50 லட்சத்தை எட்டிய குவைத் மக்கள் தொகை....!
குவைத் நாட்டின் மக்கள் தொகை தற்போது 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது, ஜூன் 30, 2025 நிலவரப்படி 50 லட்சத்து 98 ஆயிரத்து 539 பேர் குவைத்தில் இருப்பதாக பதிவாகியுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. தற்போது குவைத் குடிமக்கள் ஒரு சதவீத புள்ளி குறைந்து, மக்கள் தொகையில் 30 புள்ளி 4 சதவீதமாக உள்ளனர் என்று .குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பத்து லட்சத்து 57 ஆயிரமாக இருந்த குவைத் மக்களின் எண்ணிக்கை ஜூன் 30, 2025 அன்று 15 லட்சத்து 50 ஆயிரத்து 547 ஆக இருக்கிறது என்று சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) மக்கள் தொகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மொத்த மக்கள் தொகையில் குவைத் மக்கள் தொகை 31 புள்ளி 4 சதவீதமாக இருந்தது.
குவைத் குறித்த சுவையான தகவல்கள் :
குவைத் நாடு என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது. பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது. 1919-20 இல் நடைபெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது. 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.
குவைத் வரலாறு :
1899 முதல் 1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990 அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பல வாரங்கள் நடந்த வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991ஆம் ஆண்டு பிப்ரவரி 23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது. 1990-91போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் 5பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்தது.
அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. அண்மைய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர். 2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்ட்தால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது.
சன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர். 2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை இரத்து செய்த்து) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும்.
குவைத் மக்கள் தொகை :
குவைத் நாட்டின் மக்கள் தொகை 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், சொந்த குடிமக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குவைத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். வீட்டு வேலை செய்பவர்கள், பிற பணியாளர்கள் குவைத்தில் அதிகமாக இருந்து வருகிறார்கள். முதல் முறையாக, குவைத்தில் ஆண் மக்கள் தொகை, பெண்களை விட அதிகமாக உள்ளது. ஜூன் 30, 2025 அன்று, குவைத்தில் ஆண்கள் 7 லட்சத்து 76 ஆயிரத்து 656 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 73 ஆயிரத்து 891 ஆகவும் உள்ளது. முந்தைய புள்ளிவிவரங்களில், குவைத் மக்கள்தொகையில் 51 சதவீதமாக பெண்கள் இருந்தனர். ஆண்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் இறுதியில் 2 புள்ளி 16 சதவீதமாக சரிவு இருந்தபோதிலும், தற்போது 3 புள்ளி 5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
குவைத் அல்லாத மக்கள்தொகை :
குவைத் அல்லாத மக்கள்தொகை 35 லட்சத்து 47 ஆயிரத்து 992 குடியிருப்பாளர்களாக அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 69 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து 3 புள்ளி 8 சதவீதமாக வலுவாக அதிகரித்து, ஒரு லட்சத்து 30 ஆயிரம் புதியவர்களைச் சேர்த்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 21 லட்சம் அல்லது மொத்த மக்கள்தொகையில் 40 புள்ளி 7 சதவீதமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது மொத்த வெளிநாட்டினரில் 58 புள்ளி 4 சதவீதமாகும். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 3 புள்ளி 65 சதவீதம் உயர்ந்துள்ளனர். அரேபியர்கள் பத்து லட்சத்து 37 ஆயிரம் குடியிருப்பாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் சுமார் 26 சதவீதமாகும். ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பிறர் மீதமுள்ளவர்கள் ஆவர்கள்.
இந்தியர்கள் அதிகம் :
குவைத்தில் இந்தியர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுடன் முன்னணி வெளிநாட்டினர் சமூகமாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து எகிப்தியர்கள் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளனர். வீட்டு வேலையாட்கள், அவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜூன் 30, 2025 அன்று 8 லட்சத்து 23 ஆயிரமாக உயர்ந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 7 லட்சத்து 81 ஆயிரமாக இருந்தது. தற்போது இது 5 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பி.ஏ.சி.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது. ஜூன் 30, 2025 அன்று, குவைத்தில் மொத்த பணியாளர்கள் 31 லட்சத்தை எட்டியுள்ளனர். இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 30 லட்சத்து 65 ஆயிரமாக இருந்தது. இருப்பினும், குவைத் பணியாளர்களின் எண்ணிக்கை ஆறு மாதங்களுக்கு முன்பு 5 லட்சத்து 5 ஆயிரமாக ஆக இருந்தது. தற்போது ஜூன் 30 அன்று 4 லட்சத்து 91 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
குவைத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் அல்லது 80 சதவீத பணியாளர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள் ஆவார்கள். 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனியார் துறை வேலைகளிலும், 30 ஆயிரத்து 600 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 30 ஆம் தேதி கணக்கின்படி, வெளிநாட்டினரின் எண்ணிக்கை 20 லட்சத்து 65 ஆயிரமாக எட்டியுள்ளது. இதன் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 20 லட்சத்து 56 ஆயிரமாக இருந்தது. அரசுத் துறையில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வெளிநாட்டினர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதேநேரத்தில் தனியார் துறையில் சுமார் பத்து லட்சத்து 69 ஆயிரத்து 600 பேர் பணிபுரிகின்றனர். மீதமுள்ள 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் வீட்டு வேலை செய்பவர்கள் என்று குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (பி.ஏ.சி.ஐ.) தெரிவித்துள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment