Tuesday, October 18, 2011

மனிதம் ? !

இளம் செய்தியாளர்களின் மனிதம் ? !

தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரியும் இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 

துடிப்புடன் பணியில் சேரும் இளம் செய்தியாளர்கள், முதன்மை செய்தி ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என ஆர்வத்தில், மிக வேகமாக செயல்படுவது வழக்கம். 

ஆரம்பத்தில் பணி நேரத்திற்கு முன்பாக அலுவலத்திற்கு வரும் இவர்கள், பணி முடிந்த பின்பும், வீட்டிற்கு வெகு நேரம் கழித்தே செல்கின்றனர்.

சுவையான, பரபரப்பான செய்திகளை எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறால், இளம் செய்தியாளர்கள் செய்யும் சில செயல்கள், மனித நேயத்திற்கு நேர் எதிராக அமைந்து விடுகின்றன.

செய்தி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், மனிதம் குறித்து இவர்கள்,  சிறிதும்  கவலைப்படுவதாக தெரிவதில்லை. அக்கறை கொள்வதில்லை.

இதற்கு பல எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

ஆனால், ஒருசிலவற்றை மட்டுமே, இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 12.10.2011 ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களின் சேம்பரில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சேம்பரில் இருக்கும் தனது அறையில் அமர்ந்து கொண்டு, தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளர் ஒருவருக்கு, நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தார் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்.

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், நாடு முழுவதும உள்ள வழக்குரைஞர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்.

நல்ல திறமைச்சாலி. கருத்துகளை நேர்மையாக, அச்சமின்றி சொல்லும் குணம் கொண்டவர்.

இப்படிப்பட்ட பிரசாந்த் பூஷண், தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, அத்துமீறி அவரது அறைக்குள் நுழைகின்றனர்  ராம்சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர்.

அவர்களில் ஒருவர், பிரசாந்த் பூஷண் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்து விடுகிறார்.

பூஷணை சரமாரியாக அடிக்கிறார். இதனால் நாற்காலியில்  அமர்ந்துக் கொண்டிருந்த பூஷண் நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

அப்போதும், அவரை அந்த இளைஞர் விடவில்லை. பூஷணின் கால்களை இழுத்தப்படியே, அவரை பலமாக தாக்குகிறார். 

இந்த காட்சிகள் அனைத்தையும் தமது கேமிராவில் பதிவு செய்கிறார் நேர்காணல் எடுக்க வந்த இளம் செய்தியாளர். இளம் ஒளிப்பதிவாளர். 

பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை நிறுத்த இருவரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

பேட்டியை நிறுத்திவிட்டு, கேமிராவை ஓரமாக வைத்துவிட்டு, உடனே, பூஷணை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. 

பூஷண் நன்றாக அடிப்பட்ட பிறகு, அது கேமிராவில் நன்கு பதிவு ஆகிவிட்ட பிறகே அவரை காப்பாற்ற ஓடோடி வருகிறார் அந்த இளம் செய்தியாளர்.

என்ன ஒரு அநியாயம்? பாருங்கள்.

வழக்குரைஞர் பூஷண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நன்கு படம் பிடித்து அதன் மூலம் செய்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறே, அந்த இளம் செய்தியாளரிடம் மிகுந்து இருந்தது.

அதனால், மனிதம் குறித்து அக்கறை
கொள்ளாமல், பூஷணை காப்பாற்ற அந்த தனியார் தொலைக்காட்சி இளம் செய்தியாளர், சிறிதும்  முயற்சிக்கவில்லை.

இந்த தாக்குதல் காட்சி நாடு முழுவதும்  உடனே ஒளிபரப்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த தனியார் தொலைக்காட்சி.

இதன்மூலம், அந்த தனியார் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சிறிது நேரத்திலேயே உயர்ந்தது உண்மைதான்.

ஆனால்....மனிதம் ? 

காணாமல் போனது.

இதேபோன்று, தமிழகத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அவற்றில் ஒன்று. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த குழு மோதல்.

இந்த மோதல் காட்சிகளை, பல தொலைக்காட்சிகளின் இளம் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் சுற்றி சுற்றி படம் பிடித்தனர்.

காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததை ஆர்வமாக படம் பிடித்தனர்.

ஆனால், உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, வன்முறையை, மோதலை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் செய்யவில்லை.

காரணம். பரபரப்பான அந்த காட்சிகள் முதலில் தங்களது தொலைக்காட்சியில் வர வேண்டும் என்ற ஆர்வம்தான்.

அதன்மூலம், முதன்மை செய்தி ஆசிரியர், நிர்வாகம் தரப்பில் நன்மதிப்பை பெற வேண்டும் என்பது இளம் செய்தியாளர்களின் நோக்கமாக இருந்தது.

அதேநேரத்தில,  மக்கள் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்த இளம் பெண் செய்தியாளர் அருணா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

மோதலின்போது பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் ஒடோடி சென்றார்.

சார். அநியாயம் நடக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே. இது நியாயமா? என தட்டிக் கேட்டார்.

ஆனால், அந்த இளம் பெண் செய்தியாளரின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஆனது.

மாணவர்கள் மோதிக் கொண்டனர். கலவரம், வன்முறை படம் பிடிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.

ஒரு இளம் பெண் செய்தியாளருக்கு இருந்த தைரியம், மனிதம், மற்ற செய்தியாளர்களுக்கு உடனே ஏன் ஏற்படவில்லை?

இதற்கு காரணம், செய்திகளை பரபரப்பாக, முதலில் தர வேண்டும் என்ற ஆர்வமே ஆகும். 

இதேபோன்று மற்றொரு கசப்பான நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடந்தது.

தென் மாவட்டத்தில், ஒரு காவல்துறை அதிகாரியை குண்டர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர்.

உயிருக்கு போராடிய அந்த அதிகாரி, தண்ணீர் கேட்டு கூச்சலிடுகிறார்.


ஆனால், அவரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு துளிக்கூட ஏற்படவில்லை.

ஏன் அங்கிருந்த மக்களுக்கும் ஏற்படவில்லை. காவல் அதிகாரி உயிருக்கு போராடிய காட்சியை எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.

காவல் அதிகாரி, துடித்துக் கொண்டிருந்த அந்த காட்சியை, தங்கள் கேமிராவில் வேக வேகமாக படம் பிடிப்பதில் மட்டுமே இந்த இளம் செய்தியாளர்கள் கவனம் செலுத்தினர்.


அந்த அதிகாரி துடி துடித்து உயிரிழந்த காட்சி, கல் மனதையும் உருகச் செய்தது.

ஆனால், இளம் செய்தியார்களை மட்டும் ஏன் உருகச் செய்யவில்லை என தெரியவில்லை?

இப்படிப்பட்ட, சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இளம் செய்தியாளர்கள் தங்கள் பணியை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சென்னையில் வயதான மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்.

மூதாட்டியை இழந்து வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.


அங்கு ஓடோடி செல்லும் இளம் செய்தியாளர்கள், கொலை எப்படி நடந்தது? நீங்கள் எங்கே இருந்தீர்கள்? கொலைக்கு யார் காரணம் ?

என இப்படி வேண்டாத கேள்விகளை, காவல்துறையினர் கேட்க வேண்டிய வினாக்களை கேட்டு, மூதாட்டியின் பிள்ளைகளை, உறவினர்களை படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா,  அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.

தற்போது, தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இப்படிப்பட்ட இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது.

பரபரப்பான செய்திகளை அளிப்பதில் தவறு இல்லை.

இப்படிப்பட்ட செய்திகள் தங்களது தொலைக்காட்சியில் முதலில் வர வேண்டும் என்று நினைப்பதில் குற்றம் இல்லை.

ஆனால், மனிதம், மனித நேயம் ஆகியவற்றை இளம் செய்தியாளர்கள் தங்களது  இதயத்தில் புகுத்திக் கொண்டு செயல்பட்டால், வன்முறைகளை, தாக்குதல்களை சிறிதாவது தடுக்க முடியும் அல்லவா !

கொலை செய்யப்பட்டு, வீடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அங்கு சென்று விசாரணைகளை நடத்துவதை தவிர்த்து, அவர்களின் சோகத்தில் பங்கேற்கலாம்.

நாசுக்காக பேசி விஷயங்களை வாங்கலாம். செய்திகளை சேகரிக்கலாம்.

இதன்மூலம், மனிதம் மலரும். இளம் செய்தியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் மறையும்.

செய்தி ஊடகங்கள் மீதான புகார்கள் குறையும்.

செய்தி ஊடகங்கள் மீது மக்களுக்கு நன்மதிப்பு ஏற்படும்.

இவற்றையெல்லாம், இளம் செய்தியாளர்கள் சிந்திப்பார்களா ? !

கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா ? !

இனிவரும் நாட்களில், இளம் செய்தியாளர்களின் நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இதற்கு விடை  தெரியவரும். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, October 13, 2011

கவிஞர் முரளி !

சன் தொலைக்காட்சியில் புதிதாக சேர்ந்தபோது, ஆரம்பத்தில் பல விஷயங்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின.

பல புரியாத புதிர்கள் வியப்படைய செய்தன.

செய்தி தயாரிப்பு பிரிவில் இருந்த ஜாம்பவான்களின் ஒரு குழு, செய்தி ஆசிரியருக்கு இணையாக செயல்பட்டு வந்தது.

பணியில் சேரும் புதியவர்களிடம், இந்த ஜாம்பவான்கள் அதிகம் பேச மாட்டார்கள்.

அவர்களிடம் இருந்து ஒரிரு வார்த்தைகள் மட்டுமே வெளியே வந்து விழும். 

அதிலும்,  அதிகாரத் தோரணை அதிகமாக இருக்கும்.

இதனால் செய்திப்பிரிவில் இருக்கும் இந்த ஜாம்பவான்களிடம் பேச, தயக்கம், கலந்து ஒரு பயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து வந்தது.

ஆனால், ஜாம்பவான்களின் குழுவில் இருந்த நண்பர் முரளி மட்டும்,  இதற்கு விதிவிலக்கு.


செய்தித் தயாரிப்பாளர்.

வழக்குரைஞர்.

கவிஞர்.

நகைச்சுவையாளர்.

என முரளிக்கு  பல முகங்கள் உண்டு.

அவரை நான் எப்போதும் கவிஞர் என்றே அழைப்பது வழக்கம்.

ஜாம்பவான்களின் குழுவிலிருந்து  சற்று விலகி நின்று, அனைத்து பணியாளர்களிடம் முரளி, சகஜமமாக பழகி, நட்பை ஏற்படுத்தி விடுவார்.

ஒவ்வொருவரை குறித்து ஆழமாக அலசி ஆராய்ந்து, சிந்தித்து, எளிய வார்த்தைகளில் ஐந்தாறு வரிகளில்  அழகாக கவிதை எழுதி விடுவார்.

இப்படி, பல திறமைகளை கொண்ட கவிஞர் முரளி,  என்னிடம் எந்த பந்தாவும் காட்டாமல் பழக ஆரம்பித்தார்.

இரவு நேரப்பணிகளின்போதுதான், அவரிடம் அதிகமாக பேச வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, நகைச்சுவையுடன் அவர் சொல்லும் சில ஜோக்குகள், வயிற்றை குலுங்கச் செய்யும்.

உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் என ஆரம்பத்தில் அதிகமாக எழுதியபோது, அதற்கான விஷுவல்களை பார்க்க, தயாரிப்பு அறைக்கு செல்லும்போது, ஜாம்பவான்களின் குழு, என்னை பார்த்து முறைக்கும்போது, கவிஞர் முரளி மட்டும், சார் வாங்க. என்னை விஷுவல் பார்க்கணும் சார் என கேட்டுக் கொண்டே,  பொறுமையாக அனைத்தையும் போட்டு காண்பிப்பார்.

இதனால்,  முரளி மீது எனக்குள் ஒரு மதிப்பு வளர்ந்தது.

அவரை சாதாரண நபர் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரில் பல பன்முகங்கள் மறைந்து இருப்பது, பின்னர் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது.

செய்தி ஆசிரியர்கள், முத்து முத்தாக செய்திகளை எழுதிவிட்டாலும், அதற்கு சரியான விஷுவல் போடாவிட்டால், அந்த செய்தி அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் முரளி ஒரு கில்லாடி.

எந்த இடத்தில், எந்த விஷுவலை போட்டால், செய்திக்கு சரியாக இருக்கும் என்பதை நொடிப்பொழுதில் கணித்துவிட்டு, அற்புதமாக விஷுவலை போடுவதில் அவர் திறமைச்சாலி.

செய்தி தயாரிப்பு அறையில், முரளி பணிபுரியும் விதமே, தனியாக இருக்கும்.

இந்த விஷுவலை இங்கு போடு. அதை அங்கு வை. என சொல்லி எடிட்டர்களிடம் அழகாக வேலை வாங்கி விடுவார் முரளி.

இப்படி, முரளி போட்ட பல விஷுவல்கள், செய்திகள், பின்னர் அனைவராலும் பேசப்பட்டன.

அதில் ஒன்றுதான் சொன்னதும்! செய்ததும்!

ஆரம்பத்திலேயே,  சொன்னதுபோன்று, வழக்குரைஞர், கவிஞர் என பல முகங்களை கொண்ட முரளி,

சிறிது சிறிதாக கவிதைகளை எழுதியபோது, அதனை வாசித்து ரசிக்க முடிந்தது.

கவிஞரே நல்ல ஒரு கவிதையை எடுத்து விடுங்க என இரவு நேரப்பணியின்போது, சக உதவி ஆசிரியர்கள், கேட்கும்போது, அவர் உடனே வரிந்துக் கட்டிக் கொண்டு, கவிதையை வாசிக்கும்போது, நான் வாய் பிளந்து கேட்டு ரசிப்பேன்.

செய்தி அறையில்,  சிறிது நேரம் கவிதை அரங்கம் களைக்கட்டும்.

எல்லோரும் முரளியை பாராட்டும்போது, அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு வெளிவரும்.

அப்போதெல்லாம், அசைந்து அசைந்து நடக்கும் இந்த குள்ள மனிதரா, அழகழகாக கவிதை எழுதுகிறார் என,  எனக்கு வியப்பு ஏற்படும்.

இப்படி, கவிதை மூலம் எங்களுக்குள் நட்பு, மெல்ல மெல்ல வளர்ந்தது.

இப்போது,  முரளியை கவிஞரே என்றே அழைத்து வருகிறேன்.

ஒருநாள் செல்பேசியில் தொடர்பு கொண்ட கவிஞர் முரளி, சார் எங்கே இருக்கீங்க ?  என்றார்.

அறையில்தான் இருக்குகிறேன் என்றபோது, உடனே வருவதாக கூறி, அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்.


சார், உங்களைப் பற்றி ஒரு கவிதையை எழுதி இருக்கிறேன்.  படித்து பாருங்கள் சார் என கூறிப்படி, ஒரு வௌ¢ளை நேர தாளை நீட்டினார்.
அதை வாங்கிப் படித்தபோது,  கவிஞரின் வார்த்தைகள்  மணி மணியாக வந்து விழுந்து இருந்தன.


நபி வழியில்
நில்லாது நடக்கும் நண்பர்தாம் !
ஹலிம் சுவைக்க வைத்த
அப்துல் அஜீஸ்-ன்
அருங்குணம் என்னை எழுத வைத்தது.

எழுத்துலகில் ஒரு நட்சத்திரத்தை
இந்த அகல் விளக்கு
அண்ணார்ந்து பார்த்தது
எண்ணெய் தீரும் வரை
என் எண்ணம் தீரும் வரை !
உள்ளம் உள்ள வரை
என் உயிரும் உள்ளவரை
உன் நட்பு தொடர்ந்திடவே…..

நாம் பழகிய
நாட்களை அசை போடுகிறேன்!
துறை ஒன்றாய்
ஆனாலும்
பிரிவு வேறாய் இருந்ததால்
நெருக்கம் சிறிது குறைவுதான்.

தேயாத சூரியனில்
நாம் உயர்வுக்கு 
தெளிவற்று இருந்த நாட்கள்
நீங்கள் மக்களோடு
அய்க்கியம் ஆன போது,
நான் கலைஞரோடு
கை கோர்த்தேன் !

புண் ஆன மனசு
பண்பட வில்லை.
செம்மைபட சென்ற
இடம் எனக்கு
சிறப்பு சேர்க்கவில்லை.
வளைந்து கொடுக்கா
தன்மையால் நான்
வாழை மரம் ஆனேன்.
வெட்ட வெட்ட
வளர்ந்தாலும்
சூழ்ச்சி புயலில்
வீழ்கின்றேன்.

காசு வந்து சேர்ந்தது
என் கனவு கலைந்து போனது
உம்மை போன்ற
நண்பரை
பார்க்கும் போதுதான்
மனதில்
பசுமை வந்து சேருது.

அதை எழுதும் போது
மனதில் மகிழ்வு ஏறுது
நன்றி மறவா
நாட்கள் தொடர
நட்புக்கு பலமாய்
எழுத்தால்
ஏணி அமைப்போம்

என சிறிய சிறிய வரிகளில், மிக அழகாய் இருந்த கவிஞர் முரளியின் வார்த்தைகள், என் மனதிற்கு மிகவும் பிடித்து போனது.

கவிஞரே மிக அற்புதமாய் கவிதை வடித்து இருக்கிறீர்கள் என பாராட்டு தெரிவித்தேன்.

இப்படி, ஒவ்வொருவரைப் பற்றியும் எளிய நடையில் கவிதை எழுதுவதில் கவிஞர் முரளி ஒரு கில்லாடி பேர்வழி. 

வாணியம்பாடி தொகுதி  எம்.எம்.ஏ.வாக இருந்த அப்துல் பாசித் அவர்களைப் பற்றி முரளி எழுதிய கவிதை, அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பல இளைஞர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிபவர் எழுதிய கவிதை அருமை என பாராட்டு தெரிவித்தனர்.

பாரதியை போன்று கவிஞர்களுக்கு எப்போதும்,  கொஞ்சம் கோபம் அதிகம் என சொல்வது உண்டு.

கவிஞர் முரளிக்கும் கொஞ்சம் அதிகமாகவே வரும்.

அது அநீதியை காணும்போது மட்டும்தான்.

நண்பர்களின் இன்பம், துன்பங்களில் ஓடோடி வந்து பங்கு கொள்வதில் கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.

வழக்குரைஞராக பணி புரிய வேண்டும் என்ற அவரது ஆர்வம் விரைவில் நிறைவேற இருப்பது  மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி.

அவர், வழக்குரைஞராக வலம், வந்தாலும், அவரது கவிதை ஆர்வம் என்றும் குறையாது.

எனவே, எப்போதுமே அவர்,  எனக்கு கவிஞர்தான்.

என்ன கவிஞரே, நான் சொல்வது  சரிதானே!


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, October 11, 2011

தனிமை !

னிமையிலே இனிமை காண முடியுமா ?

பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் பாடலின் வரிகள்தான் இவை.

இந்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடைக்கின்றன.

நவீன யுகத்தில் தற்போது நிறைய பேர் தனிமை விரும்பிகளாக இருந்து வருகின்றனர்.

தனிமையில் சுகம் கிடைப்பதாக தாங்களாகவே நினைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் உண்மையில் தனிமை மனிதனுக்கு மிகப் பெரிய கொடுமையை கொடுக்கும் அரக்கன் என்பதை அன்றாட வாழ்க்கையில் பலர் அனுபவித்து வரும் நிதர்சன உண்மையாகும். 

தனிமையிலே நிச்சயம் எப்போதுமே இனிமை காண முடியாது.

தனிமையாக இருப்பவர்களின் நெஞ்சங்களில் சாத்தானின் எண்ணங்கள்தான் மிக எளிதாக குடிபுகுந்து விடும்.

ஒருசில நேரங்களை தவிர்த்து, பிற நேரங்களில் தனிமையாக யாருமே இருக்க கூடாது.

தனிமை, மனிதனை மிருகமாக்கிவிடும் ஆற்றல் கொண்டது. 

ஏன் சில சமயங்களில் மனிதன் பைத்தியமாக மாறவும் வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே கூடி வாழும் வகையில்தான் மனித இனத்தை இறைவன் படைத்துள்ளான். 

அதனால்தான், கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்ற பழமொழிளை நமது முன்னோர்கள் நமக்கு மிக அழகாக சொல்லித்தந்து சென்றார்கள். 

ஆனால், இன்றை நவநாகரிக மனிதன் இதனை சிறிதும் உணர்ந்துக் கொண்டதாக தெரியவேயில்லை.

கௌரவம், சுயலாபம் ஆகியவற்றை மட்டுமே, கருத்தில் கொண்டு வாழும் இன்றைய மனித உலகம், தனிமையை விரும்பி, தனது வாழ்கையை சீரழித்துக் கொண்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல பெருநகரங்களில், தனிமையாக வாழ்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும், குறிப்பாக, வயதான ஆண், பெண் ஆகியோர் வீடுகளில் தனிமையாக விடப்படுகின்றனர்.

வசதி வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடந்தாலும், வயதான காலத்தில் பெற்றோர்களை, உறவினர்களை பராமரிக்க, கவனிக்க தயக்கம் காட்டும் இன்றைய இளைஞர்கள், வயதான தாய் தந்தையரை தனிமையில் தவிர்க்க விட்டு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.

இதனால், ஏற்படும் ஆபத்துகள் சொல்லி மாளாதவை.

சென்னை, மும்பை,  டெல்லி, கொல்கத்தா பெங்களுரூ உள்ளிட்ட பல பெருநகரங்களில்  தனிமையாக வாழும் முதியோர்களை குறி வைத்தே ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.

இதனால்தான், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும், வீட்டில் தனியாக இருந்த முதிய பெண் கொலை. 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை என்ற செய்திகள் , தலைப்புச் செய்திகளாக நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த செய்திகளை படிக்கும்போதும், பார்க்கும்போதும் கண்கள் குளமாகின்றன.

கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிந்து கிடக்க, ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தனிமையில் வாழ்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.

அதுவும் பெற்ற பிள்ளைகள் பலர் இருந்தும், கவனிக்க ஆள் இல்லாமல், அன்பு செலுத்த மனித நேயம் இல்லாமல்,  வயதான பெற்றோர் தனிமையாக வாழ்வது என்பது உண்மையிலேயே கொடுமையிலும் கொடுமை.

இதனால்தான், பெருநகரங்களில் அடிக்கடி தனிமையில் வாழும் முதியோர்கள், பணத்திற்காகவும் நகைக்காகவும்  கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

தனிமையில் வாழும் பல முதியோர்கள் மனநிலை பாதிப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.

இது நூற்றுக்கும் நூறு உண்மையான தகவல்கள்.

முதியோர்கள் மட்டுமல்ல, தனிமையை விரும்பி தனிக்குடித்தனம் செல்லும், பெண்களும் பாதிப்புக்கு ஆளாக நேரிடுவது தற்போது அதிகரித்து வருகிறது.

வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களை குறிவைத்து, சில சமூக விரோதிகள் நடமாடுவது அதிகரித்துள்ளது.

இதனால், பணம், நகை கொள்ளை போவதுடன், சில நேரங்களில் இளம் பெண்களின் மானத்திற்கும் இழக்கு நேரிடும் ஆபத்து உருவாகி விடுகிறது.

தனிமை,  ஒருசில நேரங்களில் மனிதனுக்கு நன்மையை செய்யும் என்பது மறுக்க முடியாது. 

இறைவனை வணங்க, பிரார்த்தனை செய்ய தனிமை மிக அவசியம்.

நல்ல கவிதையை வாசிக்க, எழுத தனிமை அவசியம்.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அலசி ஆராய தனிமை நிச்சயம் தேவை.

ஆனால், எப்போதும் தனிமையாக வாழ விரும்புவது மனித இனத்திற்கு நல்லது அல்ல.

அப்படி ஒரு வாழ்க்கை அவசியமும் இல்லை.

நீங்கள் தனிமை விரும்பியா?

இன்றிலிருந்து உங்களுடைய  தனிமை எண்ணத்தை, பழக்கத்தை மாற்றி விடுங்கள்.

அழகான குழந்தைகளை கொஞ்சி மகிழுங்கள்.

நல்ல கவிதையை நண்பர்களுடன் சேர்ந்து ரசியுங்கள்.

தமாஷான ஜோக்கை கேட்டு பலமாக சிரியுங்கள்.

வீட்டு அறையில் தனிமையில் அடங்கி கிடக்காதீர்கள்.

வீதியின் வெளிச்சத்திற்கு வாருங்கள்.

உலகத்தில் நடக்கும் விதவிதமான அற்புதங்களை கண்டு வியப்பு அடையுங்கள்.

நகரத்தில் நடக்கும் முன்னேற்றப்பணிகளை ஒருமுறை வலம் வந்து பாருங்கள்.

அழகான பெண் அல்லது ஆண் அணிந்து செல்லும் நல்ல உடையை கண்டு, அதைப் போன்று அணிய ஆசைப்படுங்கள்.

புதிதாக வந்துள்ள விலை உயர்ந்த காரை பாருங்கள். அதனை கர்வமாக ஓட்டிச் செல்லும் பணக்காரரின் திமிரை கண்டு ரசியுங்கள்.

பறவைகளை பார்த்து மகிழுங்கள்.

இப்படி செய்தால், தனிமையைவிட, கூடி வாழ்வது எவ்வளவு சுகமானது என்பது உங்களுக்கு உண்மையில் தெரியவரும்,

உலகத்தில் நடக்கும் அற்புதங்கள் கண்முன் தெரியும்.

மனம் மகிழ்ச்சி அடையும்.

மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

புதிய எண்ணங்கள் உதிக்கும்.

வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தெரியவரும்.

வயதான பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு, தனியாக செல்லும் ஆசை குறைந்து விடும்.

பெற்றோருடன், குழந்தைகளுடன், கொஞ்சி மகிழ ஆசை பிறக்கும்.

அதன்மூலம், பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு ஒரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தனிமையை குறிவைத்து இயங்கும் கொடிய, கொடூர கும்பலின் அட்டகாசம் குறைந்துவிடும்.

சமூகத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்கள் குறைந்துவிடும்.

தனிமையை விட்டு, சமூகத்துடன் கூடி வாழ்வதால், வாழ்வின் ஆயுள் அதிகரிக்கும்.

நல்ல உடல்நலம் கிடைக்கும்.

வீட்டில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி பிறந்து, என்றென்றும் நிரந்தரமாக குடிபுகுந்துவிடும்.

இதனால் வீடு சொர்க்கமாக மாறிவிடும்.

இதுயெல்லாம், தனிமையை விட்டுவிடுவதால் கிடைக்கும் ஆயிரம்  கோடி நன்மைகள்.

இந்த நன்மைகளுக்கு உங்களை நீங்கள் தயார் படுத்தக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக,  இளம் பெண்கள் என்றுமே தனிமையாக இருக்கக்கூடாது.

வீட்டில் இளம் பெண்களை தனிமையில் விட்டுவிட்டு, பெற்றோர்கள், வெளியே செல்லவே கூடாது.

பல கூடா நட்புகளுக்கு வீட்டில் இளம் பெண்கள் தனிமையாக இருப்பதே முக்கிய காரணம் என்பது அண்மை கால நிகழ்வுகள் நமக்கு பாடங்களாகச் சொல்லித் தருகின்றன.

இளம் பெண்கள் சீரழிந்து போவதற்கு தனிமை முக்கிய காரணம் என்று  புள்ளி விவரங்களின் மூலம் தகவல்கள் கிடைக்கின்றன.

தனிமை மனிதனுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை.

இப்படிப்பட்ட  நன்மை எதுவும் செய்யாத தனிமையை நாம் ஏன் விரும்ப வேண்டும் ?

தனித்து வாழ ஏன் ஆசைப்பட வேண்டும்?

வாருங்கள். இன்று முதல் கூடி வாழ்வோம். கோடி நன்மைகளை வாரி கொள்வோம்.

என்ன நான் சொல்வது உண்மைதானே!


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, October 10, 2011

சென்னை உயர்நீதிமன்றம் !


சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சிவப்பு நிறக்கட்டமான உயர்நீதிமன்ற கட்டடத்திற்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதும் உண்டு.

ஆற்காடு நவாப்பிற்கு சொந்தமான இடத்தில் இந்தோ-சார்சியனிக் கட்டடக் கலை நுட்பத்தில்தான் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டதுதான் உயர்நீதிமன்றம்.  உலகத்திலேயே  இரண்டாவது மிகப் பெரிய நீதிமன்ற வளாகமான சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. உயர்நீதின்றத்தின் ஒவ்வொரு கல்லுக்கும், அறைக்கும் தனி அழகு இருக்கவே செய்கிறது.

அழகிய கலை நுட்பத்துடன் இயற்கையான சுற்றுச்சூழலில், தெளிவான ஒளி விழும் விதத்தில்  வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், முதல் உலகப் போரின்போது, சேதம் அடைந்து, பின்னர் சரி செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் அடையமாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கோ இன்றும்  சிதைந்த நிலையிலேயே உள்ளது. 

1862 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் தொடங்கப்பட்ட மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் அடங்கும். 1870 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், அதன்பிறகு, இந்தியர்களும் இங்கு வழக்குரைஞர்களாக வாதாட அனுமதிக்கப்பட்டது. பல சிறப்புகளை கொண்ட இந்த உயர்நீதிமன்றத்தில் முதல் நீதிபதியாக திருவாரூர் முத்துசாமி அய்யர் நியமிக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று  சென்னை உயர்நீதிமன்றம் என  பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


40 நீதிமன்றங்களை உள்ளடக்கிய இந்த நீதிமன்றத்தில், மொத்தம் 60க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால்  49 நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர். 4 ஆயிரம்  வழக்குரைஞர்கள் வாதாட,  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாட்டின் பல இடங்களில் இருந்து நாள்தோறும் 20 ஆயிரம் பேர் உயர்நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.


இலவச சட்ட ஆலோசனை நடுவம், முத்த குடிமக்களுக்கான சிறப்பு விசாரணை நடுவம், மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி உதவி அலுவலகம் என மக்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகளும் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து வருகின்றன. தென் தமிழக மக்கள் வழக்குகளுக்காக சென்னைக்கு அடிக்கடி வந்து செல்வதை தவிர்க்க கடந்த 2004 ஆம் ஆண்டு, ஜுலை 24 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்டது.

பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தில் இதுவரை ஏனோ, தமிழ்  வழக்காடும் மொழியாக அறிவிக்கப்படவில்லை. 



சட்டத்துறையில் பல முன்மாதிரியான திருத்தங்கள், தீர்ப்புகள், அதிரடி அறிவிப்புகளை தந்த பெருமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. அதேநேரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரப்வரி 19 ஆம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்குரைஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மிகப் பெரிய மோதல், உயர்நீதிமன்ற வரலாற்றில் அழிக்க முடியாது ஒரு கரும்புள்ளியாகும்.

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் 7 முக்கிய வாயில்களிலும்  ஒளிப்பதிவு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர ஆய்விற்கு பிறகே அனைவரும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.   உயர்நீதிமன்றத்திற்குள் வருவோரை கண்காணிக்க காவல்துறையின் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில்  460 காவலர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். 

நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஊர்திகளுக்கு தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு நெறிகளை பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பல வழக்குகளுக்காக நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும்   சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாட்டின் நீதித்துறையில் எப்போதும் தனி இடம் உண்டு. அடுத்த ஆண்டு 150 ஆண்டை நெருங்கியுள்ள இந்த உயர்நீதிமன்றம், பல அறிவு ஜீவிகளை கண்டுள்ளது.

எனினும் சரியான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, இங்கு இன்னும் செய்து தரப்படவில்லை. கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற  கட்டடம் இன்று ஏனோ சரியாக பராமரிக்கப்படாததால், மெல்ல மெல்ல, அதன் வீரியத்தை இழந்து வருகிறது. வழக்கின் தன்மையை மக்கள் அறிந்துக் கொள்ளவும், இளம் வழக்குரைஞர்களை ஊக்குவிக்கவும் தமிழ் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே, சென்னை உயர்நீதிமன்றத்தின்  புகழ் மேலும் சிறப்பு பெறும்.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, October 9, 2011

மூளை !

படித்தது ! பயன் உள்ளது !

"னக்கு மூளையே கிடையாதா? என்று யாரையும் திட்டாதீர்கள்.

 எல்லோருக்கும் மூளையிருக்கிறது. அதுமட்டுமின்றி தினமும் மூளை வளருகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10,000 நியூரான் செல்கள் (நரம்பு செல்கள்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடுகின்றன. தினமும் புதிதாக நரம்புசெல்கள் பிறந்து உடனே அழிந்து போவதால் என்ன பயன்? மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது? புதிதாகப் பிறந்த நரம்பு செல்கள் சாகமல் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அதற்கு தினமும் புதிதாக எதையாவது நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். புதிதாகப் பிறக்கும் மூளை செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.

இதுதான் என்றில்லை, எதை வேண்டுமானலும் கற்கலாம்; சீட்டாட்டத்தில் புதிதாக ஒரு டிரிக், செஸ் விளையாட்டில் புதிய மூவ், கித்தார் இசை, புதிதாக ஒரு ராகம், புதிய நாவல், கடினமான ஒரு கணக்கு..... குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் ஏதாவதொன்றை முயன்று கற்றுக் கொண்டிருந்தால் தினமும் தோன்றும் 10,000 செல்களில் ஒரு சிலவாவது மூளையில் நிலைத்து நிற்கும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களுக்குப் பிறந்தபோது எந்த அளவு மூளை இருந்ததோ, பெரியவர்களாகும்போது அதே அளவு, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிதாகி விடும் என்றுதான் இதுநாள் வரை பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உடம்பில் வேறு எங்கு வேண்டுமானாலும் புதிதாக திசுக்கள் தோன்றினாலும் தோன்றலாம், மூளையில் மட்டும் அது சாத்தியமில்லை என்று 1990 வரை கருதிவந்தனர்.
லிசபெத் கோல்டு (பெண்மணி) என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கும் என்பதைக் கண்டுபிடித்தபின் நரம்பியலில் ஏகப்பட்ட ஆய்வுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. மூளை வளரந்து கொண்டேபோனால் கபாலம் வெடித்துவிடுமே என்று பயப்படவேண்டாம். மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள ஹிப்போக் கேம்பஸ் என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்புசெல்கள் தினமும் தோன்றுகின்றன. 1998 இல் ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது எலிகளுக்கு மட்டுமல்ல, மனிதருக்கும் பொருந்தும் என்று தெரிந்தது.

அதெப்படி நரம்பு செல்கள் புதிதாக முளைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்? ரொம்ப சிம்ப்பிள். புரோமோ டி ஆக்ஸி யூரிடின் (Bromo deoxy uridine—BrdU)) என்ற கெமிக்கலை இரத்தத்தில் செலுத்தினால் எங்கெல்லாம் உடலில் புதிதாக செல்கள் முளைக்கின்றனவோ அந்த இடமெல்லாம் பளிச்சென்று ஒளி விடும். பச்சை நிற ஒளித்திட்டுகள் செல்கள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காட்டிக் கொடுத்தவிடும். எலிகளில் சோதனை செய்தபோது ஹிப்போகேம்பஸ் பகுதியில் தினமும் 5000 முதல் 10,000 செல்கள் புதிதாகத் தோன்றுகின்றன என்பது தெரிந்தது.

Brain

மார ்ரிஸ் வாட்டர் மேஸ் (Morris Water Maze) என்று ஒரு பரிசோதனை. எலியை பால் விட்டு கலக்கிய கலங்கலான தண்ணீர்த் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். தொட்டியிலிருந்து வெளியேற அது தத்தளித்து இங்கு மங்கும் நீந்தும். ஓரிடத்தில் பிளாட்பாரம் (மேடை) சட்டென்று புலப்படாமல் மறைந்திருக்கும். ஏதேச்சையாக அதைக் கண்டுபிடித்துவிட்ட எலி அடுத்த இரண்டு மூன்று பரிசோதனையில் அதைக் கற்றுக் கொள்ளும். தொட்டியின் உள்ளே காணப்படும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒரே தாவில் மேடையைக் கண்டுபிடித்துத் தப்பித்தவிடும். எலிகளுக்கு பயம், எச்சரிக்கை, தப்பிக்கும் தந்திரம் போன்ற புதிய அனுபவ அறிவுகளை வழங்கிவிட்டு, மூளையில் ஹிப்போ கேம்ப்பஸில் புதிய நரம்பு செல்களை புதிதாக தோன்றுகின்றனவா என்று எண்ணிப்பார்ப்பார்கள். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.

தினமும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் வேர்செல்களிலிருந்து உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளைப் பதித்துக்கொள்ள தயாராக நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாக இருந்தால் அதற்காக ஒரு சில செல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. மறுநாள் இன்னொரு செட் நியூரான்கள் முற்றி தயார் நிலைக்கு வருகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக் கொள்ளும் அனுபவம், அதன் தீவிரம், அவசரம், அவசியம் ஆகியவை பொறுத்து மாறுகின்றது. அதிக சிக்கலான அனுபவங்களுக்கு அதிக செல்கள் தேவைப்படுகின்றன.


எந்த செல்லை அழிப்பது எந்த செல்லை விடுவது என்பதை நிர்ணயிப்பது அந்தந்த செல்களே. நினைவுப் பதிவில் ஈடுபடும் செல்களைத் தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன. நினைவு ஆக்கத்தில் சம்மந்தப்பட்ட நரம்புசெல்லில் சில மாறுதல்கள் நடைபெறுகின்றன. நரம்பு செல் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நரம்பு செல், நீண்ட காம்புடைய மல்லிகை மொட்டுபோல் இருக்கும். காம்பினை ஆக்ஸான் என்பார்கள். மொட்டுப்பகுதிதான் செல். அதிலிருந்து நிறைய தலை முடிபோல் இழைகள் வெளிப்படும்; அவற்றை டென்ட்ரைட் என்பார்கள். நினைவு ஆக்கத்தில் ஈடுபட்ட செல்லின் ஆக்ஸானின் முனை ஹிப்போக்கேம்பஸின் ஒருபகுதியாகிய CA3 என்று இடத்துடன் தொடர்பு கொண்டுவிடும். டென்ட்ரைட்டுகள் வேறு நரம்பு செல்களுடன் தொடர்பு கொண்டுவிடும். இப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத நரம்பு செல்கள் செத்துவிடுகின்றன.

Brain

பரிசோதனையின் மூலம் எலிகளின் மூளையில் நரம்பு செல் உருவாவதைத் தடுத்தால், அவை புதிதாக சொல்லித்தருவதைக் கற்றுக் கொள்வதில்லை. MAM என்று ஒரு கெமிக்கல்; இதை உடலில் செலுத்தினால் புதிய நினைவுகள், அறிவு அனுபவம் எதுவும் பதியாது. இது நேரடியாக நரம்பு செல்கள் வளர்வதைத் தடைசெய்கிறது. எலிகளிடம் சுலபமாக இப்படி சோதனை செய்யயலாம். மனிதர்களிடம் இது சாத்தியமில்லை, இருந்தாலும் எதிர்பாரதவிதமாக சிலவாய்ப்புகள் கிடைப்பதுண்டு, மூளையில் கேன்ஸர் ஏற்பட்டவர்களுக்கு "கீமோதெராப்பி" (Chemotherepy) என்று ஒரு சிகிச்சை செய்வார்கள், வீரியமிக்க கெமிக்கல் கேன்ஸர் செல்கள் வளருவதைத் தடைசெய்யும். ஹிப்போக்கேம்பஸிலும் செல்வளர்ச்சி தடை ஏற்படுவதால், சில பரிசோதனைகளை இந்நோயளிகளிடமும் செய்து பார்க்க முடிகிறது. இதை கீமோபிரெய்ன் (Chemo brain) என்பார்கள். சிலரிடம் அல்ஷெய்மர் என்ற நரம்பு செல் நோய் இருக்கும். ஹிப்போகேம்பஸில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு நினைவுகள் மறப்பதும் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளமுடியாதிருப்பதும் தெரிகிறது.

முதுமை வரும்போதே கூடவே மறதியும், மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க வேண்டுமாயின் அன்பர்களே தினமும் எதையாவது படியுங்கள், ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்களுடன் பொழுது போக்குங்கள். செய்யக்கூடாதவை சிகரெட் பிடிப்பது, குடிப்பது, செய்யவேண்டியது உடற்பயிற்சி, பழங்கள் சாப்பிடுவது, புதிதாக கற்பது. ஆன்ட்டி டிப்ரசன்ட் மாத்திரைகள்கூட நரம்புசெல் நிலைப்பாட்டை அதிகரிக்கிறதாம்.

இந்தக் கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா. இன்றைக்கு குறைந்தது நூறு நரம்புசெல்களாவது உங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும்!


S.A.ABDUL AZEEZ


Thursday, October 6, 2011

ஹலிம் !

 ஹலிம் !



ஐதராபாத் ஹலிம்  சாப்பிட்டு இருக்கியா அஜீஸ் என ஒருநாள் என்னைப் பார்த்து  கேட்டார்  எம்.எல்.ஏ. அப்துல் பாசித்.

அரசினர் தோட்டத்தில் இருக்கும் எம்.ஏல்.ஏ. ஹாஸ்டலில் வாணியம்பாடி எம்.எல்.ஏ. அப்துல் பாசித் அறையில் தங்கியிருந்தேன்.

எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசும் அப்துல் பாசித், ஐதராபாத் ஹலிம்  குறித்து திடீரென கேட்டதால், எனக்கு விளங்கவில்லை.

ஐதராபாத் நவாப்கள் சாப்பிட்ட உணவுப்பா அது. என சொல்லி சிரித்தார்.

அதோமட்டும் நிற்காமல் ஒருநாள் சென்னை, திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்த கடைக்கு  என்னை அழைத்துச் சென்று ஹலிமை வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னார்.


முதன் முதலாக ஹலிமை சாப்பிட்டபோதே, அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. சாப்பிட்ட அன்றே  உடம்பில் ஒருவித  புதிய தெம்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.

பிறகு பலமுறை, திருவல்லிக்கேணிக்கு சென்று,  ஹலிமை வாங்கி  சுவைத்தேன். இப்போதும் அடிக்கடி சுவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

நண்பர்கள் ஹரி, முரளி ஆகியோரை ஒரிருமுறை அழைத்து சென்று ஹலிமை வாங்கிக் கொடுத்து சாப்பிட்ட வைத்தேன்.

சரி. ஹலிமில் அப்படி என்னதான் இருக்கிறது?

கோதுமை, இறைச்சி, சக்தியான மூலப்பொருட்கள், மசாலா ஆகியவற்றின் ஒரு கலவைதான்  ஹலிம்.


சுமார் 7 மணி நேரம் வரை அடுப்பில் வைத்து  சமையல் செய்து, கோந்து மாதிரி தயாரிக்கப்படும்  ஹலிம்,  வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்படுகிறது.

இதனுடன் ஷாமீயாவை என்று மற்றொரு உணவுவையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவை கூடிவிடுகிறது.

ஹலிமை சாப்பிட்டவுடன், வயிறு நிரம்பிவிடுகிறது.  சிறிது நேரத்திலேயே  உடம்பில் ஒருவித புதிய தெம்பு ஏற்படுகிறது.
இதை,  இரவில் மிக நன்றாகவே உணர முடிகிறது.

முதன்முதலாக ஹலிமை சாப்பிட்ட நண்பர் ஹரி, மறுநாள் போன் செய்து, சார், நீங்கள் சொன்னது உண்மைதான் சார். என சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி ஒரு ஹெல்த்தியான ஒரு உணவுதான் ஹலிம்.


அரேபிய நாட்டு உணவுவான ஹலிம், முகலாயர்களின் ஆட்சி காலத்தில், ஆப்கானிஸ்தான் வழியாக  முதன் முதலாக இந்தியாவுக்கு  வந்து சேர்ந்தது.

அன்று முதல் இன்று வரை, வடமாநில மக்களால் ஹலிம் விரும்பி சுவைக்கப்பட்டு வருகிறது.

வடமாநிலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தாலும், ஐதராபாத் நகரில் தயாரிக்கப்படும் ஹலிமுக்குதான் கிராக்கி அதிகம்.

ஐதராபாத் சார்மீனார் பகுதியில் இருக்கும் கடைகளில் மாலை நேரங்களில் விற்கப்படும் ஹலிமை வாங்கிச் சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் அலை மோதும்.

ஐதராபாத்தில் மட்டும் ஹலிம் தயாரிப்பில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் நடைபெறுகிறது.

ரம்ஜான் மாதத்தில் இரவு பகல் என கணக்கு பார்க்காமல், 24 மணி நேரமும் ஹலிம் தயாரிக்கப்பட்டு,  மிக அழகாக பார்சல் செய்யப்பட்டு நாடு முழுவதும்  அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில்,  இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் சென்னை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில்  இடங்களில் மட்டுமே, ஹலிம் கிடைக்கிறது.


இஸ்லாமியர்களிடையே விரும்பி சாப்பிடப்படும் இந்த உணவு, தற்போது அனைத்துத்தரப்பு மக்கள் மத்தியிலும் விரும்பப்படுகிறது.

இதன் சுவை, உடம்பிற்கு கிடைக்கும் புதிய தெம்பு, உற்சாகம் ஆகியவற்றால் கவரப்படும் இளைஞர்கள், ஹலிமை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது.

இனிப்பு, காரம் என இரண்டு சுவைகளில் ஹலிம் கிடைத்தாலும், மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது காரச்சுவையான ஹலிமைதான்.

இஸ்லாமியர்களின் திருமணங்களின்போது,  ஹலிம் உணவு அதிகளவு பரிமாறப்படுவது  இன்றும் வழக்கமாக உள்ளது.

சுவையான ஐதராபாத் ஹலிம் உணவுக்கு தற்போது, காப்புரிமையும் கிடைத்து உள்ளது.

ஐதராபாத் ஹலிம் என்ற பெயரில் பிற இடங்களில் ஹலிமை  இனி விற்க முடியாது.


அப்படியே விற்றாலும், அது ஒரிஜனல் ஹலிமாக கருதப்படாது.

இந்தியர்களுக்கு உணவு வகைகளின் மீது எப்போதும் ஓர் அலாதி பிரியம் உண்டு.

பலவகை உணவுகளை சுவைத்து பார்ப்பதில், நம்மில்  பலருக்கு ஆர்வம் அதிகம்.

அப்படிப்பட்டவர்கள் ஹலிமை சுவைக்காமல் இருப்பதில்லை.

குண்டு உடல் கொண்டவர்கள் தொடர்ந்து ஹலிம் சாப்பிட்டு வந்தால், உடல் இளைக்க வாய்ப்பு உண்டு.

இது அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகள்.

ஐதராபாத் பிரியாணிக்கு பிறகு,  தற்போது ஐதராபாத் ஹலிம் நாடு முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம், அனைத்துத் தரப்பு மக்களால், ஹலி¦ம் விரும்பி சாப்பிடப்படுவதுதான்.

இதனால்தான், கூரியர் சர்வீஸ் மூலமும், இந்தியாவின் பிற இடங்களுக்கு ஐதராபாத்தில் இருந்து ஹலி¦ம் அனுப்பி வைக்கப்படுகிறது.


இப்படி சுவையான விஷயங்கள் கொண்டு இந்த ஆரோக்கியமான  ஹலிமை ஒருமுறை நீங்களும் சுவைத்துதான் பாருங்களேன் !

பிறகு ஹலிமை நீங்கள் அடிக்கடி  நாடி செல்வது உறுதி !



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்