Thursday, October 13, 2011

கவிஞர் முரளி !

சன் தொலைக்காட்சியில் புதிதாக சேர்ந்தபோது, ஆரம்பத்தில் பல விஷயங்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின.

பல புரியாத புதிர்கள் வியப்படைய செய்தன.

செய்தி தயாரிப்பு பிரிவில் இருந்த ஜாம்பவான்களின் ஒரு குழு, செய்தி ஆசிரியருக்கு இணையாக செயல்பட்டு வந்தது.

பணியில் சேரும் புதியவர்களிடம், இந்த ஜாம்பவான்கள் அதிகம் பேச மாட்டார்கள்.

அவர்களிடம் இருந்து ஒரிரு வார்த்தைகள் மட்டுமே வெளியே வந்து விழும். 

அதிலும்,  அதிகாரத் தோரணை அதிகமாக இருக்கும்.

இதனால் செய்திப்பிரிவில் இருக்கும் இந்த ஜாம்பவான்களிடம் பேச, தயக்கம், கலந்து ஒரு பயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து வந்தது.

ஆனால், ஜாம்பவான்களின் குழுவில் இருந்த நண்பர் முரளி மட்டும்,  இதற்கு விதிவிலக்கு.


செய்தித் தயாரிப்பாளர்.

வழக்குரைஞர்.

கவிஞர்.

நகைச்சுவையாளர்.

என முரளிக்கு  பல முகங்கள் உண்டு.

அவரை நான் எப்போதும் கவிஞர் என்றே அழைப்பது வழக்கம்.

ஜாம்பவான்களின் குழுவிலிருந்து  சற்று விலகி நின்று, அனைத்து பணியாளர்களிடம் முரளி, சகஜமமாக பழகி, நட்பை ஏற்படுத்தி விடுவார்.

ஒவ்வொருவரை குறித்து ஆழமாக அலசி ஆராய்ந்து, சிந்தித்து, எளிய வார்த்தைகளில் ஐந்தாறு வரிகளில்  அழகாக கவிதை எழுதி விடுவார்.

இப்படி, பல திறமைகளை கொண்ட கவிஞர் முரளி,  என்னிடம் எந்த பந்தாவும் காட்டாமல் பழக ஆரம்பித்தார்.

இரவு நேரப்பணிகளின்போதுதான், அவரிடம் அதிகமாக பேச வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, நகைச்சுவையுடன் அவர் சொல்லும் சில ஜோக்குகள், வயிற்றை குலுங்கச் செய்யும்.

உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் என ஆரம்பத்தில் அதிகமாக எழுதியபோது, அதற்கான விஷுவல்களை பார்க்க, தயாரிப்பு அறைக்கு செல்லும்போது, ஜாம்பவான்களின் குழு, என்னை பார்த்து முறைக்கும்போது, கவிஞர் முரளி மட்டும், சார் வாங்க. என்னை விஷுவல் பார்க்கணும் சார் என கேட்டுக் கொண்டே,  பொறுமையாக அனைத்தையும் போட்டு காண்பிப்பார்.

இதனால்,  முரளி மீது எனக்குள் ஒரு மதிப்பு வளர்ந்தது.

அவரை சாதாரண நபர் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரில் பல பன்முகங்கள் மறைந்து இருப்பது, பின்னர் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது.

செய்தி ஆசிரியர்கள், முத்து முத்தாக செய்திகளை எழுதிவிட்டாலும், அதற்கு சரியான விஷுவல் போடாவிட்டால், அந்த செய்தி அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் முரளி ஒரு கில்லாடி.

எந்த இடத்தில், எந்த விஷுவலை போட்டால், செய்திக்கு சரியாக இருக்கும் என்பதை நொடிப்பொழுதில் கணித்துவிட்டு, அற்புதமாக விஷுவலை போடுவதில் அவர் திறமைச்சாலி.

செய்தி தயாரிப்பு அறையில், முரளி பணிபுரியும் விதமே, தனியாக இருக்கும்.

இந்த விஷுவலை இங்கு போடு. அதை அங்கு வை. என சொல்லி எடிட்டர்களிடம் அழகாக வேலை வாங்கி விடுவார் முரளி.

இப்படி, முரளி போட்ட பல விஷுவல்கள், செய்திகள், பின்னர் அனைவராலும் பேசப்பட்டன.

அதில் ஒன்றுதான் சொன்னதும்! செய்ததும்!

ஆரம்பத்திலேயே,  சொன்னதுபோன்று, வழக்குரைஞர், கவிஞர் என பல முகங்களை கொண்ட முரளி,

சிறிது சிறிதாக கவிதைகளை எழுதியபோது, அதனை வாசித்து ரசிக்க முடிந்தது.

கவிஞரே நல்ல ஒரு கவிதையை எடுத்து விடுங்க என இரவு நேரப்பணியின்போது, சக உதவி ஆசிரியர்கள், கேட்கும்போது, அவர் உடனே வரிந்துக் கட்டிக் கொண்டு, கவிதையை வாசிக்கும்போது, நான் வாய் பிளந்து கேட்டு ரசிப்பேன்.

செய்தி அறையில்,  சிறிது நேரம் கவிதை அரங்கம் களைக்கட்டும்.

எல்லோரும் முரளியை பாராட்டும்போது, அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு வெளிவரும்.

அப்போதெல்லாம், அசைந்து அசைந்து நடக்கும் இந்த குள்ள மனிதரா, அழகழகாக கவிதை எழுதுகிறார் என,  எனக்கு வியப்பு ஏற்படும்.

இப்படி, கவிதை மூலம் எங்களுக்குள் நட்பு, மெல்ல மெல்ல வளர்ந்தது.

இப்போது,  முரளியை கவிஞரே என்றே அழைத்து வருகிறேன்.

ஒருநாள் செல்பேசியில் தொடர்பு கொண்ட கவிஞர் முரளி, சார் எங்கே இருக்கீங்க ?  என்றார்.

அறையில்தான் இருக்குகிறேன் என்றபோது, உடனே வருவதாக கூறி, அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்.


சார், உங்களைப் பற்றி ஒரு கவிதையை எழுதி இருக்கிறேன்.  படித்து பாருங்கள் சார் என கூறிப்படி, ஒரு வௌ¢ளை நேர தாளை நீட்டினார்.
அதை வாங்கிப் படித்தபோது,  கவிஞரின் வார்த்தைகள்  மணி மணியாக வந்து விழுந்து இருந்தன.


நபி வழியில்
நில்லாது நடக்கும் நண்பர்தாம் !
ஹலிம் சுவைக்க வைத்த
அப்துல் அஜீஸ்-ன்
அருங்குணம் என்னை எழுத வைத்தது.

எழுத்துலகில் ஒரு நட்சத்திரத்தை
இந்த அகல் விளக்கு
அண்ணார்ந்து பார்த்தது
எண்ணெய் தீரும் வரை
என் எண்ணம் தீரும் வரை !
உள்ளம் உள்ள வரை
என் உயிரும் உள்ளவரை
உன் நட்பு தொடர்ந்திடவே…..

நாம் பழகிய
நாட்களை அசை போடுகிறேன்!
துறை ஒன்றாய்
ஆனாலும்
பிரிவு வேறாய் இருந்ததால்
நெருக்கம் சிறிது குறைவுதான்.

தேயாத சூரியனில்
நாம் உயர்வுக்கு 
தெளிவற்று இருந்த நாட்கள்
நீங்கள் மக்களோடு
அய்க்கியம் ஆன போது,
நான் கலைஞரோடு
கை கோர்த்தேன் !

புண் ஆன மனசு
பண்பட வில்லை.
செம்மைபட சென்ற
இடம் எனக்கு
சிறப்பு சேர்க்கவில்லை.
வளைந்து கொடுக்கா
தன்மையால் நான்
வாழை மரம் ஆனேன்.
வெட்ட வெட்ட
வளர்ந்தாலும்
சூழ்ச்சி புயலில்
வீழ்கின்றேன்.

காசு வந்து சேர்ந்தது
என் கனவு கலைந்து போனது
உம்மை போன்ற
நண்பரை
பார்க்கும் போதுதான்
மனதில்
பசுமை வந்து சேருது.

அதை எழுதும் போது
மனதில் மகிழ்வு ஏறுது
நன்றி மறவா
நாட்கள் தொடர
நட்புக்கு பலமாய்
எழுத்தால்
ஏணி அமைப்போம்

என சிறிய சிறிய வரிகளில், மிக அழகாய் இருந்த கவிஞர் முரளியின் வார்த்தைகள், என் மனதிற்கு மிகவும் பிடித்து போனது.

கவிஞரே மிக அற்புதமாய் கவிதை வடித்து இருக்கிறீர்கள் என பாராட்டு தெரிவித்தேன்.

இப்படி, ஒவ்வொருவரைப் பற்றியும் எளிய நடையில் கவிதை எழுதுவதில் கவிஞர் முரளி ஒரு கில்லாடி பேர்வழி. 

வாணியம்பாடி தொகுதி  எம்.எம்.ஏ.வாக இருந்த அப்துல் பாசித் அவர்களைப் பற்றி முரளி எழுதிய கவிதை, அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பல இளைஞர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிபவர் எழுதிய கவிதை அருமை என பாராட்டு தெரிவித்தனர்.

பாரதியை போன்று கவிஞர்களுக்கு எப்போதும்,  கொஞ்சம் கோபம் அதிகம் என சொல்வது உண்டு.

கவிஞர் முரளிக்கும் கொஞ்சம் அதிகமாகவே வரும்.

அது அநீதியை காணும்போது மட்டும்தான்.

நண்பர்களின் இன்பம், துன்பங்களில் ஓடோடி வந்து பங்கு கொள்வதில் கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.

வழக்குரைஞராக பணி புரிய வேண்டும் என்ற அவரது ஆர்வம் விரைவில் நிறைவேற இருப்பது  மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி.

அவர், வழக்குரைஞராக வலம், வந்தாலும், அவரது கவிதை ஆர்வம் என்றும் குறையாது.

எனவே, எப்போதுமே அவர்,  எனக்கு கவிஞர்தான்.

என்ன கவிஞரே, நான் சொல்வது  சரிதானே!


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

1 comment:

Anonymous said...

கவிஞர்முரளி குறித்த உங்களின் எண்ணங்களை படித்தேன். தம் மனதில் படும் எண்ணங்களை எழுத்து வடிவில் அழகாக கோர்த்து மாலையாக போட்டுள்ளீர்கள். நன்று. நல்ல மனமும், அன்பும் கொண்டவர்கள் எப்போதும் பேசப்படுவார்கள் என்பதற்கு ஒரு சான்று கவிஞர் முரளியுடனான உங்களின் அனுபவங்கள். அன்புடன் பாலமுருகன். தொடர்புக்கு www.saffroninfo.blogspot.com