Sunday, April 28, 2024

குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்...!

ஒவ்வொரு பிரச்சாரத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு....!

மோடியின் குற்றச்சாட்டுகளும், உண்மை நிலையும்...!!

\

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டப் பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகும், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை சிறிதும் பொருட்படுத்தாமல், மதிக்காமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன? அதனால் மக்கள் அடைந்த பயன்கள் என்ன? என்பது குறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு வார்த்தையும் பிரதமர் மோடி பேசி, மக்களிடம் வாக்குகளை கேட்பதில்லை. 

மாறாக, மந்திர்-மஸ்ஜித் போன்ற பிரச்சினைகள் மீண்டும் எழுப்பி, மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்களை  பேசி, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அவர் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறார். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி சுமத்தும் குற்றச்சாட்டுகளும், அதன் உண்மைத்தன்மை குறித்தும், Scroll.in (சுருள்) என்ற ஊடகம் சரிபார்த்து, மோடியின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறது. முஸ்லிம்கள் மீது மோடி சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி செய்யும் விமர்சனங்கள் என்ன?  போன்ற பல்வேறு கேள்விக்கு சரிபார்த்தல் என்ற புதிய வகை முயற்சியில், உண்மைத்தன்மையை நாட்டின் முன்  Scroll.in ஊடகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அந்த தகவல்களில் சிலவற்றை இந்த கட்டுரையில் நாம் மணிச்சுடர் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

மோடியின் குற்றச்சாட்டுகள்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பெரும்பான்மை இந்து மக்களின் சொத்துக்களைப் பறித்து, ஊடுருவல்காரர்களான முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என குற்றம்சாட்டினார். மேலும் முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் சுமத்தி, வெறுப்பு பேச்சை கக்கினார். மேலும், இந்து பெண்களின் நகைகளை பறித்து அவர்களின் தாலியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 23ஆம் தேதி நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் மோடி விஷத்தைக் கக்சினார். 

மோடியின் குற்றச்சாட்டுகள் உண்மையா, அதன் உண்மைத் தன்மை என்ன? என உண்மைச் சரிபார்ப்பு செய்தபோது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து-முஸ்லிம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை என்பது தெரியவருகிறது. அத்துடன், இந்து மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிக்கையில் எந்தொரு வாக்குறுதி அளிக்கப்படவில்லை. தாலி குறித்தும் தேர்தல் அறிக்கையில் எந்த வார்த்தையும் இல்லை. 

இதேபோன்று, நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கே அனைத்திலும் முன்னுரிமையை முந்தைய காங்கிரஸ் அரசு அளித்தாக மோடி குற்றம் சுமத்தினார். இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும்போது, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நாட்டில் வாழும் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில், திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்தது. சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் வகையில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது. 

ஊடுருவலும் அதிக குழந்தைகளும்:

இந்திய முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும் அவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் மோடி குற்றம் சுமத்தி வெறுப்பு பேச்சை பேசினார். இதுகுறித்து ஆய்வு செய்தபோது, முஸ்லிம்கள் "ஊடுருவுபவர்கள்" என்று கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.   மோடி அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தரவு எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. 

இதேபோன்று, தனியார் சொத்துக்களை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகவும், இதுகுறித்து  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அப்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. மாறாக, நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்கள் குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் அனைத்து மக்களின் உரிமைகளும் முறையாக வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தனியார் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பங்கீடு செய்யப்படும் என ஒருபோதும் காங்கிரஸ் அறிக்கையில் உறுதி அளிக்கப்படவில்லை. 

இதேபோன்று, கிராம மக்களின் நிலங்கள்,  சொத்துக்களை பறிக்கவும், அவர்களின் சேமிப்பு பணத்தை பறிமுதல் செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக மோடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அதுபோன்ற எந்த திட்டமும் காங்கிரஸ் அறிக்கையில் இல்லை. 

மத ரீதியாக இடஒதுக்கீடு:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மத ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டினார். நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும், இதன்மூலம், காங்கிரஸ் மத ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். 

இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது மத ரீதியான முறையில் இல்லை என்பதும், ஆர்.நாகன்னா கவுடா ஆணையம் அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எச்.டி.தேவ கவுடா அரசு, அனைத்து முஸ்லிம்களையும் ஓ.பி.சி. பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு 4 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதாகவும், ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோன்று, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இதுபோன்று, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

அனைத்தும் பொய் பிரச்சாரம்:

முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் வரும் மே 7ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 12 மாநிலங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும், தொடர்ந்து பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் குறித்து வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. 

பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் முஸ்லிம்கள் மீதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது சுமத்தும் அனைத்து குற்றச்சாட்டுகளும், பொய் என்பது, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும்போது உறுதியாக தெரியவருகிறது. 

18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடையும் என தற்போதைய தரவுகள் மூலம் தெரியவருகிறது. அதன் காரணமாக பதற்றம் அடைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், வேறு வழி தெரியாமல், முஸ்லிம்கள் குறித்து வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நாட்டு மக்கள் தற்போது காது கொடுத்துக் கேட்க தயாராக இல்லை. மோடி அரசின் பத்து ஆண்டு கால தோல்வி குறித்து, தென்மாநில மக்களிடம் மட்டுமல்ல, வட மாநில மக்களிடமும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. 

எனவே, பா.ஜ.க. தலைவர்களின் இந்த பொய் பிரச்சாரங்கள், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு எந்தவித பலனையும் தராது. 18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்பதை நாடும், நாட்டு மக்களும் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: