Tuesday, July 22, 2025

விவசாயிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக சுதந்திர கிசான் சங்கம் செயல்பட வேண்டும்....!

நாட்டில் விவசாயத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.....!

விவசாயிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக சுதந்திர கிசான் சங்கம் செயல்பட வேண்டும்.....!!

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி. பேச்சு....!!!

புது தில்லி, ஜுலை.23- நாட்டில் விவசாயத் துறை மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், ஒன்றிய பாஜக அரசாங்கம் அலட்சியமாக இருக்கும் நிலையில், தேசிய அளவில் சுதந்திர கிசான் சங்கத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முகமது பஷீர் எம்.பி. தெரிவித்துள்ளார். 

இ.யூ.முஸ்லிம் லீகின் சார்பு அமைப்பான சுதந்திர கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய அமைப்புச்  செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி., தொடங்கி வைத்துப் பேசினார். கிசான் சங்க தேசியத் தலைவர் குருக்கோளி மொய்தீன் எம்.எல்.ஏ. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

முகமது பஷீர் உரை :

கூட்டத்தில் பேசிய இ.டி.முகமது பஷீர், "நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக சுதந்திர கிசான் சங்கத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.  கேரளாவில் வலுவான விவசாயிகள் இயக்கமாக வளர்ந்த சுதந்திர கர்ஷக சங்கத்தின் வரலாற்றை நினைவு கூர்ந்த அவர், அதன் தேசிய பதிப்பான சுதந்திர கிசான் சங்கம் தேசிய அளவில் விரிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முகமது பஷீர், நாட்டில் விவசாயத் துறை மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், ஒன்றிய பாஜக அரசாங்கம் அலட்சியமாக இருகப்பதாக குற்றம்சாட்டினார். இத்தகைய நிலையில், தேசிய அளவில் சுதந்திர கிசான் சங்கத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். 

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் :

இந்த செயற்குழுக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வி. அப்துல் வஹாப், அப்துஸ் ஸமத் சமதானி, நவாஸ் கனி, வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் ஆகியோரும் தொடக்க அமர்வில் பங்கேற்று உரையாற்றினனர்.  சுதந்திர கிசான் சங்கத்தின்  பொதுச் செயலாளர் முஹம்மது குட்டி வரவேற்புரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ராம் அனீஸ் உமர் மற்றும் சுதந்திர கிசான் சங்கத்தின் தேசிய நிர்வாகிகள் வி.எம். பாரூக், முன்னாள் எம்.எல்.ஏ., அப்துல்லா மற்றும் ரியாஸ் அகமது ஆல்வி ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தேசிய பொருளாளர் வி.எம்.ஃபாரூக், மாநிலத் தலைவர் ஏ.அப்துல் ஹாதி, மாநில பொதுச் செயலாளர் வி.அஜ்மீர் காஜா, திருச்சி தெற்கு மண்டல மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு.பஷீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: