2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம்:
ஹஜ் பயணிகளுக்கு துணையாக செல்வர்களுக்கான வயது வரம்பு...!
இந்திய ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு....!!
புதுடெல்லி, ஜுலை.31- 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுடன், உதவியாக செல்ல 60 முதல் 65 வயது உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் :
அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பான பணிகளை ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, தற்போது தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் சி.ஷாநவாஸ் ஐ.ஏ.எஸ்.,ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் (யாத்தீகர்கள்) தங்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதாவது https://hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், "HAJ SUVIDHA" என்ற செல்பேசி செயலி மூலம் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை இந்த மாதம் ஜுலை 7ஆம் தேதி முதல், ஜுலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு குறித்த அறிவிப்பு :
இந்நிலையில், ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, 2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் வழிகாட்டுதல்களின் விதிகளில் ஒரு பகுதியாக ஹஜ் பயணிகளுக்கு துணையாக செல்பவர்களுக்கான வயது வரம்பு தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 முதல் 65 வயதான உதவியாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான யாத்ரீகர்களின் துணைவர்களுக்கான வயது வரம்பு தொடர்பான 2026 ஹஜ் வழிகாட்டுதல்களின் விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, 60 முதல் 65 வயது வரையிலான துணைவர் (உதவியாளர்) அனுமதிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய துணைவர் அதாவது உதவியாளர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட யாத்ரீகரின் கணவன் அல்லது மனைவி அல்லது உடன்பிறந்தவராக இருந்தால், அத்தகைய அனுமதி அரசு மருத்துவரின் மருத்துவ தகுதிச் சான்றிதழுக்கு உட்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற அனைத்துக் குழு உறுப்பினர்களும் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், இந்த வயது வரம்பு ஹஜ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முதல் தேதியான 2025 ஜுலை 7ஆம் தேதியை, அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விகாஸ் மோகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், 2026ஆம் ஆண்டு ஹஜ் திட்டத்தின் கீழ், ஆந்திர மாநில விஜயவாடாவில் இருந்து ஹஜ் விமானங்கள் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment