Tuesday, April 16, 2024

கேள்வி...்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 

செய்த சாதனைகள் என்ன?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி….!!

வாணியம்பாடி,ஏப்.17- தமிழகத்தில் தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் போல, ஒன்றிய பா.ஜ.க. அரசு பத்து ஆண்டுகளில் சாதனைகளை செய்து இருக்கிறதா என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பியுள்ளர். 

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குகளை சேகரித்தார். 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 16.04.2024 அன்று பேராசிரியர் தீவிரப் பிரச்சாரம் செய்து, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

வாணியம்பாடியில் பிரச்சாரம்:

ஆலங்காயம், வாணியம்பாடி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் இருந்தபடி, பிரச்சாரம் செய்த அவர், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பேராசிரியர், 18வது மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர் கூறினார். 

தி.மு.க. அரசின் சாதனைகள்:

தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் என தி.மு.க. அரசின் சாதனைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே போய்கிறது.

அனைத்துத் தரப்பு மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பான முறையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் காரணமாக தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு அருமையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை தொடங்க ஆர்வத்துடன் வந்துக் கொண்டு இருக்கின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தி.மு.க. அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

பா.ஜ.க.வின். சாதனைகள் என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. அதன் பட்டியல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறார். 

ஆனால், ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செய்த பணிகள் என்ன? வேலைவாய்ப்புகளைப் பெருக்க, அதிகரிக்கச் செய்த திட்டங்கள் என்ன? இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைப் பட்டியலை வெளியிட்டு மக்கள் மத்தியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதைப் போன்று, பா.ஜ.க. தலைவர்கள் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க முடியுமா? வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, பா.ஜ.க.வினர் மக்களை குழப்பி வருகிறார்கள். 

கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவொரு சாதனைகளையும் நிகழ்த்தாமல் தற்போது மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வர பிரதமர் மோடி, ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால், நாட்டு மக்கள் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியைக் குறித்து நன்கு விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள். 

பத்து ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை இனி வரும் நாட்களில் அவர்களால் செய்ய முடியுமா? என மக்கள் கேள்விக் கேட்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.விற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். 

மறக்காமல் வாக்களிக்க வேண்டும்:

வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் கட்டாயம் கலந்துகொண்டு தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் வீடுகளில் உள்ள அனைவரும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். 

தி.மு.க. அரசின் சாதனைகயும், பா.ஜ.க.வின் பத்து ஆண்டுக் கால வேதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும். வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். எனவே, மக்கள் மறக்காமல் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

பங்கேற்றவர்கள்:

வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், திருப்பத்தூர் மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் எஸ்..டி.நிஸார் அகமது, வாணியம்பாடி நகரத் தலைவர் நரி முஹம்மது நயீம், துணைத் தலைவர் பாருக், இ.யூ.முஸ்லிம் லீக் பேச்சாளர் குண்டு பைசான், வர்த்தகர் அணியைச் சேர்ந்த முதஸ்சிர் காலித், நூருத்தீன் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், திரளாக கலந்துக் கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தீவிரப் பிச்சாரம் செய்தபோது, அவருடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர் அப்துல் பாசித் உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதுடன், பிரச்சாரத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் செய்தனர். இதேபோன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் செய்து இருந்தனர். பேராசிரியர் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: