Saturday, July 19, 2025

ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை முன்னுரிமை தந்து வழங்க வேண்டும்...!


ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை (கடவுச்சீட்டு)

முன்னுரிமை தந்து விரைந்து வழங்க வேண்டும் 

பாஸ்போர்ட் வினியோக அதிகாரிகளுக்கு

ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 


புதுடெல்லி, ஜுலை.19- வரும் 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கான பாஸ்போர்ட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல பாஸ்போர்ட் வினியோக அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் :

அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பான  பணிகளை ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, தற்போது தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் சி.ஷாநவாஸ் ..எஸ்.,ஏற்கனவே  வெளியிட்ட அறிக்கையில், 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் (யாத்தீகர்கள்) தங்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதாவது https://hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், "HAJ SUVIDHA" என்ற செல்பேசி செயலி மூலம் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  விண்ணப்பங்களை இந்த மாதம் ஜுலை 7ஆம் தேதி முதல், ஜுலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் :

இந்நிலையில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம் பயணிகளுக்கு 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை, முன்னுரிமை தந்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நோக்கத்துடன் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக, அதற்காக தனி அதிகாரி நியமனம், சிறப்பு கவுண்டர்கள் திறப்பு, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது தனி முன்னுரிமை தருவது ஆகிய அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து சரிபார்ப்பு அதிகாரிகள்,. பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் சேவை அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் தேவையான அறிவுறுத்தல்களை பாஸ்போர்ட் வினியோக தலைமை அதிகாரிகள் உடனே வழங்க வேண்டும் என்றும், வெளியுறுத்துறை அமைச்சகம் சார்பில் ராஜேஷ் ரஞ்சன் என்ற அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: