Thursday, July 17, 2025

பல்வேறு துறைகளில் 36 பட்டங்களை பெற்று சாதனை....!

என்றும் தணியாத கல்வி தாகம்...!

பல்வேறு துறைகளில் 36 பட்டங்களை பெற்று சாதனை புரிந்த சென்னை புதுக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் யு.முஹம்மது வசீம் பாரி...!

- ஓர் சிறப்பு நேர்காணல் -

இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.  திருக்குர்ஆன் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "ஓதுவீராக" என்ற முதல் வசனத்துடன், கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மேலும், அறிவை பெறுவதும், அதன்படி நடப்பதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.  கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது தனக்கும், சமூகத்திற்கும் பயன்பட வேண்டும்.  ஞானமில்லாமல் தர்க்கம் செய்வதை குர்ஆன் தவிர்க்கிறது. இஸ்லாம் எல்லா வகையான அறிவையும் பெற அனுமதிப்பதோடு, அது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. 

இதேபோன்று, ஏக இறைவனின் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வியை மிகவும் வலியுறுத்தினார்கள். அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்று கூறியுள்ளார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல பொன்மொழிகளையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர்களின் கூற்றுப்படி, கல்வி ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்தையும் முன்னேற்றும். இஸ்லாம், ஆண்களும் பெண்களும் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாகக் கருதுகிறது. மேலும், கற்ற கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அறிவுறுத்துகிறது. 

இப்படி இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கும் நிலையில், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் கல்விக் குறித்த சரியான விழிப்புணர்வு  இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் உயர்கல்வியில் சிறிதும் ஆர்வம் செலுத்தவில்லை. கல்விக்காக புதிதாக எந்தவொரு முயற்சியையும் முஸ்லிம்கள் எடுக்கவில்லை. கல்வி நிறுவனங்களை நிறுவ ஆர்வம் செலுத்தவில்லை. 

இத்தகைய சூழ்நிலையில், கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள வேலூரில் முஸ்லிம்களால் ஒரு சிறந்த கல்வி நிறுவனம் தொடங்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும் நிலையில், வேலூரைச் சேர்ந்த டாக்டர் யு.முஹம்மது வசீம் பாரி என்ற இளைஞர் தனது தணியாத கல்வி தாகம் காரணமாக தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறார். அதன்மூலம் பல்வேறு துறைகளில் பட்டங்களை குவித்துக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை புதுக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவரும் டாக்டர் முஹம்மது வசீம் பாரியை, மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து, முஹம்மது வசீம் பாரியின் கல்வியின் தாகம், ஆர்வம், பல்வேறு துறைகளில் தொடர்ந்து படித்து பட்டங்களைப் பெற காரணம் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, முஹம்மது வசீம் பாரி, அளித்த விளக்கங்கள், பதில்கள் நம்மை வியப்பும் ஆச்சரியமும் அடையச் செய்தன. மணிச்சுடர் நாளிதழுக்கு டாக்டர் முஹம்மது வசீம் பாரி அளித்த சிறப்பு நேர்காணலின் முழு விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

சாதாரண நடுத்தரக் குடும்பம் :

வேலூர் நகரில் வசிக்கும் எங்களுடைய குடும்பம் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பமாகும். என்னுடைய தந்தையார் முஹம்மது உமர், வேலூரில் புகழ்பெற்று இருக்கும் இஸ்லாமிக் சென்டரில், பணியாற்றி, ஓய்வுபெற்றவர். மிகவும் குறைந்த வருவாய் இருந்தாலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என எனது தந்தையும், தாயும் நினைத்து அதனை உறுதியுடன் நிறைவேற்றினார்கள். எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். இரண்டு மூத்த சகோதரர்கள், மூன்றாவதாக நான், அடுத்து என்னுடைய தங்கை மற்றும் கடைசி தம்பி என மொத்தம் ஐந்து பேருக்கும் எங்களது பெற்றோர் நல்ல கல்வியுடன் சிறந்த ஒழுக்கத்தையும் வழங்கினார்கள். இஸ்லாமிய நெறிமுறைகளின் படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் ஊட்டினார்கள். இதன் காரணமாக நாங்கள் அனைவரும் இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ நல்ல வழி கிடைத்தது. அத்துடன் சிற்நத உயர்கல்வியும் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. 

எனது இரண்டு மூத்த சகோதரர்களில் ஒருவர் மிகச் சிறந்த கல்வியைப் பெற்று தற்போது ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது சகோதரர் யுனானி மருத்துவம் படித்து தற்போது சென்னை அரும்பாக்க்த்தில் உள்ள அறிஞர் அண்ணா யுனானி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக புணிபுரிந்து வருகிறார். நான் சென்னை புதுக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியாக இருந்து வருகிறேன். கடைசி தம்பி, வழக்கறிஞராக மிகச் சிறந்தமுறையில் சேவை ஆற்றி வருகிறார். மறைந்த எனது தங்கையும் நல்ல கல்வி பெற்றவராக விளங்கினார்கள். எங்கள் ஐந்து பேருக்கும் பல்வேறு சிரமங்கள், துயரங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு, எங்களது பெற்றோர், நல்ல கல்வியை வழங்கினார்கள். கல்வி தான் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும் என உறுதியாக நம்பினார்கள். அத்துடன், இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவதை அவர்கள் நன்கு அறிந்து இருந்த காரணத்தால், எங்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியை வழங்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் அன்பு, ஊக்கம் மற்றும் ஆதரவு காரணமாக நாங்கள் நல்ல கல்வியைப் பெற்று தற்போது சமுதாயத்தில் ஒரு உயர்ந்த மனிதர்களாக வளம் வந்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் ஏக இறைவனுக்கும், எங்களுக்கு பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது பெற்றோருக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டவர்கள். அதன் காரணமாக அண்ணன் தம்பி, ஆகிய அனைவரும் கூட்டுக் குடும்பமாக வேலூரில் வசித்து வருகிறோம். 

கல்வி மீது தணியாத தாகம் :

நான் என்னுடைய பள்ளிப் படிப்பை வேலூரிலும் பின்னர் மேல்விஷாரம் இஸ்லாமிய மேனிலைப் பள்ளியிலும் படித்தேன். அரசுப் பள்ளிகளில் படிப்பது கௌரவக் குறைவு என நினைக்கும் இந்த காலத்தில் நாங்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் தான் படித்தோம். பின்னர், மேல் விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் சேர்ந்து, நான் பி.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பு நிறைவு செய்தபிறகு, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி, கணினி அறிவியல் படிப்பு படித்து நிறைவு செய்தேன். இதைத் தொடர்ந்து மேல் விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து சேர்ந்தேன். உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே, எம்.பி.ஃல்., படிப்பை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முடிதேன். 

ஆசிரியர் பணியில் சேர்ந்த காரணத்தால், என்னுடைய கல்வி தாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நிர்வாகத்துறையில் எம்.பி.ஏ., படிப்பை முடித்தேன். பின்னர் மீண்டும் நிர்வாகத்துறையில் எம்.பி.ஃல். பட்டத்தை திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சிப் பெற்றேன். நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்திய காரணத்தால், என்னுடைய ஆசிரியர் பணியில் எந்தவித தடையும் ஏற்படவில்லை. அதேபோன்று, என்னுடைய கல்வி தாகத்திற்கும் தடங்கல் ஏற்படவில்லை.  இப்படி, தொடர்ந்து கல்வியில் ஆர்வம் செலுத்தில் பல்வேறு துறையில் 11 எம்.ஏ., 2 எம்.பிஃல். என மொத்தம் 35 பட்டங்களைப் பெற்றுள்ளேன். தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் சேர்ந்து படித்து வருகிறேன். 

பல்வேறு துறைகளில் அறிவு மிகவும் அவசியம் :

பல்வேறு துறைகளில் தொடர்ந்து படித்து பட்டம் பெற்றது குறித்து உங்கள் பெற்றோர் உங்களுக்கு குறை எதுவும் சொல்லவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த முஹம்மது வசீம் பாரி, ஒருபோதும் தடையாக அவர்கள் இருக்கவில்லை. மாறாக எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இத்தனை பட்டங்களைப் பெற்று என்ன செய்ய போகிறாய் என்ற பாணியில் அவநம்பிக்கையுடன் அவர்கள் பேசியதே இல்லை. அதற்கு காரணம், இறக்கும் வரையில் கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தி வருவதை எனது பெற்றோர் நன்கு அறிந்து இருந்தார்கள். எனவே தான் எனக்கு மட்டுமல்லாமல், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி தொடர்பாக அவர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இப்போதும் அப்படியே செய்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே தான் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். 

நான் வாங்கும் சம்பளத்தை வீட்டில் முழுமையாக கொடுத்து விடுவேன். என்னுடைய படிப்புக்காக தேவையான நிதியை மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நிறைவு செய்து விடுவேன். எனவே, வீட்டில் நிதி பற்றாக்குறை என்ற பேச்சே வராது. மற்றொன்று விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது, குறிப்பிட்ட ஒரு படிப்பில் சேர்ந்தால், அந்த படிப்பு தொடர்பான பாடங்கள் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, பல துணை பாடங்களும் சிலப்பஸ்ஸில் சேர்த்து சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பல்வேறு துறைகளில் பெற்ற கல்வி அறிவு, பட்டங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றன. மாணவர்களுக்கு பாடங்களை நல்ல முறையில் சொல்லிக் கொடுக்க என்னுடைய கல்வியறிவு பலன் அளிக்கிறது.

வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர்  :

சென்னை புதுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியாராக பணிபுரிந்துகொண்டே, ஓய்வு நேரங்களில், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கைத் திறன் பயிற்சியை அளித்து வருகிறேன். வாழ்க்கையில் எப்படி நேர்மறை எண்ணங்களுடன் வாழ வேண்டும். சவால்களை எப்படி நேர்மறை எண்ணங்களுடன் சந்திக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து உரைகளை நிகழ்த்தி வருகிறேன். என்னுடைய ஊக்கமளிக்கும் பேச்சுகள் காரணமாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. மாணவர்கள்  மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது உண்மையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. எனக்கும் புதிய உற்சாகம் வந்து விடுகிறது. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. 

என்னுடைய ரோல் மாடல் என எடுத்துக் கொண்டால், அது மறைந்த விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களை தான் குறிப்பிடுவேன். அவரை போல நானும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு லட்சியமாக இருந்துகொண்டே இருக்கிறது. எனவே அந்த திசையை நோக்கி நானும் பயணித்துக் கொண்டே இருக்கிறேன். தற்போது கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. டிஜிட்டல் முறையில் கல்வி சொல்லித்தரப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் அனைத்துத் தறையின் அறிவும் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் நான் தொடர்ந்து கல்வியை கற்றுக் கொண்டே இருக்கிறேன். 

விருதுகளும் குவிப்பு :

என்னுடைய கல்விப் பணியை மதித்தும் பாராட்டியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எனக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த கல்வியாளர் விருது  உட்பட மொத்தம் 24 விருதுகள் எனக்கு அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் பணிபுரிந்து நல்ல அனுபவம் பெற்று இருப்பதால், எனக்கு அளிக்கப்பட்ட விருதுகள்  அனைத்தும், என்னுடைய பணிக்கும் கல்விக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரம் என்றே நினைத்துக் கொள்வேன். 

கல்வியில் நிறைய சாதிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மத்தியில் கல்விக் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. இதற்காக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். வேலூரில் ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் கூட இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். அது உண்மை தான். ஆனால், அதற்காக ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் ஒரு வழி கிடைக்கும். இந்த ஒருங்கிணைந்து முயற்சிகளை நோக்கியே என்னுடைய பயணமும் உள்ளது. அதற்காக தொடர்ந்து பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, இஸ்லாம் கல்விக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மிகவும் தெளிவாக எடுத்து கூறுகிறேன். இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்து வருகிறது. பல இளைஞர்கள் என்னுடைய முயற்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பலர், என்னுடைய கல்வி தாகம் குறித்து வியப்பு அடைந்து, அதைப் போன்று தாங்களும் பல்வேறு துறைகளில் படித்து பட்டம் பெற வேண்டும் என ஆர்வம் கொள்கிறார்கள். பலர் அதை என்னிடமே நேரில் சொல்லும்போது, உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

தற்போது தமிழக அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவதை எடுத்து சொல்கிறது. இதன் முக்கியத்துவம் குறித்தும் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மத்தியில் எடுத்து கூறி, அவர்களும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறேன். எனக்கு மொத்தம் 5 மொழிகளில் புலமை உண்டு. ஆங்கிலம், தமிழ், உர்தூ, அரபி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமை இருப்பதால், நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அங்கு மாணவர்களுக்கு எந்த மொழியில் உரையாற்றினால் பலன் அளிக்குமோ, அந்த மொழியில் மிகவும் எளிமையாக உரையாற்றி அவர்களின் மனங்களை கவர்ந்து வருகிறேன். 

வாழ்க்கையில் சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் :

மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறர் சொல்லும் அல்லது செய்யும் கேலி மொழிகளை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது. நான் தொடர்ந்து படிப்பது குறித்தும், அதிகளவு பட்டங்கள் பெற்றது குறித்தும், கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அது என்னுடைய காதுகளுக்கும் வருகிறது. ஒருசிலர் பொறாமை கொள்கிறார்கள். அதையெல்லாம் நான் கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை. கேலியும், கிண்டலும் செய்பவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே, அவர்களின் கிண்டல், கேலிகளை காலில் தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு, என்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். 

இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் சாதிக்க தொடர்ந்து கல்வியறிவு பெற முயற்சிக்க  வேண்டும். படித்து என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது என்ற வசனங்களை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது. கல்வியும், படிப்பும் நிச்சயம் ஒருநாள் கை கொடுக்கும் என்பதை மனதில் உறுதியாக நினைத்து, கல்விக்காக, படிப்புக்காக நேரத்தை ஒதுக்கி, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். இதுதான் இளைஞர்களுக்கு நான் சொல்லும் செய்தியாகும். என்னுடைய வாழ்க்கையில் இறுதிக்காலம் வரை நான் தொடர்ந்து கல்வியறிவு பெற்றுக் கொண்டே இருப்பேன். அதற்காக முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன். வேலூரில் ஒரு சிறந்த கல்வி அமைப்பை உருவாக்க ஒருங்கிணைந்து முயற்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பேன். என்னுடைய முயற்சிகளுக்கு ஏக இறைவன் நிச்சயம் துணையாக இருப்பான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

இப்படி தோழர் முஹம்மது வசீம் பாரி சொன்னபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது. நமக்கும் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் பிறந்துவிட்டது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டிருக்கும் முஹம்மது வசீம் பாரியை வாழ்த்திவிட்டு நாம் விடைப் பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: