Thursday, April 25, 2024

வெற்றியை குவிக்கலாம்...!

ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால், வெற்றியை குவிக்கலாம்...!

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த இஸ்லாமிய இளைஞர்கள்....!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஃப்.எஸ். உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய முறைப்படி நடத்தப்பட்டது.

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, இந்தாண்டு ஜனவர் முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஆயிரத்து 16 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் இளைஞர்கள் சாதனை:

மொத்தம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 16 பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50ஆக இருந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 5 சதவீதம் அளவுக்கு இருந்து வருகிறார்கள். 

தரவரிசையில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியலில், முஸ்லிம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். அகில இந்திய தரவரிசைப் பட்டியலின்படி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நௌஷீன் 9வது இடத்தையும், வர்தா கான் 18வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோன்று, சுபைஷன் ஹக் 34 இடத்தைப் பிடித்துள்ளார். ஃபபி ரஷீத் என்ற மற்றொருவர் 71வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 

கடின உழைப்பே வெற்றியின் ரகசியம் :

தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்த நௌஷீன், உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த அப்துல் கைய்யூமின் மகளாவர். தன்னுடைய தொடர் முயற்சி காரணமாக 4வது முறையாக தேர்வு எழுதி, வெற்றி பெற்று, இந்த சாதனையை நௌஷீன் புரிந்துள்ளார். 

இந்த சாதனை புரிய தமக்கு பக்கபலமாக இருந்தது எது என்ன கேள்விக்கு பதில் அளித்துள்ள நௌஷீன், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின், பயிற்சி மையம் என தெரிவித்துள்ளார். அதற்காக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாவும், அந்த மையம் அளித்த பயிற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 


சிவில் சர்வீஸ் தேர்வில் தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்த பிறகும், தாம் முயற்சியை கைவிடவில்லை என தெரிவித்துள்ள நௌஷீன், மற்றவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றாமல், இந்த முறை தனியாக தமக்கு என ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, அதன் வழியில் பயணித்து, வெற்றிக்கனியை பறித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

நாள்தோறும், தேர்வுக்காக நேரம் ஒதுக்கி, கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களின் முயற்சிகளை விட, தன்னுடைய முயற்சி ஒரு தனிப்பட்ட முயற்சியாக, பாணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்காக திட்டமிட்டு உழைத்ததாக நௌஷன் கூறியுள்ளார். வெற்றிக்கு ஒரே வழி, கடின உழைப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ள அவர், தோல்வியை கண்டு அதிர்ச்சி அடையாமல், துவண்டு இருக்காமல், வெற்றிக்காக மீண்டும், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் வெற்றிக்கான கதவுகள் உங்களை தட்டும். வழிகளை திறக்கும் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நௌஷன். 

ஷாயிதா பேகம் சாதனை:

இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், 50 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஷாஹிதா பேகமுகம் அவர்களில் ஒருவராவார். தொழில் அதிபர் ஷாஜி மற்றும் குடும்பத் தலைவி சரினா பேகத்தின் மகளான ஷாஹிதா பேகம், சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆர்வம் கொண்டு, அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். 

அகில இந்திய தேர்வு பட்டியல் தரவரிசையின்படி, ஷாஹிதா பேகம், 323வது இடத்தை பிடித்துள்ளார். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என கனவு கண்ட ஷாஹிதா பேகம், அந்த கனவை தனது உழைப்பின் மூலம் நிறைவு செய்துள்ளார். 

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்த ஷாஹிதா பேகம், சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். தீவிர உழைப்பு, கடின பயிற்சி, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், தேர்வில் வெற்றி பெற்று ஷாயிதா பேகம், தன்னுடைய பெற்றோர்களை மட்டுமல்ல, திண்டிவனம் நகரத்தையும் பெருமை அடையச் செய்துள்ளார். 

ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால்:

வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டுமானால், அதற்கு முதல்படியாக நாம் கனவை காண வேண்டும். நமது இலட்சியத்தை அடைய தினமும் கனவு கண்டு, அதற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சரியான பாதையை உருவாக்கிக் கொண்டு, அதில் நாம் பயணிக்க வேண்டும். இந்த பயணத்தில், தடங்கல்கள், நெருக்கடிகள் வரும். அப்படி வந்தால், அவற்றை துணிவுடன் சந்திக்க வேண்டும். தோல்வியைக் கண்டு அதிர்ச்சி அடையாமல், கவலை அடையாமல், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் முயற்சி, கடின உழைப்பு செலுத்தி, நமது இலக்கை அடைய முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி, கன உழைப்புடன் நாம் இலட்சிப் பாதையை நோக்கி பயணம் செய்தால், நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக நௌஷன்,  ஷாஹிதா பேகம் உள்ளிட்ட 50 முஸ்லிம் இளைஞர்கள் இருந்து வருகிறார்கள். 

முஸ்லிம் சமுதாயம் வாழ்க்கையில் வெற்றி வாகை சூட வேண்டுமானால், அவர்கள் நல்ல கல்வி பெற வேண்டும். உயர் பதவிகளில் வர ஆசை கொள்ள வேண்டும். அந்த ஆசை, சாதாரண ஆசையாக இருக்கக் கூடாது. தீப்பற்றி எரியும் ஆசையாக இருக்க வேண்டும். இலட்சியத்தை அடையும் வரை ஆசை தீ எரிந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி எரிந்துகொண்டே இருந்தால், நம்மிடம் கடின உழைப்பும், அயராத ஆர்வமும் ஏற்பட்டுவிடும். பிறகு என்ன, வெற்றி நம் கைகளில் தான். அதை தான், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 50 முஸ்லிம்கள், தங்களது வெற்றியின் மூலம் நமக்கு நல்ல பாடமாக சொல்லி இருக்கிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: