"தமிழக
அரசியலில், முஸ்லிம் கட்சிகளின் சரியான அணுகுமுறை"
- ஜாவீத் -
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தங்களுடைய பிரச்சாரங்களை தற்போது தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் களம் மெல்ல மெல்ல சூடுப் பிடிக்க தொடங்கியுள்ளது. மக்களின் மன நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வாக்காளர்கள் எடைப்போட்டு பார்க்க தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகளும் தங்களுடைய செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளன. இதனால், தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து, மழை, குளிர் காலங்களிலும் வெப்பம் தகிப்பது போன்று சூடாக மாறியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசியலில் முஸ்லிம்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? முஸ்லிம்கள் கட்சிகள், இயக்கங்கள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளன? தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிமுக, தன்னுடைய பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் வட மாநிலங்களைப் போன்ற ஒரு இந்துத்துவ நிலைப்பாட்டை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் இயக்கங்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் பிற முஸ்லிம் கட்சிகள், சரியான திசையில் பயணம் செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பினால், தற்போதைய நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டும், மாநிலத்தில் அமைதியான மதநல்லிணக்கம் எப்போதும் போன்ற தழைத்து நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, தங்களுடைய செயல்பட்டை அமைத்துக் கொண்டு, தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. சரியான திசையை நோக்கிப் பயணிக்கின்றன என்ற கூற வேண்டும்.
வகுப்புவாத அட்டையை பயன்படுத்த மறுப்பு :
மதுரையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 22 அன்று, இந்து முன்னணி ‘முருக பக்தர்கள் மாநாடு நடத்தியபோது, அது இந்து மதத்தின் கொண்டாட்டமாக இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பழனியில் உலகளாவிய முருகன் மாநாட்டை திமுக அரசாங்கத்தால் ஏற்பாடு செய்தபோது, முருகனை கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு அரசியல் முயற்சியாகவும் அது கருத்தப்பட்டது. மதுரையில் வலதுசாரி நிகழ்வுக்கு பதினைந்து வாரங்களுக்குப் பிறகு, முஸ்லிம் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி அதே இடத்தில் ஒரு பேரணியை நடத்தியபோது, சிலர் வகுப்புவாத பதற்றம் ஏற்படுமோ என்று அஞ்சினர். இருப்பினும், ஜூலை 6 அன்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி மேடையில் ஒரு வித்தியாசமான காட்சி தோன்றியது. கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், இந்து ஆன்மீகத் தலைவரும் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனருமான திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் கத்தோலிக்க பாதிரியார் மற்றும் சமூக ஆர்வலர் ரெவரெண்ட் ஜெகத் காஸ்பர் ராஜ் ஆகியோரை தனது பக்கத்தில் அமர்த்தி அழகிய அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 29 அன்று தூத்துக்குடியின் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதன் மண்டல மாநாட்டை நடத்தியது. இதன் கருப்பொருள் மீண்டும் மத நல்லிணக்கம் என்பதாக இருந்தது. இதன்மூலம் இரண்டு முக்கிய முஸ்லிம் கட்சிகளும் மத துருவமுனைப்பு விளையாட்டை விளையாட மறுப்பதாக மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மத ரீதியதாக செயல்படுவது தங்களின் அரசியல் எதிரிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த இரண்டு இயக்கங்களும் எப்போதும் மத நல்லிணக்கத்தில் உறுதியாக இருந்து வருகின்றன. மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையுடன், மத நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழ வேண்டும் என்று உறுதியாக நினைத்து அதன்படி, தங்களுடைய பணிகளை செயலாற்றி வருகின்றன. இதன் காரணமாக தேர்தலில் வகுப்புவாத அட்டையை பயன்படுத்த இரண்டு இயக்கங்களும் மறுத்துவிட்டு, மத நல்லிணக்க ரீதியாக காரியங்களை ஆற்றி வருகின்றன.
சில சக்திகளின் சதி :
மதுரை, திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவில் வழிபாட்டு உரிமைகள் தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து முஸ்லிம் கட்சிகளின் கூட்டங்கள் நடந்தன. மனிதநேய மக்கள் கட்சி மாநாடு அரசாங்கம் தர்காவைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியது. "மதச்சார்பற்ற வாக்குகள் பிரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் மிகவும் தெளிவாக கூறுவதை பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் ஒப்புக்கொள்கிறார். "சில சக்திகள் தமிழ்நாட்டில் ஒற்றுமையின்மையை உருவாக்க விரும்புகின்றன" என குற்றம்சாட்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா "ஆனால் மாநிலம் எப்போதும் ஒரு உள்ளடக்கிய சமூகமாக, வகுப்புவாத நல்லிணக்கத்திற்கான இடமாக இருந்து வருகிறது" என்று கூறுகிறார். இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கூட்டணி தர்மம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனித சகோதரத்துவத்திற்கான தேவையும் உள்ளது என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.
"தமிழ்நாட்டில், நாங்கள் திமுகவுடன் இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அப்படியே இருப்போம். இந்த கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல. 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' (ஒரு சமூகம், ஒரு கடவுள்), 'பிறப்போக்கும் எல்லா உயிருக்கும்' (அனைவரும் சமமாகப் பிறக்கிறார்கள்)' என்ற திமுகவின் முழக்கங்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம்" என்று இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தொடர்ந்து கூறி வருகிறார். பாஜகவை "முஸ்லிம் விரோதக் கட்சி" என்று கட்சிகள் அழைப்பதை இது தடுக்கவில்லை. தங்கள் கூட்டங்களில் பேச்சாளர்கள் மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாதது பற்றிப் பேசுகிறார்கள். மேலும் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்றுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
வகுப்புவாத நல்லிணக்கத்தை வலியுறுத்தல் :
கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட திருப்பூர் மற்றும் காயல்பட்டினத்தில் சமீபத்தில் நடைபெற்ற மண்டல மாநாடுகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வகுப்புவாத நல்லிணக்கத்தை வலியுறுத்தியது. "டச்சுக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோயில் சிலைகளை மீட்டெடுப்பதில் வரலாற்றுப் பங்காற்றியதற்காக காயல்பட்டினத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். முஸ்லிம் வணிகர்களின் பங்களிப்புகளை நினைவுகூரும் கோயில் கல்வெட்டுகள் அங்கு உள்ளன" என்று இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மதுஅபூபக்கர் மத நல்லிணக்கம் தொடர்பாக அழகிய முறையில் கருத்துகளை கூறியுள்ளார்.
தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அளவுகள் அதிகமாக இருப்பதால், வலதுசாரி குழுக்களின் துருவமுனைப்பு முயற்சிகள் பலனளிக்காது என்று முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளனர். "ஆனால் முருகனை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது, மாநிலத்தில் பதற்றமும் பயமும் நிலவுகிறது" என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி அச்சம் தெரிவிக்கிறார். சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் அதிமுக பலவீனமாக இருந்ததால் முஸ்லிம் கட்சிகள் "பாதுகாப்பான இடங்களில்" அதாவது திமுக அணியில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவிக்கிறார்.
இதேபோன்று, அதிமுகவின் முன்னாள் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கூட மிதவாதத்தைப் பேசுகிறது. எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், தமிழ்நாட்டை ஒருபோதும் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முடியாது என்று கூறுகிறார். "தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது," என்று அவர் தெரிவிக்கிறார்.
முக்கிய அம்சங்கள் :
சகோதரத்துவம் மற்றும் வகுப்புவாத நட்புறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களை சந்திக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, சமூகங்களின் அமைதியான சகவாழ்வின் அவசியத்தை வலியுறுத்தவும் மனிதநேய மக்கள் கட்சி ஆகஸ்ட் முதல் ஆயிரம் தெரு முனை கூட்டங்களை நடத்தும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறி இருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சமூகத்திற்கு விகிதாசார பங்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் குழுக்கள் எழுப்புகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள 776 எம்.பி.க்களில் 39 பேர் மட்டுமே முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். . பதினைந்து பேர் மாநிலங்களவையில் உள்ளனர்; 24 பேர் மக்களவையில் உள்ளனர். 28 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 12 இடங்களிலிருந்து மட்டுமே எம்.பி.க்கள் வருகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில், 24 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது அவையின் 4 புள்ளி 4 சதவீதமாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4 ஆயிரத்து 123 எம்.எல்.ஏ.க்களில், 296 பேர் மட்டுமே முஸ்லிம்கள். 234 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஏழு பேர் மட்டுமே முஸ்லிம்கள். தமிழகத்தின் தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சியில், முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 9 சதவீதம் உள்ளனர். இருப்பினும், 200 கவுன்சிலர்களில் நான்கு பேர் மட்டுமே முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருப்பது நல்லிணக்கத்தை உருவாக்க உதவும் என்று தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகள் உறுதியாக நம்புகின்றன. அதற்காக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகளின் சரியான அணுகுமுறை :
தமிழகத்தில் மாநிலத்தின் வகுப்புவாத சமநிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், வட மாநிலங்களில் பயன்படுத்திய உத்திகளை இப்போது தமிழகத்தில் செய்ய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மாநில அமைச்சருமான அன்வர் ராஜா உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் இயக்கங்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தற்போது சரியான அணுகுமுறையில் தங்களது பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் மத நல்லிணக்கம் எப்போதும் போல் தழைக்க வேண்டும். மக்கள் அமைதியுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், மாநிலத்தின் வளர்ச்சி உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் இயக்கங்களின் உயர்ந்த இலட்சியமாக இருந்து வருகிறது.
எனவே தான், தமிழகத்தில் வகுப்புவாத சமநிலையை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்தாலும், தாங்களும் மத ரீதியாக செயல்பட வேண்டும் என்று சிறிதும் நினைக்காமல், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் போன்ற உயர்ந்த நிலைப்பாட்டுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியை ஆதரிக்கும் பிற முஸ்லிம் இயக்கங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றன. அதன்மூலம் மாநிலத்தில் பதற்றம் உருவாகாமல் பார்த்துக் கொள்கின்றன. மக்களிடைய சமூக நல்லிணக்கத்தை விதைக்கின்றன. மத நல்லிணக்கத்தை தழைக்க பாடுபடுகின்றன. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் இயக்கங்களில் அணுகுமுறை சரியான திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பதை அறியும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
========================