Tuesday, April 16, 2024

பேட்டி....!

பா.ஜ.க.வின் பொதுச் சிவில் சட்டம் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி…!!

ஆம்பூர், ஏப்.17- பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்து இருப்பது, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமாகும் என இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 16.04.2024 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 25 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் என கூறினார். மதச்சார்பின்மைக்கு மூலமாக திருக்குர்ஆன் இருக்கிறது. அந்த மதர்ச்சார்பின்மை இந்தியாவில் உள்ளது. உலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஒரே இனமாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 

இந்தியாவில் தனித்தன்மை:

உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் இல்லாத தனித்தன்மை இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 சமுதாயங்கள் உள்ளன. இந்த 4 ஆயிரத்து 698 சமுதாயங்களிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்திலும் பல்வேறு விதமான சடங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மதத்தின் அடிப்படையில், மார்க்கத்தின் அடிப்படையில், இஸ்லாமியர்களாக இந்தியாவில் 25 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். 

பொது சிவில் சட்டம் ஏற்க முடியாது:

இவ்வாறான நிலையில், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுல்ல, உலக முஸ்லிம்களுக்கும் எதிரானது. 

பா.ஜ.க. தோல்வி அடையும்:

நாடாளுமன்றத் தேர்தலில் 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். இந்த வெற்றிக்குப் பிறகு இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி பிரதமரை தேர்வு செய்யும். இனி வரும் நாட்கள் மிகச் சிறப்பான நாட்களாக அமையும். இந்தியா கூட்டணி ஆட்சியில் நாடு சிறப்பான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் எட்டும். நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களையும் பூர்த்திச் செய்யும் விதமாக இந்தியா கூட்டணி ஆட்சி இருக்கும். நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ இந்தியா கூட்டணி சிறப்பான பணிகளை செய்யும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். 

பேட்டியின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், மாவட்ட அமைப்பாளர் ரபீக் அகமது, மாவட்ட செயலாளர் ஹுசேன் அஹமத், மாவட்ட பொருளாளர் அப்துல் அஜீஸ், ஆம்பூர் நகர தலைவர் அயாஸ் அஹமத், நகர செயலாளர் ஹம்மத் அக்ரம், நகர பொருளாளர் அஷ்பாக் அஹமத், அன்ஸர் ஷரீப், நதீம் அஹமத், சுஹேல் அஸ்லம் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: