Monday, April 22, 2024

வெறுப்பு பேச்சு.....!

 தோல்வியின் விரக்தியால், மீண்டும் வெறுப்பு பேச்சு.....!

நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் இருக்கும், 102 மக்களவைத் தொகுதிகளுக்கு அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் மிகச் சிறப்பாக முடிந்த நிலையில், தமிழகத்தில் சுமார் 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவின் அடிப்படையில், பெரும்பாலான தொகுதிகளில், இந்தியா கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றிபெறும் என பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், படுதோல்வி அடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது நாட்டில் அரசியல் களம் மாறிவரும் நிலையில், பா.ஜ.க. தோல்வி உறுதியாகிவிட்டதால், அக்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி அரசியல் லாபம் பெற அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு தற்போது நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களே நல்ல எடுத்துக்காட்டுகள் என கூறலாம். 

மோடி வெறுப்பு பேச்சு:

முதல்கட்ட தேர்தல் நடந்த 102 தொகுதிகளில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என செய்திகள் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள், அடுத்தக்கட்டத் தேர்தல்களில் எப்படியும் வாக்குகளை பெற வேண்டும் என நோக்கில் நடடிவக்கைகளைத் தொடங்கி, பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அண்மையில் மேற்க வங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமிக்கு ஒன்றிய அரசு அர்ஜுனா விருது வழங்கியதை குறிப்பிட்டு பேசி, முஸ்லிம்கள் அனைவரும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால், முதல்கட்ட தேர்தலில் சிறுபான்மையின மக்கள் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை உறுதியாக தெரிந்துக் கொண்ட மோடி, ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், வெளிப்படையாகவே முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசி, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக பொய் தகவலைக் கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் சொத்துகள், இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்" என பேசி, மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருக்கிறார். 

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தபிறகும், சொல்வதற்கு என எந்ததொரு சாதனைகளையும் இல்லாமல், முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைத்து, அதன்மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைக்கு பிரதமர் மோடி வந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

மேலும், இந்திய முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பது அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பிரச்சாத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

காங்கிரஸ் கண்டனம்:

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "தோல்வி பயத்தாலும். அதிகாரத்தை இழக்கும் அச்சத்தாலும் பிரதமர் தனது மன சமநிலையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று கருத்து கூறியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் பற்றிய ஒரு குறிப்பை சுட்டிக்காட்ட முடியுமா என மோடிக்கு சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பொய் சொல்வதை மோடி நிறுத்த வேண்டும் என்றும் பவன் கேரா அறிவுறுத்தியுள்ளார். 

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின், பிரியங்காவும் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் கூறியுள்ளார். மோடியின் பேச்சு மிகவும் தவறானது, உள்ளடக்கத்தில் வெறுக்கத்தக்கது என்றும் அது வெறுப்பைப் பெறக்கூடிய அளவுக்கு மக்களை பிளவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் உறுதி:

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் மூலம் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி, அதன்மூலம் அரசியல் லாபம் அடைய அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். 

ஆனால், 18வது மக்களவைத் தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் இல்லை என்பதை நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அடைந்த துன்பங்கள், துயரங்கள் ஏராளம். எனவே, இந்த முறை எப்படியும் பா.ஜ.க. தோல்வி அடைய வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள். 

எனவே தான்,  முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற 102 தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆறு கட்டத் தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும் என்பதால், எப்படியும் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முடிவு செய்து வெறுப்பை பேச்சு மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் கலவரங்கள், வன்முறைகள் வெடிக்கும் என அமித்ஷா பேசியுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில், இதுபோன்ற பிரச்சாரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 

ஆனால், இந்த முறை மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதால் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே, மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் வெறுப்பை விதைத்தாலும், வெறுப்பின் கடையில் அன்பின் பொருட்களை வாங்கி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, மகத்தான வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: