Thursday, April 25, 2024

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற....!

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்:

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வளைகுடா நாடுகளில் இருந்து கேரள வந்த மக்கள்....!

கே.எம்.சி.சி., இ.யூ.முஸ்லிம் லீக் சிறப்பு ஏற்பாடு...!

மலப்புரம், ஏப்,25-நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் 26.04.24 அன்று இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 24.04.2024 அன்று நிறைவுப் பெற்றதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

கேரளாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு:

இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இடம்பெற்ற கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளுக்கும், 26.04.24 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவின் மலப்புரம் மற்றும் பொன்னேனி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மலப்புரம் தொகுதியில் இ.டி.முஹம்மது பஷீரும், பொன்னேனி தொகுதியில், அப்துஸ் ஸமது சமதானியும் களம் காண்கிறார்கள். 

கடந்த 20 நாட்களாக இருவரும் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், 24.04.24 அன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றபோது, இருவரும் ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீகின் வெளிநாடு வாழ் உறுப்பினர்கள் சார்பில் மாபெரும் வாகனப் பேரணி நடைபெற்றது. இதேபோன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் அவருக்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வாகனப் பேரணி நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

வளைகுடா நாடுகளில் இருந்து வருகை:

கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சொந்த தொகுதிகளுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ள கேரள மக்கள், வளைகுடா நாடுகளில் இருந்து விமானங்களை பிடித்து கேரளாவிற்கு வந்துள்ளனர். 

சிறப்பு விமானங்கள் ஏற்பாடு:

கேரள வாக்காளர்கள் எந்தவித சிரமும் இல்லாமம் வாக்களிக்க வரும் வகையில், கேரள முஸ்லிம் கலாச்சார அமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ஏரளமான சிறப்பு விமானங்கள் மூலம் கேரள வாக்களார்கள், தங்களது ஊர்களுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. 

சவுதி அரேபியாவில் இருந்து மட்டும், கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதால், மக்கள் எந்தவித இன்னலும் இல்லாமல், வாக்களிக்க வருகை தந்துள்ளார்கள். இதுகுறித்து கருத்து கூறியுள்ள கே.எம்.சி.சி. தலைவர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரள மக்கள், சொந்த ஊர்களுக்கு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

விழிப்புணர்வு பிரச்சாரம்:

இந்த தேர்தலின்போது, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் கேரள முஸ்லிம் கலாச்சார அமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முந்தையத் தேர்தல்களில் இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. 

இந்திய தொழிலாளர்கள் மக்களவைத் தேர்தலின்போது வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல வளைகுடா நாடுகளில் உள்ள அரபிய தொழில் அதிபர்களும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது கூறிய கே.எம்.சி.சி. ஜெத்தா பிரிவு தலைவர் அபூபக்கர் அரிம்பரா, இந்திய பிரதமர் மோடியின் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே, கேரள மக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில், கேரளாவிற்கு விமானங்கள் மூலம் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதேபோன்று, கருத்து கூறியுள்ள கே.எம்.சி.சி. சவுதி அரேபியா பிரிவின் தலைவர் கே.பி.முஹம்மது குட்டி, மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகமாவும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த முறை இந்தியாவில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கேரள மக்களும், வாக்களிக்க விமானங்களை பிடித்து கேரளாவிற்கு பறந்து இருப்பதாக கூறியுள்ளார். 

கேரளாவில் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வளைகுடா நாடுகளில் பணிபுரிந்துவரும், இந்தியர்கள், 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கே.எம்.சி.சி., செய்துவரும் ஏற்பாடுகளுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: