Saturday, July 19, 2025

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கே.எம்.கே. வலியுறுத்தல்...!

 * ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உடனே வழங்க வேண்டும்....!

* வீடுகளில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....!!.

* தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும்....!!!

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்....!

புதுடெல்லி, ஜுலை.20- மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள நாட்டில் வீடுகளில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.  இந்தியா கூட்டணி கட்சிகளால் ஜுலை 19ஆம் தேதி மாலை மெய்நிகர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளரும் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்து, வரவிருக்கும் சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதத்தினர். 

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை :

நாடாளுமன்ற மழைக்காலகக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை ஜூலை 21, 2025 தொடங்கவுள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை 19.07.2025 அன்று மாலை நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்ததிற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய அரசாங்கம் தவறியதையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிய வருவதையும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல் :

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவதால், அது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி  தெளிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.  இதேபோன்று ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையும் மழைக்கால கூட்டத்தின் அமர்வின் எழுப்பப்படும் என்றும், தேசிய மாநாட்டுத் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா, எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். 

திருச்சி சிவா கருத்து :

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்று பேசிய திருச்சி சிவா எம்.பி., தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்குவதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பேரில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாகவும் விமர்சனம் செய்தார். இந்த பிரச்சினைகள் அனைத்தும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எழுப்பும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு :

மெய்நிகர் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பங்கேற்று பேசிய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா எம்.பி.யின் அனைத்து கருத்துகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்று ஆதரிப்பதாக கூறினார். மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டிய கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திமுகவுடன் இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் முஸ்லிம்கள் வீட்டிற்குள் தொழுகை நடத்துவதை தடை செய்யப்படுவதாகவும், அவர்களின் மத உரிமைகளில் பாஜக அரசுகள் ஈடுபட்டு, வரம்பு மீறி வருவதாகவும் இத்தகைய நடவடிக்கைகளை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து குரல் எழுப்பும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் :

இந்த கூட்டத்தில் எட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.  இவ்வளவு நாட்களுக்குப் பிறகும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்ய அரசாங்கம் ஏன் தவறிவிட்டது. இதன்மூலம் உளவுத்துறை தோல்வி ஏற்பட்டதாக அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறைந்தது 24 முறை மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை கருவியாக பயன்படுத்தினார். இந்தக் கூற்றுகளுக்கு நமது பிரதமர் மவுனமாக இருந்து வருகிறார். உளவுத்துறை தோல்வ பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னரே ஒப்புக்கொண்ட போதிலும், உளவுத்துறைத் தலைவர் தபன் தேகாவுக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி குறித்து விவாதிக்கப்பட வேண்டும் போன்ற பல கேள்விகளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்புவது என இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இந்திய கூட்டணி விரைவில் நேரடி கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

====================

No comments: