Tuesday, April 16, 2024

கே.எம்.கே. பிரச்சாரம்...!

சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் 

இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்…!

வேலூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

வேலூர், ஏப்.16- திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இரண்டாவது நாளாக அவர் 15.04.2024 அன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பேரணம்பட்டில் வாகனப் பேரணி:

அதன்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் பேரணம்பட்டில் வாகனப் பேரணி நடத்தப்பட்டது. இதில், தேசிய தலைவர் பேராசிரியர் கலந்துகொண்டு, வீதிவீதியாக சென்று திமுகவிற்கு ஆதரவு திரட்டினார். 

அப்போது பேசிய அவர், சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக திமுக எப்போதும் இருந்து வருகிறது என கூறினார். தற்போது, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் மக்களும் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ விரும்புகின்றன என்றும், அதை நோக்கி இந்தியா கூட்டணி பயணித்துக் கொண்டு இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

இந்த வாகனப் பேரணியில் இ.யூ.முஸ்லிம் லீகின் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் முஹம்மது தையூப், தாய்ச்சபை நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர். 

குடியாத்தம் நகரில் பிரச்சாரம்:

பின்னர் குடியாத்தம் நகரில் பிரச்சாரம் செய்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், குடியாத்தம் நகரில் இ.யூ.முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த சுபான் பாய், அக்பர் பாய், ரஹம்துல்லா கான் ஆகியோரின் பணிகளை நினைவுக் கூர்ந்து புகழாரம் சூட்டினார். தற்போதைய நிர்வாகிகள், காதர் பாஷா, யூசூப் கான் உள்ளிட்டோர் சிறப்பாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் ஆற்றிவரும் பணி மிகவும் பாராட்டும் வகையில் உள்ளதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையின மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றிப் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த பிரச்சாரத்தின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், குடியாத்தம் திமுக செயலாளர் எஸ்.சௌந்தராஜன், குடியாத்தம் நகர தலைவர் காதர் பாஷா, செயலாளர் கே.பி.யூசுப் கான், மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் பி.எஸ்.நிஜாமுத்தீன் ஒன்றிய தலைவர் ஷஹாபுத்தீன், மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் முக்கிய நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

வேலூரில் பிரச்சாரம்:

பேரணம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவுச் செய்து வேலூர் மாநகரம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், சைதாப்பேட்டை, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கடைத்தெரு, உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். 

வேலூரில் பிரச்சாரம் செய்தபோது பேசிய கே.எம்.கே. வரும் 19ஆம் தேதி இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என குறிப்பிட்டார். குறிப்பாக, சிறுபான்மையின மக்கள், இந்த தேர்தலில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தங்களது வாக்குகளை திமுக தலைமையிலான கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமையன்று வருவதால், முஸ்லிம்கள் முதல் பணியாக, வாக்குச்சாவடிக்குச் சென்று, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் அறிவுறுத்தினார். 

இந்த பிரச்சாரத்தில், இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், வேலூர் மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் ஷப்பீர் கான், மாநகர தலைவர் முஹம்மது ஹனீப், இணைச் செயலாளர் அக்பர் பாஷா, அய்யூப் பாஷா, ஷகீல், குல்சார், அல்தாப் பாஷா, தாபிக் அலி, முனவர் பாஷா, முஹம்மத் தையிப், ஷப்பீர், அக்பர், ரஹீம் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவரின் நேர்முக உதவியாளர் முஹம்மது ரஃபி உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கடந்த இரண்டு நாட்ளாக திமுக வேட்பாளர்கள் ஜெகத்ரட்சகன், மற்றம் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பல்வேறு பகுதிகளில் அவருக்கு இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: