Tuesday, April 8, 2025

தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2025....!


நூல் மதிப்புரை

நூல்                                     : தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2025

வெளியீடு                          : தினமணி நாளிதழ்

                                                 எக்ஸ்பிரஸ் கார்டன்,

                         29 இரண்டாவது மெயின் ரோட்,

                         அம்பத்தூர் தொழிற்பேட்டை,

                                                 சென்னை - 600 058.

                                                 தொலைபேசி: 044-23457601

விலை                                 :  ரூ.60/-

தமிழக மக்களிடையே தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று நாள்தோறும் வாசிக்கப்படும் நல்ல தரமான தமிழ் நாளிதழாக தினமணி இருந்து வருகிறது. கடந்த 92 ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இல்லாமல் வெளிவந்துகொண்டிருக்கும் தினமணி நாளிதழ், தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி, புதுடெல்லி, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து அச்சிடப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களை சென்று அடைகிறது.  

புகழ்பெற்ற தினமணி நாளிதழ், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இந்தாண்டு ஈகைப் பெருநாள் மலர் 2025 வெளிக்கொண்டுவந்துள்ளது. ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்களின் சீரிய ஆலோசனையை ஏற்று, தோழர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தோழர்கள் அ.சர்ப்ராஸ், சா.ஷேக் அப்துல் காதர், தி.நந்தகுமார் ஆகியோர் மலரை சிறப்பான முறையில்  மலரை தயாரிக்க அதற்கு உறுதுணையாக மலர் வடிவமைப்பாளர் தோழர் இ.காசிவிஸ்வநாதன் அவர்கள் இருந்துள்ளார்.

114 பக்கங்களைக் கொண்ட இந்த தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2025-ல், புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், செ.திவான், ஜி.ஆர்.சுவாமிநாதன், த.ஜமீனா, பேராசிரியர் அ.முகம்மது அப்துல் காதர், பழ.கருப்பையா, முஹம்மது இப்ராஹிம், எம்.ஜி.கே.நிஜாமுதீன், கவிஞர் திரு.வீரபாண்டியன், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மதுக்கூர் இராமலிங்கம், டாக்டர் அ.அப்துல் ஹை ஹஸனி நத்வி, முனைவர் மு.அப்துல் சமது, மகாலெட்சுமி ரமேஷ்பாபு, காஞ்சி அப்துல் ரவூப் பாகவி, எஸ்.என்.முபாரக், நை.முகமது பாரூக், த.லெனின், நாகூர் புதியவன், முனைவர் பா.சங்கரேஸ்வரி, கோம்பை அன்வர், மு.முகமது யூசுப், சையத் இப்ராஹீம், சமூக நேசன் ஆகியோரின் அற்புதமான கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கவிதைகள், சிறுகதைகள் என சிந்தனையை தூண்டும் அற்புதமான படைப்புகளும் மலருக்கு அழகு சேர்க்கின்றன.

குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எழுதியுள்ள "இறைவனின் பாக்கியம் நோன்பு" என்ற கட்டுரையில், இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் குறித்து "தமிழகத்தில் இப்தார் என்னும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் அனைத்து அரசியல் இயக்கங்களும், அனைத்து சமுதாயத்தவரும், அனைத்துச் சமயத்தவரும் பங்கேற்கும் விழாவாக நடத்தப்படுகிறது. இது உண்மையில் சமூக நல்லிணக்க விழாவாக அமைந்திருக்கிறது" என்று அருமையாக தனது சிந்தனைகளை பதித்து, நோன்பு எப்படி மனிதனை நல்வழிப்படுத்துகிறது என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார். 

தற்போது வக்பு வாரியப் பிரச்சினை நாடு முழுவதும் முக்கிய விவாதப் பொருளாக மாறிவிட்ட நிலையில், "வக்ஃப் குறித்து கூறப்படும் ஐயப்பாடுகள் உண்மையானதா?" என்ற தலைப்பில் எம்ஜிகே நிஜாமுதீன் அவர்கள், எழுதியுள்ள கட்டுரையில், வக்ஃப் சொத்து என்றால் என்ன? வக்ஃப் வாரியம் எவ்வாறு அமைக்கப்பட்டது? வக்ஃப் வாரியத்தில் பெண்கள் உறுப்பினர்களாக வர முடியாதா? மதம், கலாசார விஷயங்களில் வக்ஃப்பின் தலையீடு உள்ளது எனக் கூறுவது சரியா? வக்ஃப் சொத்துகள் பொது நிறுவனங்களுக்குப் பயன்படுத்த முடியாதா? என மொத்தம் 11 கேள்விகளுக்கு அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு பக்கமும் சிந்தனைக்கு விருந்து அளிக்கும் சிறந்த தகவல் களஞ்சியமாக தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2025 இருந்து வருகிறது. ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்கள் "தமிழ் மண்ணில் இஸ்லாமியர்களும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் நீண்ட காலமாக சகோதரர்களாக இணைந்து வாழ்கிறார்கள். தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் நம்பிக்கையால் இஸ்லாமியர்களே தவிர, வாழ்க்கை முறையாலும், பண்பாட்டு நடைமுறையாலும் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்தே இருப்பவர்கள். சகோதர, சகோதரிகளாய் பழகும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் இஸ்லாம் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கதில் ஈகைப் பெருநாள் மலர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு இஸ்லாமியரும், இஸ்லாமியர் அல்லாத சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு இந்த மலரை அன்பளிப்பாக வழங்குவதன்மூலம், அவர்களுக்கு இஸ்லாம் குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனவே சிறப்பான முறையில் வெளிவந்துள்ள தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2025-ஐ முஸ்லிம்கள் படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்தால் நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்.

- ஜாவீத்

 

No comments: