Sunday, September 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (94)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள் -94


சுற்றுலா முன்னேற்றத்துக்கு மது முக்கியத் தேவையல்ல....!

சுற்றுலாத்துறை வல்லுநர்கள் கருத்து....!!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுக் கொள்கையால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்கு மது ஒரு முக்கியத் தேவையல்ல என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு விடுதி நடத்தும் சிலர், "மது பானங்கள் கிடைப்பதைக் குறைப்பது, ஆரம்பத்தில் சுற்றுலாத் துறையை சற்று பாதிக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளனர்.



ஆனால், தகுந்த விழிப்புணர்வின் மூலம் அந்தத் தாக்கம் குறைந்துவிடும் என்றும், மதுவுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் வெற்றி, கேரளத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து சர்வதேச வான்போக்குவரத்து கூட்டமைப்பு முகவர்களின் இந்தியச் சங்கத்தின் தேசிய இயக்குநர் பி.பி. போஸ் கூறுகையில், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுவின் மீது ஆர்வமாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தங்களது உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் அதை கடைபிடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது மது அருந்துவதற்காக அல்ல என்றும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றைக் காணவே அவர்கள் வருவதாகவும் போஸ் கருத்து கூறியுள்ளார்.

எனவே, மது விற்பனைக்குக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தை சுற்றுலாப் பயணிகள் மதிப்பார்கள் என்றும் பி.பி.போஸ் தெரிவித்துள்ளார்.

மதுவை தடை செய்வதால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் எவ்வளவு பொய்யானது என்பதை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களே மறுத்துள்ளனர்.

சுற்றுலாச் செல்லும் அனைவரும் மதுவை விரும்பி அருந்துவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.




கேரள அரசின் புதிய மதுக் கொள்கை சரியானது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

தமிழகத்திலும் இதுபோன்ற புதிய மதுக் கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் கொண்டு வருவார்கள் என நாம் நம்புகிறோம்.



மதுவால் பெண்களுக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க உறுதியான நடவடிக்கையை, பெண்கள் மீது இரக்கம் காட்டும் முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுப்பார்கள் என நாம் உறுதியாக நினைக்கிறோம்.

மது இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மலருட்டும்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
======================

No comments: