Wednesday, April 17, 2024

வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல.....!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல, கட்டாயக் கடமையும் கூட...!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தற்போது தேர்தல் திருவிழாக் காலம் தொடங்கியுள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா, வரும் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதன்படி, முதல்கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள  102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக செய்துள்ளது. 

முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தக் கட்டப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனால், தேர்தல் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நூறு சதவீத வாக்கு என்ற இலக்கை எட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் தேர்தலில் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. 

வாக்களிப்பது உரிமை:

ஜனநாயக நாட்டில் மக்களின் மிகப்பெரிய உரிமையாக இருப்பது வாக்கு என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மக்கள் சரியாகப் பயன்படுத்தி, நாட்டில் நல்லாட்சியை  உருவாக்க வேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை தகுந்த முறையில் பயன்படுத்தி, நல்லவர்களை தேர்வு செய்வதன் மூலம், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் தழைத்து நிற்கும். ஜனநாயகம் எப்போதும் வலுவாக இருக்கும். 

எனவே, தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு இந்தியர்களும் கலந்துகொண்டு, தங்கள் உரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்படி, திருவிழாக் காலங்களில், அனைவரும் ஒன்றுக் கூடி, மகிழ்ச்சி அடைந்து அதை உற்சாகமாக கொண்டாடுகிறோமோ, அதைப் போன்று, தேர்தல் திருவிழாவிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு, காலை 7 மணிக்கே சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு உரிமையை நல்ல முறையில் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்ய வேண்டும். 

மக்கள் தங்களின் உரிமையை சரியாகப் பயன்படுத்தினால், நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்படுவார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களின் பணிகளில் தனிக் கவனம் செலுத்துவார்கள். அத்துடன் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவார்கள். எனவே, இதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்காளர்களும், தங்களின் வாக்கு உரிமையைப் பயன்படுத்த வேண்டும். 

வாக்களிப்பது கடமையும் கூட: 

தேர்தல் திருவிழாவில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது நாட்டு மக்களின் உரிமை மட்டுமல்ல, அது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையும் ஆகும். இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய வேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், நாட்டில் உள்ள 97 கோடி வாக்காளர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை கட்டாயக் கடமையாகக் கருதி, நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். 

மக்களில் பலர், சோம்பலுடன் இருந்துவிட்டு, தங்களது கடமையை நிறைவேற்ற தவறுவதால், நல்லாட்சி கிடைக்காமல் போகிறது. இதற்கு நல்ல உதாரணம், கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சி என்றே கூறலாம். கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு வெற்று முழக்கங்களை தவிர மிகப்பெரிய அளவுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. 

ஜனநாயக நெறிமுறைகளை குழித்தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்தார்கள். மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் வாழும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இடையே குழப்பங்களை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் பெற பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். 

அதன் காரணமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், போன்ற திட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும், இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருந்து வரும்நிலையில், பா.ஜ.க.வின் இதுபோன்ற அறிவிப்புகள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்காது. இதனால், மிகப்பெரிய குழப்பங்கள் தான் ஏற்படும். 

எனவே, தேர்தல் திருவிழாவில் கலந்துகொள்ளும் மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை, வேடிக்கைப் பார்க்காமல், கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தற்போது நாடு சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு, நாட்டில் மீண்டும் ஜனநாயக நெறிமுறைகள் மிகவும் அற்புதமாக செயல்பட ஒவ்வொரு வாக்காளர்களும், கட்டாயமாக வாக்களிக்க மறந்துவிடக் கூடாது. 

நல்ல வாய்ப்பு:

18வது மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு நாட்டின் தலைவிதியை, எதிர்காலத்தை மாற்றி அமைக்க  நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த அற்புதமான வாய்ப்பை, வாக்காளர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு, தற்போது நாட்டில் உள்ள நிலைமை என்ன? தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள், தீமைகள் என்ன? நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் இருந்து வருகின்றனவா? நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுச் செல்ல யாரை தேர்வு செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு, வாக்களிக்கச் செல்ல வேண்டும். 

முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் சரியான முறையில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லுவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் சிறுபான்மையின மக்கள், இந்த முறை உடைக்க வேண்டும். சாரை சாரையாக வாக்குச்சாவடிக்குப் படையெடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். ஒருவிரல் புரட்சி மூலம் நாட்டில் நல்லாட்சி மலர வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது உரிமை மட்டுல்ல, அது கட்டாயக் கடமையும் கூட என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: