Tuesday, July 8, 2025

2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம்:

 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம்:

வரும் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.....!

இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு.....!!

புதுடெல்லி, ஜுலை.09- 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் செல்லும் இந்திய முஸ்லிம்கள் பயணிகள்  அனைவரும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்கலாம் என  ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. 

2025ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமை மிகவும் சிறப்புடன் நிறைவு அடைந்து, ஹஜ் பயணம் மேற்கொண்ட இந்திய ஹஜ் பயணிகள் அனைவரும் தாயகம் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எந்தவித சிரமமும் இல்லாமலும், பாதிப்புகள் எதுவும் இல்லாமலும் இந்தாண்டு ஹஜ் பயணத்தை ஹாஜி நல்ல முறையில் நிறைவேற்ற முடிந்தது. குறிப்பாக, சவுதி அரேபிய அரசின் ஹஜ் விவகாரங்கள் குழு மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவை இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து இருந்ததை, ஹாஜிகள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். 

2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் :

இந்நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பான  பணிகளை ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, தற்போது தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் சி.ஷாநவாஸ் ஐ.ஏ.எஸ்., அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பாக விரிவான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் :

2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் (யாத்தீகர்கள்) தங்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதாவது https://hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், "HAJ SUVIDHA" என்ற செல்பேசி செயலி மூலம் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  விண்ணப்பங்களை இந்த மாதம் ஜுலை 7ஆம் தேதி முதல், ஜுலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய தகவல்கள் :

2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்வதற்காக விண்ணப்பிக்கும் ஹஜ் பயணிகள் அனைவரும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ள வழிக்காட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் அனைத்தையும் கவனமாக படித்து நினைவில் வைத்துக் கொண்டு விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்திய அரசின் சார்பில் வினியோகம் செய்யப்படும் சர்வதே பாஸ்போர்ட் தற்போது வழக்கத்தில், அதாவது பயன்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் 31 டிசம்பர் 2026 தேதிக்கு முன்பு வினியோகம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதேபோன்று, பாஸ்போர்ட் 31.12.2026 தேதி வரை செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும். 

புனித ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பம் செய்யும் பயணிகள் முக்கியமான அம்சங்கள் இருந்தால் மட்டுமே, தங்களது விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். அதாவது இறப்பு அல்லது கடுமையான நோய் உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்துவிட்டு, திடீரென விண்ணப்பத்தை ரத்து செய்தால், ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் பயணிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இது மிகப்பெரிய அபராதத் தொகையாக இருக்கும் என்பதால், விண்ணப்பம் செய்துவிட்டு எந்தவித காரணமும் இல்லாமல் விண்ணப்பத்தை திரும்ப பெறக் கூடாது. எனவே, புனித ஹஜ் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், மிகவும் கவனமாக இருந்து ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

இவ்வாறு இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் ஷாநவாஸ் ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: