"இஸ்லாம் குறித்து பரப்பப்படும் தவறான பிம்பம் - சரி செய்ய அழைப்பு"
உலகில் மிக வேகமாக மக்களை கவர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இப்படி மக்களை கவரும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கும் நிலையிலும் கூட, அந்த அற்புதமான, அமைதியான மார்க்கம் குறித்து தவறான பிம்பம் மிகவும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இஸ்லாமிய நெறிமுறைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளாமல், பலர் இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய அறிஞர்கள் குறித்தும், இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்தும் தவறான கண்ணோட்டத்துடன் இருந்து வருகிறார்கள். இதனால், உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
விமானம், ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்யும்போது, சகப் பயணியான ஒரு முஸ்லிமை, ஒருவித சந்தேகப் பார்வையுடன் பார்க்கும் ஒரு போக்கு பொதுவாக பிற மக்களிடையே இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்லாம் குறித்து பரப்பப்படும் தவறான பிம்பமேயாகும். இந்த தவறான பிம்பத்தை சரி செய்தால், இஸ்லாம் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும், அவர்கள் மனித சமுதாயத்திற்கு ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் குறித்தும் உலக மக்களின் பார்வைக்கு சரியான செய்திகள், தகவல்கள் நிச்சயம் செல்லும். இதன்மூலம் சகோதர சமுதாயம் மத்தியில் இஸ்லாமியப் பார்வை மேலும் விரிவு அடைந்து நல்ல புரிதல் உருவாகும்.
சரி செய்ய அழைப்பு:
இத்தகைய சூழ்நிலையில், கத்தாரின் தோஹாவின் புனித ரமளான் மாதத்தில் இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் மஸ்ஜித்தில், இஸ்லாமிய அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் சார்பில், 'வா அமென்ஹும் மெய்ன் கவ்ஃப்' (அவர்களை பயத்திலிருந்து பாதுகாக்கவும்) என்ற நான்கு நாள் மாநாடு நடைபெற்றது.
இந்த நான்கு நாள் மாநாட்டில், முஸ்லிம்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதுடன்,, தவறான கருத்துக்களை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களைக் கொண்ட குழுவும் ஒன்றிணைக்கப்பட்டது.
மாநாட்டில் பேசிய கத்தார் பல்கலைக்கழகத்தின் ஷரியா மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் கல்லூரியின் தலைவர் டாக்டர் இப்ராஹிம் அல்-அன்சாரி, ஆய்வுகள், விரிவுரைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் இஸ்லாமிய உலகம் பற்றிய எதிர்மறையான ஸ்டீரியோடைப்களை வலுப்படுத்தவும், இந்த ஊடகங்களில் இஸ்லாத்தின் எந்தவொரு நேர்மறையான படங்களையும் தடுக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், இஸ்லாத்தின் தவறான பிம்பத்தை சரிசெய்வதையும், வெறுப்பு என்ற நிகழ்வின் வேர்களையும் காரணங்களையும் ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்ட இஸ்லாமிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை டாக்டர் அல்-அன்சாரி வலியுறுத்தினார். இஸ்லாமிய வெறுப்பு தொடர்பான விரிவான பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் மதிப்புமிக்க மேற்கத்திய பல்கலைக்கழகங்களுடன் கூட்டு ஆய்வுகளைத் தயாரிக்கவும், இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராட மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் கல்வித் துறைகளை நிறுவவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம்:
சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அலி அல்-கராடகி, இஸ்லாமிய வெறுப்பு மத, விரிவாக்க, பொருளாதார, சமூக மற்றும் அறிவுசார் வேர்களைக் கொண்டுள்ளது என்று கூறினார். மேலும், இந்த நிகழ்வைப் பற்றி விவாதிக்கும் புனித குர்ஆனின் பல வசனங்களை மேற்கோள் காட்டினார்.
இதேபோன்று பேசிய லெபனான் மார்க்க அறிஞர், டாக்டர் பிலால் பரூடி, இஸ்லாத்தை அதன் கேட்போரின் ஆன்மாக்களில் குழப்பும் ஒவ்வொரு அறியாமை விளக்கத்தையும் அழிப்பதன் மூலம் இஸ்லாமிய மகிமையை மீட்டெடுக்கும் பொறுப்பு முஸ்லிம் அறிஞர்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் இசாம் அல்-பஷீர், ஓரியண்டலிசம் இஸ்லாத்தை சிதைத்து, இஸ்லாமிய வெறுப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது என்று கூறினார். மேலும், மேற்கத்திய விழுமியங்களின் சரிவையும், மதத்தைக் கையாளும் போது அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையையும் அவர் கடுமையாக சாடினார்.
முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளை ஐ.நா.விடம் முன்வைக்கும்போது பெரும் சக்திகளின் நிராகரிப்பு மற்றும் பிடிவாதத்தை மேற்கோள் காட்டிய அவர், முஸ்லிம்கள் சந்திக்கும் சர்வதேசப் பிரச்சினைளுக்கு ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கல்வி, ஊடகம் மூலம் பணிகள்:
இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை சரிசெய்ய கல்வி, ஊடகம் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மிகவும் அவசியம் என இந்த மாநாட்டில் பேசிய அனைவரும் வலியுறுத்தினார்கள். இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வியின் அவசியம், ஊடகங்களை சரியான முறையில் கையாளுதல், மற்றும் அவ்வவ்போது எழும் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர முயற்சிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டால், இஸ்லாம் குறித்த தவறான பிம்பம் நிச்சயம் களையப்படும் என்றும் மாநாட்டில் பேசிய அறிஞர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்காக முஸ்லிம் உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் இஸ்லாமிய போதனைகள் பற்றிய மிகவும் துல்லியமான மற்றும் சமநிலையான புரிதலை வளர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment