Thursday, September 11, 2014

சென்னையில் நான்......! (14)

சென்னையில் நான்......! (14)


சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா பீச் (கடற்கரை).

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து, அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை நீண்டுள்ள இந்த கடற்கரையின் நீளம் சுமார் 13 கிலோ மீட்டராகும்.

இதனால்தான், உலகில் உள்ள  மிக நீளமான கடற்கரைகளில், மெரினாவுக்கு 2வது இடம் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் மிகவும் தூய்மையாக இருந்ததால் புகழின் உச்சியில் இருந்த மெரினா கடற்கரை, தற்போது தூய்மை கெட்டு, மாசுபட்டு காட்சி அளிக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவுத்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரையை ஒட்டிய சாலையில், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, திருவள்ளுவர் சிலை, அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல தலைவர்களின் சிலைகள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

அத்துடன் பாரம்பரியம் மிக்க ஒருசில கல்லூரிகளும் இந்த பகுதியில் நாம் காணலாம்..


கலங்கரை விளக்கம், மீன் அருங்காட்சியாகம், நீச்சல் குளம் ஆகியவையும் மெரினாவின் அழகிற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

இப்படி,

பல சிறப்புகளை கொண்ட மெரினா கடற்கரைக்கு நான் அடிக்கடி சென்று வருவது உண்டு.

திருவல்லிக்கேணி பகுதியில் தங்கி இருப்பதால், இந்த வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்து விடுகிறது.


காலை நேரங்களில் மெரினாவுக்கு சென்று நடைபயிற்சி செய்வது உண்டு.

அப்போது, அரசியல், சினிமா, சமூகம் என  பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை பார்க்கவும், சந்திக்கவும் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது உண்டு.

அதிகாலை நேரத்தில், மெரினாவில் நடைபயிற்சி செய்வர்களை காணும்போது, உள்ளத்தில் இயற்கையாகவே மகிழ்ச்சி பிறக்கும்.

மனிதர்களின் விதவிதமான முகங்கள், விதவிதமான பழக்கங்கள், வினோதமான செயல்பாடுகள் ஆகியவற்றை காணும்போது, இறைவனின் படைப்பு ஆற்றலை கண்டு வியப்பது உண்டு.


மாலை நேரங்களில் மட்டுமல்லாமல், காலை நேரத்திலும் மெரினாவில் காதல் ஜோடிகளை காணலாம்..

காதலர்கள் கொஞ்சி பேசும் அழகு,  சண்டையிட்டு பின்னர் இருவரும் சமாதானமாக செல்லும் காட்சி, சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்ளும் காட்சி, ஆகியவற்றை காணும்போது சிரிப்பு வரும். வேதனையும் பிறக்கும்.

மெரினாவில் சிறுவர்கள் விற்கும் தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, சுடான பஜ்ஜி, பேல் பூரி போன்ற உணவு பொருட்களை வாங்கி ருசித்து இருக்கிறேன்.இன்றும் அவற்றை ருசிக்க மெரினாவுக்கு செல்வது உண்டு...

காந்தி சிலைக்கு பின்புறம், சிறுவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் ஸ்கேடிங் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

திருவல்லிக்கேணி பகுதியில் சகோதரர் எஸ்.ஆர்.கே. இருந்தபோது, மாலை நேரத்தில் அவருடன் சேர்ந்து அடிக்கடி மெரினாவுக்கு சென்று ஊடக விஷயங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்து  நீண்ட நேரம் விவாதித்தது உண்டு.ஊடகத்துறையில் உள்ள பல நண்பர்களின் பிறந்த நாட்களை, கேக் வெட்டி மெரினாவில் கொண்டாடி மகிழ்ச்சி அடையும் நிகழ்ச்சிகள் இன்றும் என்னுடைய வாழ்வில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மாதம் ஒருமுறை கலந்துரையாடல்...

வாரம் ஒருமுறை கவிதை வாசிப்பு...

விரும்பும்போது அவசர ஆலோசனை

சமூக ஆர்வலர்களின் சந்திப்பு

என இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய வாழ்வில், மெரினா கடற்கரை ஒரு நல்ல இடமாக  இருந்து வருகிறது.அத்துடன், மெரினாவின் இயற்கை அழகை எப்போதும் கண்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

மெரினா கடற்கரை இன்று மாசு அடைந்து இருக்கலாம்...

அதற்கு முக்கிய காரணம் மக்கள்தான்.

பொறுப்பு உணர்வு இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதால்தான், மெரினா மாசு அடைந்துள்ளது.

மாசு அடைந்த மெரினாவாக இருக்கட்டும்...

அழகான மெரினாவாக இருக்கட்டும்...

சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் இந்த மெரினா கடற்கரை, என்னுடைய வாழ்க்கையிலும் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.

மெரினாவை எப்படி என்னால் மறக்க முடியும்...?

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: