"பாலஸ்தீனத்தில் நீதிக்கான ஒரே பாதை இரு நாடுகள் தீர்வு தான்"
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையேயும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் அழித்துவிட்டாலும், ஈமானில் உறுதியுடன் இருக்கும் காசா மக்கள், தங்கள் சொந்த பூமியை விட்டு எங்கும் செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து வருகிறார்கள். மடிந்தாலும், சொந்த பூமியில் இறப்பதையே, தாங்கள் விரும்புவதாக அவர்கள் மன உறுதியுடன் தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அட்டூழியங்கள் அரங்கேற்றி வருகிறது. அதன், அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கின்றன. காசாவில் உணவுக்காக ஏங்கி தவிக்கும் மக்களை, குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் ஆகியோரை, இஸ்ரேல் ராணுவம் மனிதநேயம் இல்லாமல் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. இதனை கண்டிக்காமல், முஸ்லிம் நாடுகள் உட்பட உலகின் பல நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் காசாவில் மக்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காசாவிற்கு உணவுப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது. இதனால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல், பசியாலும், பட்டினியாலும், காசாவில் மக்கள் மடிந்துகொண்டு இருக்கிறார்கள். காசா மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவற்றிற்காக அலையும் காணொளிகளை காணும்போது, உள்ளத்தில் ரணம் ஏற்படுகிறது. கண்களில் இரத்த கண்ணீர் வெளியாகிறது. கொடூர இதயம் கொண்ட மனிதர்கள் கூட, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரங்களை கண்டு, கண்ணீர் விட்டு அழுகிறார்கள். வேதனையால் துடிக்கிறார்கள்.
பிரான்ஸ் அதிபரின் திடீர் அறிவிப்பு :
காசாவில் நிலைமை எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், காசாவில் பட்டினியால் வாடும் மக்கள் மீது உலகளாவிய கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீனகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஜுலை மாதத்தின் கடைசி வாரத்தில் 24.07.2025) அறிவித்தார். செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த முடிவை முறைப்படுத்த இருப்பதாக மக்ரோன் கூறியுள்ளார். மேலும், காசாவில் போர் நின்று பொதுமக்கள் காப்பாற்றப்பபட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மேற்கத்திய சக்தியாக பிரான்ஸ் இப்போது உள்ளது. மேலும், இந்த நடவடிக்கை மற்ற நாடுகளும் இதைச் செய்ய வழி வகுக்கும். ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனியர்கள் நாடுகின்றனர். கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவையும் இணைத்து, 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களையும் இணைக்கின்றனர். . இந்த முடிவை பாலஸ்தீன அதிகாரசபை வரவேற்றுள்ளது. இந்த நிலைப்பாடு சர்வதேச சட்டத்திற்கான பிரான்சின் அர்ப்பணிப்பையும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான அதன் ஆதரவையும் பிரதிபலிக்கிறது என்றும் பாலஸ்தீன அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பை சவுதி அரேபியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் ஒரு வரலாற்று முடிவு என்றும் சவுதி அரேபியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு, 1967 எல்லைகளில் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவது குறித்த உலகளாவிய ஒருமித்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரான்சின் நிலைப்பாட்டை சவுதி வெளியுறவு அமைச்சகம் பாராட்டியது. பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் கோரும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அரசை இன்னும் அங்கீகரிக்காத நாடுகளுக்கான தனது நீண்டகால அழைப்பை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அமைதியை முன்னேற்றுவதற்கும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை ஆதரிப்பதற்கும் தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது.
இதேபோன்று, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள் தீர்வுக்கு கனடாவும் பிரேசிலும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாலஸ்தீன நாடு என்ற அந்தஸ்தை ஆதரிப்பதில் பிரேசில் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரேசில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், காசா முற்றுகை மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள கனடா, இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இருபத்தெட்டு நாடுகளின் இரு முகங்கள் :
இதுஒருபுறம் இருக்க, இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொல்வது வேகமாகவும் மெதுவாகவும் தொடர்கிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மூலம் இந்த படுகொலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல்களை பல நாடுகள் கண்டிக்கின்றன. ஆனால் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. காசா போரை நிறுத்தக் கோரும் அறிக்கையில் இருபத்தெட்டு நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இஸ்ரேல் உடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கையை அந்த நாடுகள் எடுக்கவில்லை. 28 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் பிற குழுக்களும் வரவிருக்கும் பஞ்சம் குறித்து எச்சரித்த பல மாதங்களுக்குப் பிறகு இந்த நாடுகள் வார்த்தைகளைப் பரப்புவதால், மற்ற முனைகளில் சிறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் சில பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இருப்பினும், பல நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தகத்தில் தொடர்ந்து பயனடைகின்றன. காசா மீதான இனப்படுகொலை போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலை நெருக்கடிக்குள் தள்ளக்கூடிய தடைகளை விதிக்கவில்லை என்றும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சர்வதேச விமர்சகர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் போர் காசாவில் குறைந்தது 60 ஆயிரம் பேரைக் கொன்றது. அத்துடன் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 447 பேரைக் காயப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இத்தகைய இராணுவ நடவடிக்கையைக் கண்டிக்கும் அதேவேளையில், அதனால் லாபம் ஈட்டும் நாடுகள் கபட நாடகம் ஆடி வருகின்றன.
நீதிக்கான ஒரே பாதை :
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடிக்கு இரு நாடுகள் தீர்வு என்பது "நீதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒரே பாதை" என்று அமெரிக்காவிற்கான சவுதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பந்தர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்த மோதல் குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான சவுதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பந்தர், “காசாவில் உள்ள துன்பங்கள், மேற்குக் கரையில் உள்ள விரக்தி மற்றும் இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பின்மை ஆகியவை ஒரு புதிய யதார்த்தத்தைக் கோருகின்றன. நீடித்த அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதையாக இரு நாடுகள் தீர்வை சவுதி அரேபியா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இது வெறும் இராஜதந்திர நிலைப்பாடு அல்ல. இது நீதி மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தார்மீக, மூலோபாய மற்றும் நடைமுறைத் தேவையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இரு அரசு தீர்வு அவசியம். ஏனெனில் அது மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்கிறது. பாலஸ்தீனிய சுயநிர்ணய மறுப்பு மற்றும் இரு தரப்பிலும் தீவிரவாதத்தைத் தூண்டும் பாதுகாப்பின்மையாகும். சவுதி அரேபியா பல தசாப்தங்களாக அரபு அமைதி முயற்சி என்று அழைக்கப்படும் ஒரு அமைதியான தீர்மானத்தை ஆதரித்து வருகிறது. இது பிராந்தியத்தில் அமைதி பாலஸ்தீனியர்களுக்கான நீதியிலிருந்து பிரிக்க முடியாதது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல் :
இதேபோன்று, இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துவது "பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல்" என்று சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்துள்ளார். பிராந்திய அமைதி பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதில் தொடங்க வேண்டும் என்றும் இளவரசர் பைசல் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாலஸ்தீன அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பு இஸ்ரேலுடன் எந்த உறவும் நிறுவப்படாது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துவது குறித்த உயர்மட்ட சர்வதேச மாநாடு கடந்த ஜுலை 28ஆம் தேதி ஐ.நா.வில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இரு-நாடு தீர்வு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல் என்று சவுதி அரேபியாநம்புகிறது என்று கூறினார். நியூயார்க் மாநாடு இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் ஃபர்ஹான் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பிராந்தியத்தில் அமைதி தொடங்க வேண்டும் என்று இளவரசர் பைசல் மீண்டும் வலியுறுத்தினார். செப்டம்பரில் பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் நோக்கத்தை அவர் வரவேற்கிறார். "பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவது பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெற உதவுவதிலும் தொடங்குகிறது. அவற்றில் முதன்மையானது ஜூன் 4, 1967 எல்லைகளில் கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன் மக்கள் அவர்களின் சுதந்திர அரசை நிறுவுதல்" என்று அவர் தெரிவித்தார்.
காசாவில் மனிதாபிமான பேரழிவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், சவுதி அரேபியாவும் பிரான்சும் உலக வங்கியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு 300 மில்லியன் டாலர்களை மாற்றுவதற்கு உதவியதை உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்காக சவுதி அரேபியா, பல நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இளவரசர் பைசல் கூறினார். மேலும், அத்தகைய அங்கீகாரத்தை இஸ்ரேலிய வீட்டோவுடன் இணைக்கும் யோசனையை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பு இஸ்ரேலுடன் எந்த உறவும் ஏற்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு அமைச்சர் ஆதரவு தெரிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிராந்திய மோதல் தீர்வுக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ஒரு சாத்தியமான, அமைதியான இரு நாடுகள் தீர்வை அடைவதற்கு இராஜதந்திர உந்துதலையும் சர்வதேச ஒருங்கிணைப்பையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
பல நாடுகள் இணையும் :
மாநாட்டின் இணைத் தலைவரான பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், சவுதி அரேபிய அரசின் அதே உணர்வுகளை தமது பேச்சியில் எதிரொலித்தார். வரும் மாதங்களில் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் மேலும் பல நாடுகள் இதைப் பின்பற்றலாம் என்றும் இணையலாம் என்றும் அவர் கூறினார். "பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்கள் மீதான இறையாண்மைக்கான உரிமையை பிரான்ஸ் உறுதிப்படுத்துகிறது" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், “செப்டம்பரில் பாலஸ்தீன அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்கலாம். இரு நாடுகள் தீர்வு மாநாடு தீர்வை செயல்படுத்துவதில் ஒரு தீர்க்கமான படியாகும். வரலாற்று உறுதிப்பாடுகள் செய்யப்படும். காசாவில் பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பகுதியில் போர் மிக நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அது நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகள் கட்டமைப்பை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகத்தின் பங்கு அவசியம். இரு நாடுகள் தீர்வை ஒரு உறுதியான யதார்த்தமாக்க நாம் பாடுபட வேண்டும். இது பாலஸ்தீனியர்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. மத்திய கிழக்கில் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நாம் ஒரு தடுக்க முடியாத உந்துதலைத் தொடங்கியுள்ளோம்” என்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் குறிப்பிட்டார்.
மாநாட்டில் பங்கேற்று பேசிய பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, மாநாட்டை வரவேற்று, இது அமைதிக்கான ஒரு முக்கியமான வாய்ப்பு என்று கூறினார். “இரு நாடுகள் தீர்வு அனைவருக்கும் ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வரலாற்று மாநாட்டை வழிநடத்தியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச ஆதரவின் தெளிவான செய்தியை மாநாடு அனுப்பியுள்ளது. இரு நாடுகள் தீர்வு மாநாடு பாலஸ்தீன மக்களுக்கு உலகம் அவர்களுடன் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார். மேலும், மேற்குக் கரைக்கும் காசாவிற்கும் இடையில் அரசியல் ஒற்றுமைக்கு முஸ்தபா அழைப்பு விடுத்தார். பாலஸ்தீன அதிகாரசபை கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக ஹமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "மேற்குக் கரையையும் காசா பகுதியையும் ஒன்றிணைக்க நாம் பாடுபட வேண்டும். ஹமாஸ் அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஆவணம் வினியாகம் :
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கான இரு நாடுகள் தீர்வு குறித்த ஆவணத்தின் பிரத்யேக நகல், நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் வினியோகம் செய்யப்பட்டது. பிரான்சால் ஐ.நா. உறுப்பு நாடுகளிடையே விநியோகிக்கப்பட்டது. இந்த ஆவணம், சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட வன்முறை மற்றும் இராஜதந்திர முட்டுக்கட்டையின் பின்னணியில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான நீண்டகாலமாக முடங்கிப்போன முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் துன்பத்தைத் தணிக்க, காசாவிற்கு தடையின்றி மனிதாபிமான அணுகல் அவசரத் தேவையையும் இது வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகள் பாதுகாப்பான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாக வாழ்வதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு சர்வதேச சமூகத்தின் அசையாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதே வரைவு ஆவணத்தின் மையமாகும். பாலஸ்தீன அரசியல் ஒற்றுமைக்கான அவசியத்தை வலியுறுத்தி, பாலஸ்தீன அதிகாரசபையின் நிர்வாகத்தின் கீழ் காசா பகுதி மற்றும் மேற்குக் கரையை ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆவணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது சட்டபூர்வமான மற்றும் இராணுவமயமாக்கப்படாத எதிர்கால பாலஸ்தீன அரசுக்கு மூலக்கல்லாக முன்வைக்கிறது.
இந்த ஆவணம், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அளித்த உறுதிமொழிகளை வரவேற்கிறது. மேலும் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு அவர் அளித்த கண்டனத்தையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அவரது அழைப்பையும், ஹமாஸை நிராயுதபாணியாக்குவதற்கான அவரது உறுதிமொழியையும் ஒப்புக்கொள்கிறது. செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரை எதிர்பார்த்து, கையொப்பமிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கும் அல்லது அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கும் என்று ஆவணம் கருதுகிறது. இஸ்ரேலுடன் இன்னும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தாத நாடுகள் உறவுகளை இயல்பாக்கத் தொடங்கவும், இஸ்ரேலின் பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பாக உரையாடலில் ஈடுபடவும் இது மேலும் ஊக்குவிக்கிறது. இது மத்திய கிழக்கு ஒத்துழைப்புக்கான பரந்த பார்வையை குறிக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் சுமார் 147 நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. இது சர்வதேச சமூகத்தில் சுமார் 75 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பெரும்பகுதி அவற்றில் அடங்கும். நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் சமீபத்தில் பட்டியலில் இணைந்தன. அதே போல் பஹாமாஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமைக்கா மற்றும் பார்படோஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஆனால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய மேற்கத்திய சக்திகள் இன்னும் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதேபோல் ஜப்பானும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தனது நாடு பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக பிரான்ஸ் இருக்கும்.
=============================
No comments:
Post a Comment