"புனித மக்காவில் உள்ள
வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்துகள்"
இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவில் ஆன்மீக முக்கியத்துவம், சிறப்பு வாய்ந்த மஸ்ஜித்துல் ஹராம் ஷெரீப்பைத் (கிராண்ட் மசூதி) தாண்டி நீண்டுள்ளது. மக்கா மாநகரம் முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்துகள், இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய தருணங்களைக் கண்டவையாகும். இருப்பினும், அடர்த்தியான கூட்ட நெரிசல் மற்றும் நவீன வளர்ச்சியின் விரைவான வேகத்திற்கு மத்தியில், பல யாத்ரீகர்கள் மற்றும் உம்ரா பயணிகள் இந்த புனித தளங்களைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். நகரத்தின் விரிவடைந்து வரும் நகர்ப்புற நிலப்பரப்பில் அமைதியாக இந்த மஸ்ஜித்துகள் மறைக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்று மதிப்புள்ள் மஸ்ஜித்துகள் :
உம்முல்-குரா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஃபவாஸ் அல்-தஹாஸ், இந்த மஸ்ஜித்துகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, "மக்கா மாநகரம் ஆழமான வரலாற்று மற்றும் மார்க்க மதிப்புள்ள பல மஸ்ஜித்துகளைக் கொண்டுள்ளது" என்று பெருமையுடன் கூறுகிறார். "இருப்பினும் அவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றும், ஊடக கவனத்தையோ அல்லது அவை தகுதியான ஒழுங்கமைக்கப்பட்ட மார்க்க வருகைகளையோ பெறவில்லை" என்றும் அவர் வேதனை அடைகிறார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது, அதாவது பிரியாவிடை யாத்திரையின் போது, தனது பிரசங்கத்தை நிகழ்த்திய அரஃபாத்தில் உள்ள நமிரா மஸ்ஜித்தின் முக்கியத்துவத்தை அல்-தஹாஸ் எடுத்துரைக்கிறார். "இந்த மஸ்ஜித் வெறும் ஒரு கட்டட அமைப்பு மட்டுமல்ல, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட ஒரு புனித தளம்" என்று அவர் கூறுகிறார். அன்சாரிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விசுவாசமாக இருந்து, ஹிஜ்ராவிற்கும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும் வழி வகுத்த முக்கிய தருணத்தை நினைவுகூரும் வகையில் மினாவில் உள்ள பயா மஸ்ஜித்தையும் அல்-தஹாஸ் நினைவு கூறுகிறார். அல்-தஹாஸின் கூற்றுப்படி, இந்த மஸ்ஜித்துகளின் முக்கியத்துவம் அவற்றின் புவியியல் இருப்பிடங்களைக் கடந்து, இஸ்லாமிய வரலாற்றில் அவற்றின் ஆழமான அரசியல் மற்றும் மத முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
ஆன்மீக பரிமாணங்கள் :
"மக்காவைக் கைப்பற்றிய நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடி ஏற்றப்பட்ட ஜர்வால் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அல்-ரயா மஸ்ஜித், மன்னிப்பால் மென்மையாக்கப்பட்ட வெற்றியின் சக்திவாய்ந்த சின்னம்" என அல்-தஹாஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். இதேபோன்று, மக்காவிற்கு மேற்கே அமைந்துள்ள அல்-ஹுதைபியா மஸ்ஜித்தையும் அவர் கவனத்தில் கொண்டு நினைவு கூறுகிறார். "அங்கு வரலாற்று சிறப்புமிக்க பயாத் அல்-ரித்வான் உறுதிமொழி நடந்தது. இது புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹுதைபியா உடன்படிக்கையின் அசல் இடத்தில் மஸ்ஜித் இன்னும் இருந்தாலும், அது பெரும்பாலும் தெரியவில்லை. சில பார்வையாளர்களுக்கு அதன் சரியான இடம் தெரியும்" என்று அல்-தஹாஸ் கூறுகிறார்.
ஹஜ் மற்றும் உம்ரா நிபுணரான முகமது அல்-ஜூத், "இந்த மஸ்ஜித்துகள் வெறும் வரலாற்று கட்டமைப்புகள் மட்டுமல்ல. ஹஜ்ஜின் ஆழமான ஆன்மீக பரிமாணங்களைப் பற்றிய ஒரு யாத்ரீகரின் புரிதலை வளப்படுத்தும் முக்கியமான கல்வி அடையாளங்கள்" என்று கூறி பெருமை அடைகிறார். மினாவில் உள்ள அல்-கைஃப் மஸ்ஜித்தை அவர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகிறார். அங்கு நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அவருக்கு முன் தீர்க்கதரிசிகள் பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது. இது தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சியின் சக்திவாய்ந்த அடையாளமாக உள்ளது. ஆயினும்கூட, பல யாத்ரீகர்கள் ஹஜ் பருவத்திற்கு வெளியே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் அறியாமல் இருக்கிறார்கள்.
புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்தலிஃபாவில் உள்ள அல்-மஷர் அல்-ஹராம் மஸ்ஜித்தையும் அல்-ஜூத், எடுத்துரைக்கிறார். இது போன்ற புனித தளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஹஜ்ஜின் சடங்குகளை அவற்றின் குர்ஆனிய மற்றும் வரலாற்று வேர்களுடன் இணைக்கிறது. ஆன்மீக பயணத்தை மேம்படுத்துகிறது என்பதையும் அவர் உறுதிப்பட வலியுறுத்துகிறார்.
இறைத்தூதர்கள் இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயிலின் (அலை) தியாகத்தின் கதையுடன் இணைக்கப்பட்ட மினாவில் உள்ள அல்-கப்ஷ் மஸ்ஜித் குறித்தும் அல்-ஜூத் எடுத்துக்கூறி, முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த மஸ்ஜித் தியாகம் மற்றும் கீழ்ப்படிதலின் மதிப்புகளைக் குறிக்கிறது. ஆனால் ஊடகங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது. மேலும் பெரும்பாலான யாத்திரைத் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது என்று அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார். இறைவேதத்திலிருந்து இடம்பெயர்வு வரை, அமைதியிலிருந்து வெற்றி வரை - தீர்க்கதரிசன பயணத்தைக் கண்டறியும் பரந்த, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட புனிதத் தலங்களின் வலையமைப்பின் இன்றியமையாத பகுதியாக அவர் இதை விவரித்து எடுத்துரைக்கிறார்.
மீட்டெடுக்க விழிப்புணர்வு :
வரலாற்று சிறப்புமிக்க இந்த மஸ்ஜித்துகள் மீது வெளிச்சம் போட்டு அவற்றின் சரியான நிலையை மீட்டெடுக்க விழிப்புணர்வு முயற்சிகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை அல்-தஹாஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார். மக்காவின் இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பது அதன் முக்கிய அடையாளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் தீர்க்கதரிசனச் செய்தியின் பயணத்தில் முக்கிய அடையாளங்களாக நின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஸ்ஜித்துகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இந்த புனிதத் தலங்களுடன் யாத்ரீகர்களை மீண்டும் இணைப்பது ஹஜ்ஜின் கல்வி மற்றும் வரலாற்று ஆழத்தை மீட்டெடுத்தது, பயணத்தை மிகவும் ஆழமான, தகவலறிந்த மற்றும் ஆன்மீக ரீதியாக மூழ்கடிக்கும் அனுபவத்துடன் வளப்படுத்தும் என உறுதியாக கூறுலாம்.
புனித மக்கா மாநகரம் செல்லும் யாத்ரீகர்கள், அரபாத்தில் உள்ள நமிரா மஸ்ஜித், மினாவில் உள்ள பயஹ் மஸ்ஜித், ஜார்வாலில் உள்ள அல்-ரயா மஸ்ஜித், அல்-ஹுதைபியா மஸ்ஜித், மினாவில் உள்ள அல்-கைஃப் மஸ்ஜித், முஸ்தலிஃபாவில் உள்ள அல்-மஷர் அல்-ஹராம் மஸ்ஜித், மற்றும், அல் கப்ஷ் மஸ்ஜித் ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மஸ்ஜித்துகளை காண ஆர்வம் கொள்ள வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறப்புமிக்க மஸ்ஜித்துகளை நேரில் கண்டு, இஸ்லாமிய வரலாற்று ஒளியை தங்கள் உள்ளங்களில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அந்த ஒளியை மற்றவர்களிடமும் கொண்டு சென்று சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
குறிப்பு : இந்த கட்டுரை "அரப் நியூஸ் ஆங்கில இதழில்" வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment