Tuesday, October 13, 2015

கண்டுகொள்ள வேண்டாம்...!

கண்டுகொள்ள வேண்டாம்...!


பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார்.

அது

என் முதுகுக்கு பின்னாடி இந்த ஊர்லே என்ன பேசிக்கிறாங்க என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதற்காக பயப்பட்டா வருத்தப்பட்டா இதுபோன்ற ஒரு வளர்ச்சி எனக்கு கிடைத்திருக்குமா.

இப்படி வசனம் பேசும் கமல்ஹாசன் தம்முடைய முன்னேற்றத்துக்கு தாம் செய்த தியாகங்கள் மற்றும் உழைப்பு அகியவை குறித்து மறைமுகமாக கூறுவார்.

இதேபோன்றுதான் நம்முடைய வாழ்விலும் நம் முதுகுக்கு பின்னால் நம்மைக் குறித்து இல்லாத விஷயங்களை சிலர் விமர்சனம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பாக நமது நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் என நமது வாழ்க்கையுடன் தொடர்புடைய சொந்தங்கள் சிலர் பல இடங்களில் பலரிடம் தேவையே இல்லாமல் நம்மை ஏதாவது குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த தகவல்கள் நமது காதுகளுக்கு எட்டிக் கொண்டே இருக்கின்றன.

இத்தகைய விமர்சனங்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது.

அதற்காக கொஞ்சமும் வருத்தப்படக் கூடாது.

அப்படி வருத்தப்பட்டால் நமது வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது.

மாறாக மன நிம்மதி அமைதி காணாமல் போய்விடும்.

அதேநேரத்தில் நம் மீது உண்மையான அக்கறை கொண்டு நண்பர்கள் உறவினர்கள் நம்மிடம் நேருக்கு நேர் கூறும் விமர்சனங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

அப்படி கவனக்குறைவாக இருந்துவிட்டால் அது பல பிரச்சினைகளை கொண்டு வந்து நிறுத்தி விடும்.

ஆக நமது முதுகிற்கு பின்னால் செய்யப்படும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் அதில் கவனம் செலுத்தாமல் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி அமைதியாக மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: