Saturday, September 13, 2014

சென்னையில் நான்.....! (15)

சென்னையில் நான்.....! (15)


சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிதான்.

ஆம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை காண, எப்போதும் நான் ஆவலுடன் இருப்பதும் வழக்கம்.

சென்னை இசை விழா

சென்னை சங்கமம்



போன்ற நிகழ்ச்சிகளை போன்று, முதன்மையான பண்ப்பாட்டு திருவிழாவாக இந்த புத்தகக் கண்காட்சி இருந்து வருகிறது.

ஆனால்,

மற்ற நிகழ்ச்சிகளை போன்று இல்லாமல், அறிவு பசிக்கு விருந்தாக இந்த புத்தகத் திருவிழா அமைந்து இருப்பதால், மற்றவர்களை போன்று நானும், புத்தகக் கண்காட்சிக்கு சென்று, அங்கு அமைக்கப்படும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கண்டு வியப்பது உண்டு.



என்னுடைய நிதி சக்திக்கு ஏற்ப, பல புத்தகங்களை வாங்கி வருவதும் உண்டு.

முதன்முதலாக கடந்த 1977ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலை பகுதியில் இருக்கும் மதரசா இ ஆசாம் பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.

அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.



ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானம்,

சென்னை டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்,

காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகம்

பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் மேனிலைப்பள்ளி வளாகம்

என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழா, தற்போது, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.



புத்தகத் திருவிழாவில், புத்தகங்கள் மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான சி,டி.க்களும் விற்பனை செய்யப்படுவதால், அவற்றையும் மக்களை வாங்கிச் செல்வது உண்டு.

அத்துடன் தினமும் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அறிவு பசிக்கு நல்ல தீனி கிடைக்கிறது.

இந்த புத்தகத் திருவிழாவில், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மட்டுமல்லாமல், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், பதிப்பகங்களும் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கின்றன.



எனவே, இஸ்லாம் தொடர்பான பல அரிய புத்தகங்கள் இங்கு கிடைப்பதால், நான் மட்டுமல்ல, மாற்று மத சகோதரர்களும் அவற்றை ஆர்வத்துடன் அள்ளிச் செல்கின்றனர்.

இதனால்தான், சென்னையில் எனக்கு பிடித்த நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா (கண்காட்சி) இருந்து வருகிறது.



குறைந்த நாட்களே புத்தகத் திருவிழா நடத்தப்படுவதால், மீண்டும் அந்த திருவிழாவை காண எப்போதும் மனம் ஆவல் கொள்ளும்.

வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை காண, மனம் இப்போதே ஏங்கித் தவிக்கிறது.

இறைவன் விரும்பினால், நிச்சயம் அந்த திருவிழாவை கண்டு ரசிப்பேன்.



புத்தகங்களை வாங்கி வருவேன்.

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: