Thursday, July 17, 2025

ஓர் அழகிய இஸ்லாமிய செயல்....!

 "கேரளத்து முஸ்லிமின் ஓர் அழகிய இஸ்லாமிய செயல்"

மனிதன் எப்போதும் பணம், பொருள், புகழ் என அனைத்திற்கும் ஆசைப்படும் குணம் கொண்டவன்.  குறிப்பாக, உழைப்பு இல்லாமல் எளிமையாக கிடைக்கும் பொருள் மீது அவனுக்கு தனி ஆர்வம் இருந்து வருகிறது. எந்தவித உழைப்பும் இல்லாமல் ஏதாவது ஒரு பொருள் கிடைத்துவிட்டால், அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என கூறலாம். 

ஆனால், இஸ்லாமிய மார்க்கம், உழைத்து சாப்பிடும் உணவே மிகச் சிறந்த உணவு என அறிவுரை கூறுகிறது. பிறர் பொருள் மீது சிறிதும் ஆசைப்படக் கூடாது என வலியுறுத்துகிறது. தமக்கு உரிமை இல்லாத பிறரின் பொருள் கிடைத்துவிட்டால், அதை எப்படியாவது உரியவரிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறைகளில் ஒன்றாக உள்ளது. எனவே தான், உலகில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிறர் பொருள் மீது சிறிதும் ஆசை கொள்வதில்லை. ஒருசிலர் விதிவிலக்காக இருந்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த ஒருசிலரை வைத்துக் கொண்டு இஸ்லாமிய நெறிமுறையை, இஸ்லாமிய வாழ்க்கை முறையை பிறர் எடை போடுவது சரியான அணுகுமுறை ஆகாது. 

அழகிய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை மனிதனுக்கு அழகிய வாழ்க்கையை மட்டும் வழங்கவில்லை. நிம்மதியான வாழ்க்கையை, மன ஆரோக்கியமான வாழ்க்கையை, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய வாழ்க்கையை, ஏக இறைவனுக்கு பயந்து எல்லோர் நலன் பேணும் வாழ்க்கையை வழங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம், மனிதன் நிச்சயமாக இம்மையில் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம். அத்துடன் மறுமையிலும் அவனுக்கு ஓர் அழகிய இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறலாம். 

தங்க நகையை தூக்கிச் சென்ற காக்கா :

சரி விஷயத்திற்கு வருவோம். காக்கா வடையை தூக்கி பறந்துசென்று மரத்தின் மீது அமர்ந்த கதையை நாம் கேட்டிருப்போம். அந்த கதையிலும் ஒரு நீதி நமக்கு கிடைக்கும். ஆனால் இங்கு நாம்  காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், எப்படி ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது என்பதை அறிந்துகொள்ள இருக்கிறோம். அந்த நேர்மையாளர் செய்த அந்த அழகிய செயல் என்ன?  என்பதை அறிந்தால் நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய வியப்பு ஏற்படும். அத்துடன் ஆச்சரியமும் ஏற்பட்டு இந்த நவீன உலகத்தில் இப்படிப்பட்ட ஒரு மனிதரா என  கேள்வி கேட்க தூண்டும். 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், திருக்கலங்கோடு பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்ற பெண்மணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துணி துவைக்கும் வேளையில், தனது ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க வளையலை கழட்டி வைத்த போது ஒரு காகம் அதனை தூக்கி கொண்டு பறந்தது. இதனால் பயந்துபோன ஹரிதா, காக்கா தூக்கி சென்ற நகையை தேடி அலைந்தார். பல நாட்கள் இப்படி அலைந்தும் நகையை கண்டுபிடிக்க இயலவில்லை. தங்கம் தொலைந்துவிட்டதாக நினைத்து ஹரிதாவும் அவரது குடும்பத்தினரும் நம்பிக்கை இழந்தனர். 

தென்னை ஏறும் தொழிலாளி அன்வர் சதாத் :

இப்படி, நாட்கள், மாதங்கள் அல்ல ஆண்டுகளும் கழிந்துகொண்டே சென்றன. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு பகுதியில் வசித்து வந்த  தென்னை  ஏறும்  தொழிலாளியான அன்வர் சதாத், தனது வீட்டில் இருந்த மாம்பழ மரத்தில் மாம்பழங்களை பறிக்க நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 

மரத்தின் மேலே அவர் ஏறியபோது, மாமரத்தின் மேலே காகத்தின் கூடு ஒன்று இருந்தது. மரத்தின் அசைவுகளால், காகத்தின் கூட்டிலிருந்து தங்க நகை கீழே விழ, அதை மாங்காய் பறக்கி முயற்சி செய்துக் கொண்டிருந்த அன்வர் சதாத் கூட்டியில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுவதைக்  கண்டார். அப்போது மரத்தின் கீழே  இருந்த அவரது மகள் அதை எடுத்து தந்தையிடம் கொடுக்க, அதைப் பார்த்ததும், அன்வர் சதாத் அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்த பொருள் தங்க நகையாக இருந்தது. உடனே, அந்த தங்க வளையலை தமக்கு கிடைத்த பரிசு என அன்வர் சதாத் நினைக்கவில்லை. அந்த தங்க வளையல் மீது சிறிதும் ஆசை கொள்ளவில்லை. 

மாறாக, அன்வர் சதாத் நகையின் உரிமையாளரிடம் வளையலை ஒப்படைக்க, அக்கம்பக்கம் விசாரித்தார். அப்படி தொடர்ந்து விசாரித்தும் எந்தவொரு தெளிவும் கிடைக்கவில்லை. சரியான விவரங்களை யாரும் சொல்லவில்லை. எனவே, அன்வர் சதாத், திருக்கலங்கோடு பொது நூலகத்திற்கு தங்க வளையலை எடுத்துச் சென்று, அது குறித்த முழு தகவல் தெரிவித்து, நகையை உரியவரிடம் கொண்டு சேர்க்க உதவும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, நூலகத்தின்  அறிவிப்பு பலகையில் தங்க வளையல் குறித்தும் அதன் விவரங்கள் குறித்தும்  அறிவிப்பு ஒன்று  விளம்பரப்படுத்தப்பட்டது. 

நகை உரிமையாளர் ஹரிதா மகிழ்ச்சி :

திருக்கலங்கோடு பொது நூலகத்தில் ஒரு தங்க வளையல் குறித்து விவரம் அறிவிப்பாக வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த நகை உரிமையாளர் ஹரிதா,  வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் எடுத்துக் கொண்டு நூலகத்திற்குச் சென்றார். அங்கு அந்த பில்லையும், தனது புகைப்படத்தையும்  காட்டி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காக்கா எடுத்துச் சென்றது தனது தங்க வளையல் தான் என்பதை உறுதி செய்தார். 

இதையடுத்து, நகை உரிமையாளர் ஹரிதாவிடம், ஏழை தொழிலாளி அன்வர் சதாத், தங்க வளையலை வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். ஏழை தொழிலாளி அன்வர் சதாத்தின் நேர்மையை கண்டு, ஹரிதாவும் நெகிழ்ச்சி அடைந்தார். 

நூறு ரூபாய் தகராறில் சொந்த சகோதரனை குத்தி கொலை செய்யும் இந்த காலத்தில்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன ஒன்றரை பவுன் நகையை யாரும் உரிமை கொண்டாட வராத நிலையில்,  அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத்தின் நேர்மை மிக பாராட்ட கூடிய ஒன்றாகும். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய ஒளி அவரது உள்ளத்தில் எப்போதும் பிரகாசமாக வீசிக் கொண்டே இருந்தது என உறுதியாக கூறலாம். 

ஓர் அழகிய செயல் :

பிறர் பொருள் மீது எப்போதும் ஆசைப்படக் கூடாது. அப்படி கிடைக்கும் பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, மனம் மாறாமல் சேர்த்துவிட வேண்டும் என்பது தான் இஸ்லாமிய நெறிமுறையாகும். அத்தகைய நெறிமுறையை பின்பற்றும் அன்வர் சதாத், தமக்கு தங்க வளையல் கிடைத்தும் அதன் மீது சிறிதும் ஆசை கொள்ளாமல், மனம் ஊசல் அடையாமல், கொள்ளாமல், நேர்மையாக அதனை உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இங்கு மற்றொரு விஷயம். நகையை தொலைத்தவர் ஒரு இந்து பெண்மணி. அந்த நகை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்ததும், அதனை உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்த அதனை செயல்படுத்தியவர் ஒரு முஸ்லிம்.  ஆக இங்கும் ஒரு அழகிய மத நல்லிணக்கம் இருவர் மத்தியில் ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் சம்பவமாகும். உண்மையில் அது ஒரு அழகிய செயல் என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: