Sunday, July 6, 2025

பேரீச்சம்பழம் சாகுபடியில் அசத்தும் விவசாயி நிஜாமுதீன்....!

"தருமபுரியில் பேரீச்சம்பழம் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் 

முஸ்லிம் விவசாயி நிஜாமுதீன்"

- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -

வாய்ப்புகள் யாரையும் தேடி வராது. வாய்ப்புகளை தேடி நாம் தாம் பயணிக்க வேண்டும். சரியான முறையில் திட்டமிட்டு, வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதிக்கலாம். இப்படி வாழ்க்கையில் சாதித்த பலர் இருக்கவே செய்கிறார்கள். அந்த வரிசையில் முஸ்லிம் விவசாயி நிஜாமுதீனும் ஒருவர் ஆவார். அப்படி என்ன மிகப்பெரிய அளவுக்கு அவர் சாதித்துவிட்டார் ? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நிஜாமுதீன், தற்போது விவசாயியாக மாறி, பேரீச்சம்பழம் சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டு, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

ஈராக், ஈரான், சவுதிஅரேபியா போன்ற பாலைவன வளைகுடா நாடுகளில் மட்டுமே பயிரிடபட்டு வரும் பேரீச்சை சாகுபடி விவசாயத்தில் நிஜாமுதீன் எப்படி இறங்கினார். அதில் எப்படி சாதித்து வருகிறார் என்பதை  மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எடுத்த சிறப்பு நேர்காணலில் இருந்து பல சுவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். வாருங்கள்:

பேரீச்சைப் பண்ணையில் வேலை :

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் தருமபுரி மாவட்டம், அரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நிஜாமுதீன். சவுதி அரேபியாவில் பேரீச்சம்பழம் பண்ணையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இவர், பாலைவன வளைகுடா நாடுகளில் பயிராகும் இந்த பேரீச்சை விவசாயத்தை ஏன் தனது சொந்த கிராமத்தில் செய்யக் கூடாது என்று யோசிக்க ஆரம்பத்தார். சவுதி அரேபியாவில் பேரீச்சம்பழம் பண்ணையில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததால், அந்த அனுபவம் அவருக்கு மிகவும் பலன் அளிக்கும் வகையில் இருந்தது. 

சோதனை அடிப்படையில் பயிர் :

எனவே சோதனை அடிப்படையில் வெளி நாடுகளில் இருந்து பேரீச்சை கன்றுகளை இறக்குமதி செய்து தனது நிலத்தில் நிஜாமுதீன் பயிரிட்ட தொடங்கினார். 1989ஆம் ஆண்டு தொடங்கிய அவரது இந்த முயற்சி,  சில ஆண்டுகளிலேயே நல்ல விளைச்சலை தர ஆரம்பித்தால், மகிழ்ச்சி அடைந்த நிஜாமுதீன், இந்த பயிரை தொடர்ந்து  சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது சாகுபடி செய்து வருகிறார்.  பேரீச்சம்பழத்தில் 3 ஆயிரம் ரகங்கள் இருக்கும் நிலையில், தனது நிலத்தில் பர்ரி, மஸ்தூர், அம்மர், நூர் உள்ளிட்ட 36 வகையாக பேரீச்சை செடிகளை தற்போது நிஜாமுதீன் பயிரிட்டுள்ளார். அதில் பர்ரி என்ற திசு வளர்ப்பு செடி தருமபுரியின் கடும் வறட்சியையும் கடந்து நல்ல விளைச்சலை தந்துள்ளது. அதேபோல் நூர் என்ற ரகம் நல்ல சுவையுடனும், ஒரு மரத்தில் பழம் சுமார் 100 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் தருகிறது. ஆர்.பி. 1 என்ற ரகம் பேரீச்சம்பழம் நல்ல மகசூலை தந்து அதிக வருவாயை தருகிறது. 

விவசாயிகளுக்கு நல்ல வரப்பிரசாதம் :

தனது பேரீச்சம்பழ விவசாயம் குறித்து கருத்து தெரிவித்த நிஜாமுதீன், 'பேரீச்சை விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். இதை பயிரிட்டால் 3 ஆண்டுகளில் நல்ல மகசூலை பெருவதோடு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். பேரீச்சை விவசாயத்திற்கு வேலையாட்கள், தண்ணீர் பிரச்சணையோ இல்லை என்றே கூறலாம். இத்தகைய பிரச்சினைகள் இல்லாத ஒரு பணப்பயிர் பேரீச்சை ஆகும். இதற்கான பராமரிப்பு செலவும் குறைவுதான். பேரீச்சம்பழம் ஒரு கிலோ 250 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனை மொத்த வியாபாரிகள் நேரடியாக எனது பேரீச்சை பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். மேலும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பழங்களை வாங்கி ஏற்றுமதி செய்கின்றனர். இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, தாயாலாந்து, இந்தோனேசியா போன்ற பகுதிகளுக்கு விமானம் மூலமாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.  ஒரு கிலோ 100 ரூபாய்க்கு கொடுத்தாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த பேரீச்சம்பழம் மரங்கள் 100 வருடங்கள் வரை நல்ல காய்க்கும் தன்மை கொண்டது.  ஒரு ஏக்கர் 76 மரக்கன்றுகளை நடலாம். பேரீச்சையில் ஆண், பெண் என்ற வகையும் உண்டு. பெண் செடி 76 நடலாம். ஆண் செடிகள் 8 நடலாம். ஆண் செடி என்பது மகரந்த சேர்க்கைக்காக நடப்படுகிறது. 

தற்போது நாங்கள் எங்கள் தோட்டத்தில் அறுவடையை ஆரம்பித்து இருக்கிறோம். அறுவடை காலம் என்பது ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். பேரீச்சம் சாகுபடிக்கு தண்ணீர் சிக்கனமாக இருந்தலே போதுமானது. இது ஒரு பணம் மரம் போன்றது. மிகப்பெரிய அளவுக்கு செலவுகள் கிடையாது. செடியின் விலை 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை இருப்பது மட்டும் தான் ஒரு பிரச்சினையாகும். ஆனால், அதை தாண்டி வந்துவிட்டால், மிகப்பெரிய அளவுக்கு லாபம் ஈட்ட முடியும். ஈரான், துபாய், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செடிகளை வாங்கி நட்டு, சரியான முறையில் பராமரித்து வந்தால், லாபம் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். 24 மாதங்களில் பலன் கிடைத்துவிடும். சந்தையை பொறுத்த வரை, தோட்டத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித அச்சமும், கவலையும் தேவையில்லை. 

வெளிநாடுகளில் ஆய்வு :

மற்ற விவசாயிகளும் பேரீச்சை சாகுபடி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் வெளிநாடுகளில் ஆய்வு கூடங்களில் சுமார் 3 வருடங்கள் சோதனை செய்து வளர்க்கபடும் செடிகளை தனது தோட்டத்தில் வளர்த்து கன்றுகளை விவசாயிகளுக்கு நிஜாமுதீன் வழங்கி வருகிறார். அதிகமான மகசூலை கண்டு வெளி மாவட்ட விவசாயிகள் நேரில் வந்து பேரீச்சை மரங்களை பார்த்து தங்களது நிலத்தில் வைப்பதற்காக செடிகளை வாங்கி செல்கின்றனர். பேரீச்சை தோட்டக்கலைத் துறையில் இணைக்கப்பட்டுள்ளதால் இதற்கு அரசு மானியமும் வங்கி கடனையும் வழங்கி வருகிறது. இன்றைய கால சூழ்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விவசாயம் செய்ய இயலாமல், பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பேரீச்சை சாகுபடி செய்யலாம். அதேபோல் போதிய மழை இல்லாமல் பல்வேறு பகுதிகளை சாகுபடி செய்து வருவாய் இல்லாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் பேரீச்சை குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கும் பயிராக இருக்கும். இப்படி முஸ்லிம் விவசாயி நிஜாமுதீன் தெரிவிக்கிறார். 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: