Sunday, April 14, 2024

ஆட்சி மாற்றத்திற்கு.....!

நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சி....!

ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்ட மக்கள்....!!

கோடைக் கால வெயிலை விட, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. 18வது மக்களவைத் தேர்தல், மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, தமிழகம் உட்பட முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், வரும் புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் அடைந்துள்ளது. 

அரசியல் களம் விறுப்பு விறுப்பு அடைந்து வரும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில், நாடு முழுவதும் மக்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியில் தாங்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றிக்கு தீர்வு காண மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்களின் மனநிலைகளை காணும்போது, தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது உறுதியாகிவிட்டது. 

பா.ஜ.க. ஆட்சியின் அவலங்கள்: 

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய எழுச்சிக்கு என்ன காரணம் என ஆராய்ந்தால், அதற்கு, பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி என்ற பதில் கிடைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. மாறாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் வாழ்வைச் சீரழித்தது. வங்கி மோசடிகள் அதிகரிப்பு, பொருளாதாரப் பேரழிவுகள், ஜி.எஸ்.டி. பாதிப்புகள், இந்தியாவின் கடன் சுமை அதிகரிப்பு, வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு பாரபட்சம், வறுமையில் கோரப்பிடியில் சிக்கிய இந்திய மக்கள், பத்து ஆண்டுகளில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு, தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டட பொதுத்துறை நிறுவனங்கள் என பல மோசமான அனுபவங்களை பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பெற்றனர். 

அத்துடன், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்த கொடுமை., சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல், விவசாய விரோத சட்டங்கள், மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், பத்திரிகை சுதந்திரம் பறிப்பு, எதிர்க்கட்சியினரை பழிவாங்க அமலாகத்துறை பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முடக்கம், பெரு முதலாளிகளின் பாதுகாவலனாக செயல்படும் பா.ஜ.க., தேர்தல் பத்திர நன்கொடை மூலம் மெகா ஊழல் என நிறைய அவலங்கள் பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்றன. 

மீண்டும் வெற்று முழக்கம்:

கடந்த பத்து ஆண்டுகளில் மக்களுக்கு பலன் அளிக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத பா.ஜ.க. மீண்டும் வெற்று முழக்கத்துடன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், வெற்று முழக்கங்களை தனது வழக்கமான பாணியில் மீண்டும் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாரி வழங்கி இருக்கிறது. 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் நாம் கொஞ்சம் ஒப்பீட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகும். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி குறித்த குறிப்புகள் மட்டுமே 69 இடம்பெற்றுள்ளன. அத்துடன், மோடியின் 53 புகைப்படங்களும் தேர்தல் அறிக்கையில் உள்ளன.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் பற்றிய குறிப்பு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இல்லை. 

பெண்களுக்கு அதிகாரம் குறித்த அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன. ஆனால், பா.ஜ.க. எதையும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முயற்சி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இதுபோன்ற வாக்குறுதி பா.ஜ.க. அளிக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியுடன் வாழ காங்கிரஸ் வழிகளை காண்பித்து இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் வெறும் வெற்று முழக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 

காலம் கடந்துவிட்டது:

கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவொரு சிறப்பான திட்டத்தையும் நிறைவேற்றாத பா.ஜ.க. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், காலம் கடந்தவிட்டது. களமும் மாறிவிட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள். நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற மிகப்பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. 

குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மக்கள் போர்க்கொடித் தூக்கியுள்ளனர். இதனால், பா.ஜ.க. தலைவர்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்துள்ளனர். 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முழக்கங்களை எழுப்பிய பா.ஜ.கவினர், தற்போது 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. ஆனால், இந்த முயற்சிகள் எந்தவித பலனையும் பா.ஜ.க.விற்கு தராது என்பதுதான் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையாக உள்ளது. தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பா.ஜ.க.வின் உண்மை முகம் மக்களுக்கு தற்போது நன்கு தெரிந்துவிட்டது. எனவே, அவர்கள் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த முடிவு செய்துவிட்டார்கள். 

ஆட்சி மாற்றம் உறுதி:

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரம் மிகச் சிறந்த முறையில் இருந்து வருகிறது. மக்களின் மனநிலையை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்களை மிகச் சிறந்த முறையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. 

எனவே, கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த முறை பா.ஜ.க. பெற்ற வெற்றியை இந்த முறை அக்கட்சி பெற முடியாது  என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, போலி கருத்துக் கணிப்புகளை திணிக்க பா.ஜ.க. முயற்சிகளை செய்து வருகிறது. தனது அடிமை மீடியாக்களை வைத்து, இதுபோன்ற திணிப்புகளை பா.ஜ.க. அரங்கேற்றி வருகிறது. 

ஆனால், நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டதால், பா.ஜ.க.வின் சதித் திட்டங்கள் அனைத்தும் இனி தோல்வியில் தான் முடியும்.  நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டு, அதில் உறுதியாக இருப்பதால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 18வது மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்கள் என்பது உறுதி.

இனி வரும் நாட்களில் தேர்தல் களம் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் களமும் மிகப்பெரிய அளவுக்கு மாறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன்மூலம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகள் வெறும் வெற்று முழக்கங்களை கேட்டு, மோசனமான ஆட்சியைப் பார்த்த மக்கள், ஜுன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நல்லாட்சியை காண இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் மிகச் சிறப்பான நல்ல ஆட்சியை வழங்க இருக்கிறது. இதற்கு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏழுச்சியே காரணம் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: