மிக கம்பீரமாக இருந்து வருகிறது என்ற தந்தரி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இதேபோன்று, பேசிய கோவில் குழுத் தலைவர் பி.சந்திரன், இந்த பகுதியில் வாழும் முஸ்லிம் சமுதாய மக்கள், கோவில் புரனமைப்புப் பணிக்கு 38 லட்சம் ரூபாய் வசூல் செய்து அளித்தாக கூறினார். 

வெறுப்புக்கு இடமில்லை:

நாட்டின் சில பகுதிகளில் வெறுப்பு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், முத்துவலூரில் அதற்கு கொஞ்சமும் இடமில்லை என தாழையூர் குடும்பத்தைச் சேர்ந்த வினய ராஜ் அடித்துக் கூறுகிறார். முத்துவலூர் ஒரு மத நல்லிண்க்க பூமி என்பதை,  அங்குள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அன்பும் சகோதரத்துவமும் எடுத்துக் காட்டுகிறது. அன்பு என்ற மொழியுடன் மனங்கள் இணைந்தால், வெறுப்புக்கும், வன்மத்துக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் இடமில்லை. முத்துவலூர் போன்ற மத நல்லிணக்கம் நாடு முழுவதும் மலர வேண்டும். அதுதான் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பலன் அளிக்கும். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சும்மா....!

 சும்மா பாருங்க....!

கண்டிப்பாக சிரி்ப்பீர்கள்...!



அழகோ....அழகு....!

 Cappadocia, Turkey...!

அழகிய காட்சி.....அற்புதமான  காட்சி....!



நாடாளுமன்றத் தேர்தலும் முஸ்லிம்களும்...!

 நாடாளுமன்றத் தேர்தலும், தென்னிந்திய முஸ்லிம்களும்...!

நாடாளுமன்றத் தேர்தல் களம் கோடை வெயிலை விட, மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி, மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், முதல்கட்டத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் கொடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

இதேபோன்று, அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆதரவு திரட்டி வருகிறார். தனது தேர்தல் பிரச்சாதத்தின்போது, முதலமைச்சர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு கருத்தும், வாதங்களும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் இருந்து வருகிறது. மிகச் சிறப்பான பிரச்சாரம் மூலம் தமிழக மக்களின் மனதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்து வருகிறார். இதன்மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அமோக வாக்குககள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம்களின் நிலைப்பாடு:

18வது மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருந்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் ஏராளம் என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையின மக்களும் தற்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். 

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை விட, யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாகவும், தெளிவாகவும் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிம் தங்களது வாக்குகள் பிரிந்து, சிதறி போவதால், அதன் பலன் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்று சேர்க்கிறது என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள். 

தற்போது, நாடு எத்தகையை திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது? என்பதை படித்த சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, படிக்காத அப்பாவி மக்களும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை மிகவும் சிறப்பான முறையில் அவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

தென்னிந்திய முஸ்லிம்கள்:

கடந்த தேர்தலில், தென்னிந்திய மாநிலங்கள் மீது மிகப்பெரிய அளவுக்கு கவனம் செலுத்தாத பா.ஜ.க. தற்போது, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தென் மாநிலங்களில் இருந்து அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க. விரும்பி, அதற்கான செயல் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. இத்தகையை சூழ்நிலையில், தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உட்பட மற்ற சிறுபான்மையின மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க செய்வார்களா? என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டு இருக்கின்றன. 

ஐந்து தென்னிந்திய மாநிலங்களில், முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் வியப்பு அளிக்கும் வகையில் நன்கு இருந்து வருகிறது. கேரளாவில் 27 சதவீதமும், கர்நாடகாவில் 12.5 சதவீதமும், தெலுங்கானாவில் 12.7 சதவீதமும், ஆந்திராவில் 9.56 சதவீதமும், தமிழ்நாட்டில் 6 சதவீதமும் அளவுக்கு முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். 

தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களும், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயல்பட்டால், ஒன்றியத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதன்மூலம் ஆட்சி மாற்றத்தில் தென்னிந்திய முஸ்லிம்கள் முக்கிய பெரும் பங்கு வகிக்க முடியும்.

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு:

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தென்னிந்திய முஸ்லிம்களின் தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமல்ல, தங்களது வாக்குகள் சிதறிப் போகாமல் இருக்கும் வகையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்கும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இருக்க வேண்டும். அப்படி ஆதரவு அளித்தால், தங்களது வாக்குகள் வீணாகிவிடும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

தமிழகத்தில் உள்ள 6 சதவீத முஸ்லிம்களும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே தங்களது  வாக்குகளை ஒருங்கிணைந்து அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். இது தேசிய அளவில் அரசியல் படத்தை மாற்றும்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், இங்குள்ள முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். கேரளாவில் உள்ள 27 சதவீத முஸ்லிம் மக்கள் அனைரும் 20 இடங்களும் ஒரே வழியில் சென்றால், தேசிய அளவில் அரசியல் படத்தை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.

தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ்,ஆகிய கட்சிகள்தான் முக்கிய அரசியல் கட்சிகளாக உள்ளன. பா.ஜ.க. மூன்றாவது இடத்திலும், ஏஐஎம்ஐஎம் நான்காவது இடத்திலும் உள்ளன. மாநில அரசியலில், தேசிய அளவில், முஸ்லிம்கள் பிராந்தியக் கட்சி விருப்பத்தைத் தவிர்த்துவிட்டு, தேசிய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும். தெலங்கானாவில் உள்ள 12.7 சதவீத முஸ்லிம்கள், ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். சமீபத்தில் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, அக்கட்சியின் மறுமலர்ச்சியைக் காட்டுகிறது. 

வழிக்காட்டும் கர்நாடகா முஸ்லிம்கள்:

கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பா.ஜ.க.வை வீழ்த்தினர். சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது ஒரு வாக்கு கூட சிதறி போய்விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 

கர்நாடகாவில், 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12.91 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் பா.ஜ.க. ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. மாறாக, காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இருப்பினும், ஒற்றுமையுடன் வாக்களிப்பதன் மூலம், 28 மக்களவைத் தொகுதிகளில், 20 தொகுதிகளைப் பெற முடியும். இதன்மூலம் கர்நாடக மாநில முஸ்லிம் வாக்குகள், தேசிய மட்டத்தில் அரசியல் படத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

ஆந்திரப் பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு  மும்முனைப் போட்டி இருந்து வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் தேர்வு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசலா அல்லது இந்திய தேசிய காங்கிரசா என்ற கேள்வியாக இருந்து வருகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பா.ஜ.க.விற்கு ஆதரவான நிலைப்பாட்டில், இருந்தாலும், தனியே போட்டியிட்டு வருகிறார். எனவே, ஆந்திர மாநில முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த செயல் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

மறந்துவிடக் கூடாது:

18வது மக்களவைத் தேர்தல் என்பது, இந்தியாவில் வாழும் அனைத்து சமுதாயங்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களைப் பொறுத்தும், மிகவும் முக்கியமான தேர்தலாகும். தங்களது ஜனநாயக பலத்தை நிலைநாட்ட முஸ்லிம்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்,செயல்பாடுகள், பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றை தங்கள் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, விழித்தெழுந்து, தங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியா கூட்டணிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும். தென்னிந்திய முஸ்லிம்கள் மட்டுமல்ல, வட மாநில முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டிய தேர்தல், இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எனவே, வாக்கு நாளில் முதல் ஆளாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமும் கடமை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, April 1, 2024

அழகோ....அழகு....!

 அழகோ....அழகு....!

அற்புதமான அழகு....!!



அழகு....!

 அழகோ.....அழகு.....!

அற்புதமான அழகை கண்டு ஆனந்தம் அடையுங்கள்....!



உயர்ந்த மனிதர்....!

"செய்தித்தாள்களை விநியோகிக்கும் சிறுவனாக பணிபுரிந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்த மனிதர்"

மனித வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். வாழ்க்கையில் எதுவும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. தொடர் போராட்டம், தொடர் முயற்சி, தொடர் உழைப்பு என மனிதன் தொடர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றி வந்தால் மட்டுமே, அவன் தன்னுடைய இலட்சியத்தை அடைய முடியும். இலக்கை எட்ட முடியும். 

மனிதனுக்கு அழகிய, அற்புதமான வாழ்க்கையை கொடுத்துள்ள ஏக இறைவன், அவனை தொடர்ந்து முயற்சி செய்யும்படி அறிவுறுத்துகிறான். ஏக இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்துகொண்டு, உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதை இறைவன் விரும்புவதில்லை. ஏக இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அத்துடன், தன் மீதும் நம்பிக்கை வைத்து ஒரு மனிதன் உழைத்தால், அவனுக்கு நிச்சயம் இறைவனின் கருணை கிடைக்கும். அவனது வெற்றிக்கு ஏக இறைவன் எப்போதும் துணை நிற்பான். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உலகில் இருந்து வருகின்றன. 

வறுமையிலும் வாழ்ந்து, வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலையிலும், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான, தன்னம்பிக்கையான மனிதரை தான் நாம் இந்த கட்டுரையில் சந்திக்க உள்ளோம். 

தன்னம்பிக்கை மனிதர் அப்துல் நாசர்: 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த அப்துல் நாசர், தனது ஐந்து வயதிலேயே தந்தையை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தந்தை மறைந்தபிறகு, அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. நாசரின் தாய், வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீட்டு உதவியாளராக பல வீடுகளில் பணிபுரிந்து, குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். 

எனினும், போதிய வருமானம் இல்லாத காரணத்தால், அப்துல் நாசரும், அவரது உடன்பிறப்புகளும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். இதன் காரணமாக, அப்துல் நாசர் தனது பள்ளிப் படிப்பின் 13 ஆண்டுகளை கேரள அனாதை இல்லங்களில் கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். 

பத்து வயதில் ஹோட்டல் சுத்தம் செய்பவராகவும் சப்ளையராகவும் பணியாற்றத் தொடங்கிய அவர்,  கல்வியில் தனக்கு இருந்துவந்த ஆர்வத்தைப் பூர்த்திச் செய்யும் வகையில், பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் தனது 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர், தலச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்த அவர், மிகவும் வறுமையில் வாழ்ந்தாலும், மிகச் சிறப்பாக படித்து பட்டம் பெற்றார். 

இப்படி பட்டப்படிப்பு முடிக்க, சிறிதும் கவுரவம் பார்க்காமல், நாசர், செய்தித்தாள் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அத்துடன், பொது தொலைபேசி சேவை மையத்தில் பணி என பல்வேறு பணிகளை மேற்கொண்டு, அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு, கல்விக் கட்டணம் செலுத்தி, தனது இலக்கை எட்டினார். 

அரசு பணியில் ஆர்வம்:

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை முடித்த அப்துல் நாசர், கடந்த 1994ஆம் ஆண்டு, கேரள அரசின் சுகாதாரத்துறையில் பணிக்கு சேர்ந்தார். பணியில் இருந்தபடியே தனது முதுகலைப் படிப்பையும் முடித்த நாசருக்கு, ஐ.ஏ,.எஸ். அதிகாரியாக உயர வேண்டும் என ஆசையும் கனவும் எப்போதும் மனதில் எழுந்துக் கொண்டே இருந்தது. 

நாசரின் உயர்ந்த எண்ணம் நிறைவேறும் வகையில் ஏக இறைவனும் கூட, அவருக்கு துணையாக இருந்துள்ளான். ஆம், சிறப்பான பணியின் மூலம் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நாசர், கடந்த 2006ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவியில் அமர்த்தப்பட்டார். கேரள மாநில சிவில் சர்வீஸ் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட அவர், 2015ஆம் ஆண்டில் கேரளாவின் சிறந்த துணை ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்வு:

மிகச் சிறந்த பணி, மக்கள் நலனில் ஆர்வம், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டில், பி அப்துல் நாசர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2019இல் கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கேரள அரசின் வீட்டு வசதி ஆணையராக நாசர் பணியாற்றினார்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதாமல், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே, அப்துல் நாசர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை கண்டு அஞ்சாமல், துணிச்சலுடன், தைரியத்துடன், தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி இலக்கை அடையலாம் என்பதற்கு பி.அப்துல் நாசர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம். 

தனது இளமைப் பருவத்தை வறுமையில் கழித்த அப்துல் நாசர், தற்போது ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உயர்ந்து இருக்கிறார். வறுமையை வென்று வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து இருக்கிறார்.

சிறந்த எடுத்துக்காட்டு:

வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞர்கள், அப்துல் நாசர் போன்றவர்களின் வாழ்க்கைய ஒரு நல்ல எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு, எந்தவித அச்சமும் இல்லாமல், ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால், தங்களது கனவுகள் மெய்ப்படும் என அவர்கள் உறுதியாக நம்பு வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் இளைஞர்கள் தோல்வியைச் சந்திக்க மாட்டார்கள். அப்படி தோல்வியைச் சந்தித்தாலும், பின்னர் சுதாகரித்துவிட்டு, மீண்டும் எழுந்து நின்று போராடி, வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிக்கனிப் பறிப்பார்கள். அதுதான், அப்துல் நாசரின் வெற்றிப் பயணம் நமக்கு சொல்லும் படமாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்