Saturday, April 20, 2024

முதல் கட்டத் தேர்தல்....!

முதல் கட்டத் தேர்தலும், மக்கள் எழுச்சியும்...!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் ஜனநாயகத் திருவிழா,  19.04.2024 அன்று தொடங்கி, முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் இருக்கும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழகம் உட்பட தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள் அனைத்திலும், வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றினார்கள். 

மக்கள் ஆர்வம்: 

தேர்தல் நடைபெற்ற 102 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலர் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்களில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களில் பெரும்பாலோர் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதில்லை. ஆனால், இந்த முறை, சென்னை, பெங்களுரூ உள்ளிட்ட பல நகரங்களில் பணிபுரியும் தமிழர்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பேருந்து, ரயில் ஆகியவற்றில் பயணம் செய்து, சொந்த ஊர்களுக்கு வாக்குப்பதிவுக்கு முதல் நாளே கிளம்பிவிட்டார்கள். 

இதனால், சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. தென் மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் பயணிகள் நிரம்பி வழிந்தார்கள். நூற்றுக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் நின்றுக் கொண்டே, பயணம் செய்ய வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது. 

இதேபோன்று, பெங்களுரூ மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் ஆகியவற்றிலும் தமிழகத்திற்குச் செல்லும் ரயில்களில் பயணம் செய்ய வாக்காளர்கள் திரணடனர். இதனால், அங்கும் மக்கள் கூட்டம் வெள்ளம் போன்று காட்சி அளித்தது. 

மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற நகரங்களில் இருந்தும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் சென்றனர். இதனால், பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இருந்தது. 

மக்கள் எழுச்சி: 

நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற ஒரு மக்கள் எழுச்சி முன்பு யாரும் கண்டு இருக்கவில்லை. வாக்களிப்பதை ஒரு கடமையாக வாக்காளர்கள் கருதவில்லை. எனவே, ஒவ்வொரு தேர்தலின்போது, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு அவர்கள் பல சிரமங்களை சுமந்துக் கொண்டு செல்வதில்லை. 

ஆனால், இந்த முறை, நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு, கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியே முக்கிய காரணம் என கூறலாம். பேருந்து, ரயில்களில் பயணம் செய்த பயணிகளிடம் பேசியபோது, அவர்கள், இந்த முறையை பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்க செல்வது உறுதியாக தெரிந்தது. 

ஒன்றியத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தென் மாநில மக்கள் மட்டுமல்ல, வட மாநில மக்களும் மிகவும் தெளிவாக இருந்து வருகிறார்கள். கடந்த பத்து ஆண்டுக் கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்பு அடைந்தார்கள். அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டன. விலைவாசி கடுமையாக உயர்ந்ததால், மக்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறிவிட்டது. 

இந்திய ரூபாயின் மதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் தறுமாறாக உயர்ந்துவிட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து நாம் சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு அது உயர்ந்து இருப்பதால், குடும்பத் தலைவிகள் பெரும் கவலையில் இருந்து வருகிறார்கள். 

நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்களிடையே வெறுப்பை விதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளால், மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறார்கள். 

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தீர்வு காண வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் தீர்க்கமான முடிவு எடுத்து அதனை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக தேர்தல் நடந்த 102 தொகுதிகளிலும், மக்கள் எழுச்சியுடன் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். 

இந்தியா வெல்லும்: 

முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மக்கள் மிகுந்த எழுச்சியுடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கிடக்கும் தரவுகளை கவனிக்கும்போது, இந்த முறை, இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றும் என உறுதியாக தெரிய வருகிறது. 

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட  இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகள் நாட்டு மக்களை அனைவரும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக நல்ல ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக, இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் வாக்களிக்க முடிவு செய்து, அதை முதல்கட்டத் தேர்தலில் செயல்படுத்தி இருக்கிறார்கள். 

வரும் 26ஆம் தேதி இரண்டாவது கட்டமாக கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று, கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று பிற மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 89 தொகுதிகளில் இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

கேரளா மற்றும் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் அலை வீசுகிறது. பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் திரண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி நல்ல அறுவடைச் செய்யும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

18வது நாடாளுமன்றத் தேர்தல் சாதாரணத் தேர்தல் இல்லை என்பதை சிறுபான்மையின மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சோம்பல் சிறிதும் கொள்ளாமல், இந்த முறை வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு சாரை சாரையாச் செல்லத் தொடங்கியுள்ளனர். நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டதால், இனி அதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, நாட்டில் ஜுன் 4ஆம் தேதிக்குப் பிறகு நல்லாட்சி அமைவது உறுதி என கூறலாம். அதற்கு மக்களின் எழுச்சியே காரணம் என்று உறுதியாக, திட்டவட்டமாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: