Monday, April 1, 2024

உயர்ந்த மனிதர்....!

"செய்தித்தாள்களை விநியோகிக்கும் சிறுவனாக பணிபுரிந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்த மனிதர்"

மனித வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். வாழ்க்கையில் எதுவும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. தொடர் போராட்டம், தொடர் முயற்சி, தொடர் உழைப்பு என மனிதன் தொடர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றி வந்தால் மட்டுமே, அவன் தன்னுடைய இலட்சியத்தை அடைய முடியும். இலக்கை எட்ட முடியும். 

மனிதனுக்கு அழகிய, அற்புதமான வாழ்க்கையை கொடுத்துள்ள ஏக இறைவன், அவனை தொடர்ந்து முயற்சி செய்யும்படி அறிவுறுத்துகிறான். ஏக இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்துகொண்டு, உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதை இறைவன் விரும்புவதில்லை. ஏக இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அத்துடன், தன் மீதும் நம்பிக்கை வைத்து ஒரு மனிதன் உழைத்தால், அவனுக்கு நிச்சயம் இறைவனின் கருணை கிடைக்கும். அவனது வெற்றிக்கு ஏக இறைவன் எப்போதும் துணை நிற்பான். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உலகில் இருந்து வருகின்றன. 

வறுமையிலும் வாழ்ந்து, வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலையிலும், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான, தன்னம்பிக்கையான மனிதரை தான் நாம் இந்த கட்டுரையில் சந்திக்க உள்ளோம். 

தன்னம்பிக்கை மனிதர் அப்துல் நாசர்: 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த அப்துல் நாசர், தனது ஐந்து வயதிலேயே தந்தையை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தந்தை மறைந்தபிறகு, அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. நாசரின் தாய், வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வீட்டு உதவியாளராக பல வீடுகளில் பணிபுரிந்து, குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். 

எனினும், போதிய வருமானம் இல்லாத காரணத்தால், அப்துல் நாசரும், அவரது உடன்பிறப்புகளும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். இதன் காரணமாக, அப்துல் நாசர் தனது பள்ளிப் படிப்பின் 13 ஆண்டுகளை கேரள அனாதை இல்லங்களில் கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். 

பத்து வயதில் ஹோட்டல் சுத்தம் செய்பவராகவும் சப்ளையராகவும் பணியாற்றத் தொடங்கிய அவர்,  கல்வியில் தனக்கு இருந்துவந்த ஆர்வத்தைப் பூர்த்திச் செய்யும் வகையில், பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் தனது 12ஆம் வகுப்பை முடித்தார். பின்னர், தலச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் சேர்ந்த அவர், மிகவும் வறுமையில் வாழ்ந்தாலும், மிகச் சிறப்பாக படித்து பட்டம் பெற்றார். 

இப்படி பட்டப்படிப்பு முடிக்க, சிறிதும் கவுரவம் பார்க்காமல், நாசர், செய்தித்தாள் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அத்துடன், பொது தொலைபேசி சேவை மையத்தில் பணி என பல்வேறு பணிகளை மேற்கொண்டு, அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு, கல்விக் கட்டணம் செலுத்தி, தனது இலக்கை எட்டினார். 

அரசு பணியில் ஆர்வம்:

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பை முடித்த அப்துல் நாசர், கடந்த 1994ஆம் ஆண்டு, கேரள அரசின் சுகாதாரத்துறையில் பணிக்கு சேர்ந்தார். பணியில் இருந்தபடியே தனது முதுகலைப் படிப்பையும் முடித்த நாசருக்கு, ஐ.ஏ,.எஸ். அதிகாரியாக உயர வேண்டும் என ஆசையும் கனவும் எப்போதும் மனதில் எழுந்துக் கொண்டே இருந்தது. 

நாசரின் உயர்ந்த எண்ணம் நிறைவேறும் வகையில் ஏக இறைவனும் கூட, அவருக்கு துணையாக இருந்துள்ளான். ஆம், சிறப்பான பணியின் மூலம் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நாசர், கடந்த 2006ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவியில் அமர்த்தப்பட்டார். கேரள மாநில சிவில் சர்வீஸ் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட அவர், 2015ஆம் ஆண்டில் கேரளாவின் சிறந்த துணை ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்வு:

மிகச் சிறந்த பணி, மக்கள் நலனில் ஆர்வம், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டில், பி அப்துல் நாசர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2019இல் கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கேரள அரசின் வீட்டு வசதி ஆணையராக நாசர் பணியாற்றினார்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதாமல், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே, அப்துல் நாசர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை கண்டு அஞ்சாமல், துணிச்சலுடன், தைரியத்துடன், தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி இலக்கை அடையலாம் என்பதற்கு பி.அப்துல் நாசர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம். 

தனது இளமைப் பருவத்தை வறுமையில் கழித்த அப்துல் நாசர், தற்போது ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உயர்ந்து இருக்கிறார். வறுமையை வென்று வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து இருக்கிறார்.

சிறந்த எடுத்துக்காட்டு:

வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞர்கள், அப்துல் நாசர் போன்றவர்களின் வாழ்க்கைய ஒரு நல்ல எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு, எந்தவித அச்சமும் இல்லாமல், ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால், தங்களது கனவுகள் மெய்ப்படும் என அவர்கள் உறுதியாக நம்பு வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் இளைஞர்கள் தோல்வியைச் சந்திக்க மாட்டார்கள். அப்படி தோல்வியைச் சந்தித்தாலும், பின்னர் சுதாகரித்துவிட்டு, மீண்டும் எழுந்து நின்று போராடி, வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிக்கனிப் பறிப்பார்கள். அதுதான், அப்துல் நாசரின் வெற்றிப் பயணம் நமக்கு சொல்லும் படமாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: